பிரான்ஸ் மேயர் வேட்பாளரின் ஆபாச காணொளியை வெளியிட்டவர் கைது - நடந்தது இதுதான் மற்றும் பிற செய்திகள்

அரசியல்வாதியின் ஆபாச காணொளியை வெளியிட்டவர் கைது - நடந்தது இதுதான்

பாரிஸ் மேயர் வேட்பாளரான பெஞ்சமின் இடம் பெற்றிருந்த ஆபாச காணொளியை வெளியிட்ட ரஷ்ய கலைஞர் பீட்டரை கைது செய்தது பிரான்ஸ் போலீஸ்.

பாரிஸ் நகர மேயர் வேட்பாளராகக் களம் நின்றார் பெஞ்சமின். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான இவர் உடலுறவு கொள்ளும் காட்சி வைரலாக பரவியது.

இதனை அடுத்து அவரது அரசியல் வாழ்வு கேள்விக் குறியானது. ரஷ்யாவிலிருந்து வந்து பிரான்ஸில் தஞ்சம் புகுந்துள்ள பீட்டர் என்பவர் இந்த காணொளியைப் பதிவேற்றினார். அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனைப் பதிவேற்றினேன் என்று அவர் கூறினார்.

ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் எதிர்க்கட்சிகளிடமிருந்து கூட பெஞ்சமினுக்கு ஆதரவு வந்தது. வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் ஆகிய இருதரப்பும் பெஞ்சமினுக்கு சாதகமான கருத்தையே வெளியிட்டுள்ளனர்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி இணையத்தில் பரப்பலாம்? என எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பின. இப்படியான சூழலில் பீட்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த காணொளியை வெளியிட்டதற்காக பீட்டர் கைது செய்யப்படவில்லை. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி பாரிஸில் ஆயுதங்கள் கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரான்ஸ் நீதித்துறை கூறுகிறது.

"ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களை அமித் ஷா சந்திக்கும் திட்டம் இல்லை" - உள்துறை அமைச்சகம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஷாஹீன்பாகில் போராட்டம் நடத்தி வருபவர்கள் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று (பிப்ரவரி 16) சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், அதுபோன்ற எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

உள்துறை அமைச்சர் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக நேற்று (சனிக்கிழமை) நடந்த செய்தியாளர் சந்திப்பில் போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் - 'அரசை எதிர்ப்பது தேச துரோகம் அல்ல'

அரசை எதிர்ப்பதை 'தேச துரோகம்' என்றும் 'ஜனநாயக எதிர்ப்பு' என்றும் முத்திரை குத்துவது 'அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் சுதந்திரம் மிக்க ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கங்களின் இதயத்தின் மீதான தாக்குதல்' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

ஆசியாவுக்கு வெளியே முதல் கொரோனா வைரஸ் மரணம்

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன நாட்டவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆசிய நாடுகளுக்கு வெளியே நிகழும் முதல் மரணம் இதுவாகும்.

'கம்பாலா': வேகத்தில் உசைன் போல்டை விஞ்சினாரா ஸ்ரீநிவாச கௌடா?

எருமை பந்தயத்தில் அதிவேகமாக ஓடி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர், ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிட்டு புகழப்பட்டு வருகிறார்.

கர்நாடகாவில் மிகவும் பிரபலமான 'கம்பாலா' என்று அழைக்கப்படும் எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: