அரவிந்த் கேஜ்ரிவால்: டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்பு

டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும், முந்தைய டெல்லி அரசில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுமான மனிஷ் சிசோடியா உள்ளிட்ட சிலரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பொது மக்களிடம் உரையாற்றிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "தேர்தல்கள் முடிந்துவிட்டன. நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது முக்கியமல்ல, இப்போது டெல்லி மக்கள் அனைவரும் எனது குடும்பம். கட்சி, மதம், சாதி அல்லது எந்தவொரு வேறுபாடுமின்றி அனைவருக்காகவும் நான் பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

கடந்த எட்டாம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெற்றது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது.

இந்நிலையில் டெல்லி மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (பிப்ரவரி 16-ம் தேதி) காலை 11 மணியளவில் பதவி ஏற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வருமாறு டெல்லி மக்களுக்கு கேஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமாக நடந்த முடிவெடுத்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், பல்வேறு துறைகளில் பணியாற்றுவோரை மேடையில் அமர வைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கூட அழைப்பு விடுக்காத அரவிந்த் கேஜ்ரிவால், 'பேபி மப்ளர் மேனு'க்கு அழைப்பு விடுத்தது வியப்பை ஏற்படுத்தியது.

யார் இந்த 'பேபி மப்ளர் மேன்'?

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திக்க ஒன்றரை வயதுக் குழந்தையை கேஜ்ரிவால் போன்று தலையில் மப்ளர் அணிந்து, மீசை வரைந்து சிறிய கண்ணாடி அணிவித்து அழைத்து வந்திருந்தனர். அவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மோதிக்கு அழைப்பு

அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்கும் விழாவில் பங்கேற்கப் பிரதமர் மோதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில், அழைப்புக் கடிதம் பிரமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: