ஜோக்கர் முதல் 1917 வரை - ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 5 திரைப்படங்கள் எவை?

அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விருதுப் பட்டியலில் அதிக அளவில் விருது வாங்கிய திரைப்படங்களின் பட்டியல் இதோ!

ஜோக்கர் :

ஸ்டாண்ட் அப் காமெடியனாக மக்களை மகிழ்விக்க நினைக்கும் ஒருவனை இந்தச் சமூகம் உதாசினப்படுத்தி அவனை கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக மாற்றுகிறது. இதுவே `ஜோக்கர்` படத்தின் கதை.

இந்தத் திரைப்படத்திற்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளது. ஜோக்கரில் நாயகனாக நடித்த வாக்கீன் பீனிக்ஸூக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. நான்காவது முறையாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட இவர் முதன்முறையாக விருது வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்காக வாக்கீன் பீனிக்ஸ் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதையும் இந்தப் படம் பெற்றுள்ளது.

பாராசைட் :

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பம் உயர்தர வர்க்கத்து குடும்பத்துடன் சேர்ந்து பயணிக்கும் போது என்ன மாதிரியான ஏழை - பணக்காரன் பிளவு ஏற்படுகிறது என்பதை இயல்பாய் அரசியல் சூட்சமங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படம் தான் இந்த 'பாராசைட்'.

இந்தத் திரைப்படம் நிச்சயம் ஆஸ்கர் விருது வாங்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்றும் ஏமாற்றம் அளிக்காமல் நான்கு விருதுகளை பெற்றுக் கொடுத்துள்ளது 'பாராசைட்' திரைப்படம். 92 ஆண்டுகால ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெறும் முதல் ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக பாராசைட் தேர்வாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தை இயக்கிய போங் ஜோன் ஹோ சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை பெற்றிருக்கிறார். சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சர்வதேச அளவில் சிறந்த திரைப்படம் போன்ற பிரிவுகளில் இந்தப் படம் விருதுக்கு தேர்வாகியுள்ளது.

1917 :

முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த இரண்டு இளம் வீரர்கள் மற்றப் பகுதிகளில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு போர் சார்ந்த முக்கிய செய்திகளைக் கொண்டு செல்கின்றனர். அப்படி செல்லும் வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி கூறும் திரைப்படம் '1917'.

இந்தத் திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷூவல் எபெக்ட் உட்பட ஏழு பாஃப்டா விருதுகளையும், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோஃப் விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தத் திரைப்படம் சிறந்த கிராஃபிக்ஸ் மற்றும் சிறந்த ஒலிக்கலவைக்கான ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

ஃபோர்ட் Vs ஃபெராரி :

பிரபல கார் நிறுவனங்களான ஃபோர்ட் மற்றும் ஃபெராரி நிறுவனங்களுக்கிடையே நடைபெற்ற கார் பந்தய போரை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் தான் இந்த 'ஃபோர்ட் Vs ஃபெராரி.

சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலி எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதை இந்தத் திரைப்படம் பெற்றிருக்கிறது.

Once Upon A Time In Hollywood:

ஹாலிவுட்டின் பொற்காலம் எனக் கருதப்படும் 1960களின் பிற்பகுதியில் நடக்கிறது இந்தப் படத்தின் கதை. கொலைச் சம்பவங்களால் ஏற்பட்ட கருப்பு பக்கங்களை சினிமா நடையில் சரிசெய்து மாற்றி எழுதியிருக்கும் திரைப்படம் தான் இந்த 'ஒன்ஸ் அப்பான் ய டைம் இன் ஹாலிவுட்'.

இந்தப் படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை நடிகர் பிராட் பிட் வென்றிருக்கிறார். நடிப்புப் பிரிவிற்காக பிராட் பிட் வெல்லும் முதல் ஆஸ்கர் விருது இதுவாகும். இதற்கு முன்னதாக பிராட் பிட் தயாரித்த '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' திரைப்படத்திற்காக சிறந்த படத் தயாரிப்பாளருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த தயாரிப்பிற்கான ஆஸ்கர் விருதையும் இந்தத் திரைப்படம் பெற்றிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: