You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? இவர் ஆற்றிய தொண்டு என்ன?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தை சேர்ந்த 94 வயது சமூக போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. யார் இவர்? இவர் தமிழக மக்களுக்கு ஆற்றிய பங்குதான் என்ன?
காந்தி, வினோபா பாவே என பெருந்தலைவர்களோடு பயணித்து, நிலமற்ற மக்களுக்கு நிலம் வாங்கி தந்த கிருஷ்ணம்மாளின் நீண்ட நெடிய விருது பட்டியலில் இப்போது இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷனும் சேர்ந்துள்ளது.
பதின்பருவத்தில் தொடங்கிய அவரது போராட்டம், காலங்கள் கடந்தும் அதே வீரியத்தோடு பயணிக்கிறது. குடிசையில் வசிக்கும் எண்ணற்ற குடும்பங்களின் நிலை, அவர்களை முன்னேற்ற என்ன செய்யலாம் என்பது தொடர்பான உரையாடல் இல்லாமல் யாரும் அவரிடம் இருந்து விடைபெற முடியாது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட, கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கும், குடிசை வீடுகளில் சிரமப்படும் பெண்களின் நிலைமையை சரிசெய்ய என்ன திட்டங்களை வைத்துள்ளார் என்பது குறித்து பேசினார். 1950களில் சுதந்திர போராட்ட வீரர் வினோபா பாவே தொடங்கிய பூமிதான இயக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை இன்றும் பின்பற்றுபவர்.
"மனிதனுக்கு வீடு அவசியம்"
''தன்மானத்தோடு வாழ்வதற்கு ஒரு மனிதனுக்கு வீடு அவசியம். ஒரு தரமான வீடு இருந்தால், அவனது வாழ்க்கையில் பாதி சிரமங்களை குறைத்துவிடலாம். நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் மக்களுக்கு ஒரு காணி நிலம்கூட சொந்தமில்லாமல் இருப்பது சாபக்கேடு,'' என வீடில்லா மக்களின் வலியை பற்றிய உரையாடலில் என்னிடம் பேசினார்.
கணவர் ஜெகநாதனோடு அவர் தொடங்கிய எண்ணற்ற சமூக பணிகளில் மிக முக்கியமான ஒன்று லாபிட்டி(Land for the Tillers' Freedom). உழுபவனுக்கு நிலம் சொந்தம், என்பதை கொள்கையாகக் கொண்ட அமைப்பு லாபிட்டி. நாகப்பட்டினத்தில், கீழ்வெண்மணி கிராமத்தில், நில உரிமையாளர்களால், 44 தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் அவர் மனதை அதிகம் பாதித்தது. இந்த பாதிப்பின் விளைவாக உருவானதுதான் லாபிட்டி.
நில உரிமையாளர்களிடம் பேசி, குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று, வங்கிக்கடன் அல்லது நன்கொடை மூலமாக வாங்கி நிலமற்ற உழைப்பாளிக்குக் கொடுக்கும் இயக்கமாகச் செயல்பட்டது லாபிட்டி. நிலத்தை வாங்கும் ஏழை உழைப்பாளி, குறைந்த வட்டியை வங்கியில் செலுத்தி, நிலத்தை சொந்தமாக்கிக்கொள்வார்.
இந்தமுறையில், 1982 முதல் 1986 வரை சுமார் 175 நிலச்சுவான்தார்களிடம் இருந்து 5,000 ஏக்கர் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி 5,000 குடும்பங்களுக்கு அளித்தவர். 1981ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 19 கிராமங்களில், 1112 ஏக்கர் நிலத்தை, வங்கிக்கடனில் பெற்று, 1112 குடும்பங்களுக்குப் பிரித்துக்கொடுத்தார்.
வட்டியை செலுத்திய மக்கள் அனைவரும், முதல் தலைமுறையாக தங்களுக்கென ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக இருப்பதை நன்றியோடு இன்றும் நினைவுகூருகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: