You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: “தேவைப்பட்டால் ரஜினியை விசாரணைக்கு அழைப்போம்“- ஒருநபர் ஆணையம்
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஒரு நபர் ஆணையத்தின் 18வது கட்ட விசாரணை கடந்த 21ம் தேதி தொடங்கி இன்று (சனிக்கிழமை) மதியம் வரை நடைபெற்றது.
445 சாட்சிகள்
விசாரணையின் இறுதியில் வழக்கறிஞர் வடிவேல் முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "18 ஆம் கட்ட விசாரணை கடந்த 22ம் தேதி தொடங்கி இன்றுவரை நடந்து முடிந்துள்ளது. இதில் 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர்."
"இதுவரை 630 ஆவணங்கள் ஆராயப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு பத்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். 18-வது கட்ட விசாரணையில் அதிகமாக ஒளிப்பதிவாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போராட்டம் நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
மேலும் அவர், "இந்த விசாரணையில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தாக்கல் செய்துள்ள 125 பக்க பிரமாண பத்திரம் ஐந்து பகுதிகளாக உள்ளது. எனவே அவரை அடுத்த கட்ட விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளோம். அவர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை போலீஸ் விசாரணை நடத்திய பின்பே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் அதனுடைய நகல் காவல் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பாத்திமா பாபுவும் அடுத்த கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்."
நிவாரண நிதி
"துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில பேருக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண நிதி பரிசீலனையில் உள்ளது. அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது எங்கெங்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன என்பது குறித்து விபரம் கேட்கப்பட்டுள்ளது. அது குறித்து விவரம் வந்தவுடன் அது தொடர்பான விசாரணைகள் நடைபெறும்.
துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முந்தைய ஒரு வார காலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்ய உள்ளோம். அது கிடைக்கப் பெற்றவுடன் அது தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெறும்.
இதற்கு அடுத்த கட்ட விசாரணையில் போலீஸ் அதிகாரிகள், ஸ்டெர்லைட் குடியிருப்பு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் ஆகியோரை விசாரிக்க உள்ளோம். தடயவியல் வல்லுநர்கள், மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போன்றோரும் விசாரிக்கப்பட உள்ளனர்." என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்திடம் விசாரணை
மேலும் அவர், "நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கிச்சூடு தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஒரு சில செய்திகளை கூறி உள்ளதாக இங்கு சாட்சிகளாக ஆஜரானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளனர். எனவே தேவைப்படும் நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்.
தேவைப்பட்டால் அடுத்தகட்ட விசாரணையின் போது கூட நடிகர் ரஜினிகாந்தை ஆஜராவதற்கு அழைக்கலாம். ஆணையத்தை பொறுத்தவரையில் ராகுல் காந்தியை அழைத்து விசாரிக்க தேவையில்லை என நினைக்கிறோம்." என்றார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைகள் கூட தகுதிக்கேற்ற வேலை இல்லை என வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம் என்றார் வழக்கறிஞர் வடிவேல் முருகன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: