தர்பார்: ரஜினி அரசியல் நுழைவுக்கு கட்டியம் கூறும் படமா?

ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் நாளை வெளியாகிறது. அரசியலில் இறங்கும் தமது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவ்வப்போது அரசியல் கருத்துகளை ரஜினி வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் படம் கவனிக்கப்படுகிறது.

ஆனாலும் இவ்வளவு அதிக கவனத்தை இந்தத் திரைப்படம் பெறுவதன் பின்னணி என்ன?

இயக்குநர் சர்ச்சை

'தீனா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். 'சர்கார்' படத்திற்கு பிறகு இவர் இயக்கி வெளியாக இருக்கின்ற திரைப்படம் 'தர்பார்'.

'சர்கார்' படத்தில் அரசின் நலத்திட்டங்கள் விமர்சிக்கப்பட்டதாலும், ஜெயலலிதாவின் இயற்பெயரை வரலட்சுமி கதாபாத்திரத்திற்கு வைத்ததாலும் அதிமுகவினர் 'சர்கார்' படம் வெளியான திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தினர்.

காவல்துறையினர் தன்னை எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்ய நேரிடும் என்கிற நோக்கில் ஏஆர் முருகதாஸ் முன் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், 'அரசுத்திட்டங்களை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இனிமேல் தான் இயக்குகிற திரைப்படத்தில் அரசை விமர்சித்து எந்தக் காட்சிகளையும் அமைக்க மாட்டேன் என்றும் உறுதியளிக்குமாறு கூறினார்.

ஆனால், 'படத்தில் காட்சிகளை அமைப்பது எனது சுதந்திரம் எனவும், மன்னிப்பு கேட்பது என்பது என்னுடைய கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் கூறி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் அவருக்கு முன் ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் சர்கார் படம் வெளியான போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது வெளியாக இருக்கின்ற ஏ.ஆர் முருகதாஸின் 'தர்பார்' படம் நேரடியாக அரசை விமர்சிக்குமா. சர்கார் படத்தைப் போன்றதொரு சர்ச்சை இந்தப் படத்திற்கும் ஏற்படுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினி அரசியல்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக கூறி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் பேசிய பல விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோவா திரைப்பட விழாவில் விருது வாங்கிவிட்டு திரும்பும்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் பேட்டியளித்த போது, ' 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவிகிதம் அதிசயம் நிகழ்த்துவார்கள்' எனக் கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் தர்பார் பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், ' ரஜினிகாந்த் என்கிற பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு சூட்ட வேண்டும் என இயக்குநர் பாலச்சந்தர் விரும்பி நம்பிக்கையோடு அந்தப் பெயரை எனக்கு சூட்டினார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அதே போன்று தமிழக மக்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வீண் போகாது என்று கூறினார். இந்தப் படம் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்குமா என்கிற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

'காவல்துறை' கதாபாத்திரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த சமயத்தில், சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை கண்டித்து அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தினர். போட்டி நாள் அன்று போராட்டம் தீவிரமடைய போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். அந்த தடியடியின் போது போலீஸ்காரர் ஒருவரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து ரஜினிகாந்த், 'சீருடையில் இருந்த காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது நாட்டுக்கே பேராபத்து. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்' என கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த 'மூன்றுமுகம்' திரைப்படம் பேசப்பட்டது. அதே போன்று இந்தக் கதாபாத்திரமும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

''அவரோட ஸ்டைலும்... பேச்சும்''

அண்மையில் நடந்த தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் பேசிய காணொளி கிளப் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது.

எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் திரையுலகத்திற்கு வந்த ரஜினிகாந்த், தனது ஆரம்பக்கால நாட்களை அந்த காணொளியில் நினைவுகூர்வார்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக கால்பதித்த சம்பவத்தை சுவாரஸ்யமாக நினைவு கூர்ந்த அவர், ஆரம்ப நாட்களில் தான் காயப்பட்ட ஒரு சம்பவத்தை எடுத்துரைத்தார்.

''எந்த சாலையில் நான் நடந்தே சென்றேனோ, அதே சாலையில் காரில், அதுவும் வெளிநாட்டு காரில் போகவேண்டும் என்று வைராக்கியம் கொண்டேன். அப்படியே சில ஆண்டுகளில் நடந்தது. அதுவும் வெளிநாட்டு காரில்...அப்போது அதை ஓட்ட வெளிநாட்டு ஓட்டுநரை நியமிக்க வேண்டும் என்று விரும்பினேன்'' என்று ரஜினிகாந்த் தனது பிரத்யேக பாணியிலும் எடுத்துரைத்தது ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.

இந்த காணொளியை பார்த்த பலரும், அவரது ஸ்டைல் மற்றும் பேச்சு ஆகியவை இன்னமும் அப்படியே உள்ளதாக சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட நிலையில், தர்பார் திரைப்படத்திலும் அதனை ரசிகர்கள் எதிர்ப்பார்க்க வாய்ப்புள்ளது.

ஜப்பானிலிருந்து சென்னைக்கு

ஜப்பானில் இருந்து ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக யசுதா என்பவர் அவருடைய மனைவி ஷாட் சூஷ்க்கியுடன் தர்பார் படத்தின் முதல் காட்சியை காண்பதற்காக சென்னை வந்துள்ளார்.

பாபா படம் பார்ப்பதற்காக அவர் முதன்முதலாக சென்னை வந்திருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட பத்து முறை முதல் காட்சியை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

தமிழக அரசியல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றாலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார் இந்த ஜப்பானிய ரசிகர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: