You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்
டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தேதிக்கு முன்னதாக குற்றவாளிகள் கருணை மனு மற்றும் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.
"எனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது. குற்றவாளிகள் நான்கு பேரை தூக்கில் போடுவது மூலம் இந்த நாட்டில் உள்ள பெண்கள் வலிமை பெறுவார்கள். இந்த தீர்ப்பு நீதித்துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அதிகரிக்கும்." என நிர்பயாவின் தாயார் தெரிவித்தார்.
முன்னதாக குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நான்காவது மற்றும் கடைசி மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
நடந்தது என்ன?
- கடந்த டிசம்பர் 2012 ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சம்பவத்தில் அவருடைய நண்பரும் தாக்கப்பட்டார்.
- மிகவும் மோசமாக காயமடைந்த அம்மாணவியை சாலையோரம் அக்கும்பல் தூக்கி எறிந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, 13 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.
நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை
2012 டிசம்பர் 16: டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.
2012 டிசம்பர் 17: முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
2012 டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.
2013 மார்ச் 11: முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2013 ஆகஸ்டு 31: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.
2013 செப்டம்பர் 13: இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2014 மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
2014 மே-ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
2017 மே: டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
"சீராய்வு மனு தாக்கல் செய்வோம்"
"ஒன்றிரண்டு நாளில் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம். ஐந்து மூத்த நீதிபதிகள் அதனை விசாரிப்பர். இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் நெருக்கடி இருந்துக் கொண்டே வருகிறது. இந்த வழக்கில் சார்பற்ற விசாரணையை மேற்கொள்ள முடியாது," என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: