இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி- இந்திய அணி வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி, பகலிரவு ஆட்டமாக இந்தோரின் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. அஸ்ஸாமில் நடைபெற்ற முதல் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டதினால், இரண்டாவது போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியினர் இலங்கை அணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதன் காரணமாக அதிக ரன்கள் குவிக்க முடியாமல், அடுத்தடுத்து இலங்கை அணியினர் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 142 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் பெரேரா அதிகபட்சமாக 34 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் பந்துவீச்சாளர் தாக்குர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல், 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவனும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணி 17.3 ஓவர்களிலே, 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: