கோலி Vs தோனி, அஜித் Vs விஜய் - ஃபோர்ப்ஸ் பட்டியலில் முன்னிலையில் இருப்பது யார்?

ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் 2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 100 பிரபலங்களின் பட்டியல் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ள ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம், பிரபலங்களின் வருவாயை கணக்கில் கொண்டும், சமூக ஊடகம் மற்றும் அச்சு ஊடகங்களில் பிரபலங்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்தும் இதனை கணக்கிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியலை தயாரித்துள்ளதாகவும் போர்ப்ஸ் இந்தியா கூறுகிறது.

சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு பிரபலங்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள், சமையல் வல்லுநர்கள் உள்ளிட்டவர்களின் இருந்து 100 பேரை வரிசைப்படுத்தியுள்ளது. அதில் டாப் 10 நபர்களை தற்போது பார்க்கலாம்.

கடந்த 2018-ம் ஆண்டு பிரபலங்கள் பட்டியலில் நான்காமிடத்தில் இருந்த தீபிகா படுகோனே 2019-ம் ஆண்டு பத்தாவது இடத்துக்கு சரிந்திருக்கிறார். அவரது வருமானம் 48 கோடி ருபாய்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று பல ஆண்டுகளாகிவிட்டபோதும் இன்னமும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். அவரது முதலீடுகள் மீதான வருமானம் மற்றும் விளம்பர வருவாய் அடிப்படையில் ஆண்டுக்கு 76 கோடி ருபாய் சம்பாதிக்கிறார். ஃபோர்ப்ஸ் இவருக்கு பிரபலங்கள் பட்டியலில் ஒன்பதாவது இடம் கொடுத்துள்ளது.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் டாப் பெண் பிரபலமாக இருப்பது அலியா பட் தான். அவரது வருமானம் 59 கோடி ரூபாய். சமூக ஊடகங்களில் மிகுந்த செல்வாக்கு நபராக விளங்குகிறார் எனக்கூறி அவருக்கு எட்டாவது இடம் தந்துள்ளது ஃபோர்ப்ஸ் நிறுவனம்.

கல்லிபாய் படத்தின் வெற்றி மற்றும் விளம்பரங்கள் மூலம் பிரபலங்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் இடம்பெற்றிருக்கிறார் ரன்வீர் சிங்.

ஷாருக்கான் 2018-ம் ஆண்டு 13-ம் இடத்தில் இருந்தார். தற்போது அவர் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி 2018-ம் ஆண்டை போலவே 2019-ம் ஆண்டிலும் பிரபலங்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். விளம்பரங்களில் நடிப்பது அவருக்கு கை கொடுத்திருக்கிறது. இவர் சுமார் 136 கோடி ரூபாய் சம்பாதித்துளார்.

'கோன் பனேகா குரோர்பதி' எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் அமிதாப் பச்சன் 2019-ல் 239 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார். அவருக்கு பிரபலங்கள் பட்டியலில் நான்காமிடம் கொடுத்திருக்கிறது ஃபோர்ப்ஸ்.

மூன்றாவது இடத்தில் நடிகர் சல்மான் கான் இருக்கிறார். அவரது வருமானம் 229 கோடி ரூபாய்.

இதில் வருவாய் அடிப்படையில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். 2019-ம் ஆண்டு இவரது வருமானம் 293 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் நிறுவனம். ஆனால் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் இவருக்கு இரண்டாமிடம் கொடுத்துள்ளது ஃபோர்ப்ஸ்.

முதலிடத்தில் இருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவரது ஆண்டு வருமானம் 252 கோடி ருபாய்.

அடுத்ததாக தமிழ் சினிமா பிரபலங்கள் யார் யார் இந்த பட்டியலில் உள்ளனர் என பார்ப்போம்.

தமிழ் சினிமா நடிகர்களை பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த் நூறு கோடி ரூபாய் வருமானத்துடன் பிரபலங்கள் பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளார்.

நடிகர் விஜய் 2018-ம் ஆண்டு 26-வது இடத்தில் இருந்தார். அவர் 2019-ம் ஆண்டில் 47-வது இடத்துக்கு சரிந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பின் தமிழ் திரைத்துறையில் அதிக வருமானம் ஈட்டும் நபராக விஜய் இருக்கிறார். அதில் எந்த சந்தேகமுமில்லை என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. அவரது வருமானம் 30 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளது.

நடிகர் அஜீத்துக்கு 2018-ம் ஆண்டு பிரபலங்கள் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை இம்முறை அவருக்கு 52-வது இடம் கொடுத்திருக்கிறது ஃபோர்ப்ஸ். அவரது வருமானம் சுமார் 40 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளது.

முன்னணி இயக்குநராக விளங்கும் ஷங்கர் 31.5 கோடி ரூபாய் வருமானத்துடன் 55-வது இடம் பிடித்திருக்கிறார். இந்திய அளவில் இயக்குனர்களில் டாப் பிரபலமாக ஷங்கரை கூறுகிறது ஃபோர்ப்ஸ் இந்தியா.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக மட்டுமின்றி தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கும் கமல்ஹாசன் ஷங்கருக்கு அடுத்த இடம் பிடித்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் 2019-ம் ஆண்டில் 31.75 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள ஃபோர்ப்ஸ் நிறுவனம், பிரபலங்கள் பட்டியலில் 64-வது இடம் கொடுத்துள்ளது.

விசுவாசம் திரைப்படத்தை இயக்கிய சிவா ஃபோர்ப்ஸ் பட்டியலில் 80வது இடம் பிடித்துள்ளார்.

டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் 'பேட்ட' படத்தின் வெற்றி காரணமாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுக்கு 84-வது இடம் தந்துள்ளது ஃபோர்ப்ஸ்.

சில சுவாரஸ்ய தகவல்கள்

பாலிவுட்டில் கலங்க், சிச்சோரே படங்களுக்கு இசையமைத்த பிரீத்தம் அதிகம் வருமானம் பெற்ற இசை அமைப்பாளராக உருவெடுத்தார். 2019-ம் ஆண்டில் அவரது வருமானம் 97 கோடி ரூபாய். ஏ.ஆர்.ரகுமானை வருவாய் ரீதியில் மிஞ்சியுள்ளார்.

ஆனால் பிரபலங்கள் பட்டியலில் ரகுமான் முன்னணியில் இருக்கிறார். அவர் 16-வது இடம் பிடித்திருக்கிறார். பிரீத்தம் 17-வது இடத்தில் உள்ளார்.

ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே இந்த ஆண்டில் கவர்ச்சி நடனம் ஆடிய சன்னி லியோன் பிரபலங்கள் பட்டியலில் 48-வது இடம் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் சஞ்சீவ் கபூர் உள்ளிட்ட ஐந்து சமையல் நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் ஒரே ஆண்டில் 23-வது இடத்தில் இருந்து 11-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார் ரோகித் ஷர்மா.

நடிகை பிரியங்கா சோப்ரா 14-வது இடத்தில் உள்ளார். ஆமீர்கானுக்கு 15-வது இடம் கிடைத்திருக்கிறது.

பிரபலங்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர்களில் கோலி, தோனி, சச்சின், ரோகித் ஆகியோருக்கு அடுத்தபடியாக ரிஷப்பந்த் உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :