ரஜினிகாந்துக்கு அமிதாப் பச்சன் ஏன் அரசியல் ஆலோசனை சொன்னார் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
அமிதாப் பச்சன் தமக்கு மூன்று ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார் என்று ரஜினிகாந்த் தர்பார் பாடல் வெளியீட்டு விழாவில் பேசி இருக்கிறார்.
"உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும்.எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அரசியலில் நுழையக் கூடாது," இவைதான் அந்த மூன்று ஆலோசனைகளாம்.
தம்மால் இரண்டை மட்டுமே கடைப்பிடிக்க முடிந்தது. மூன்றாவதைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்றார் ரஜினி.
இந்த மூன்று ஆலோசனைகளையும் தம் வாழ்க்கையிலிருந்து எடுத்துத்தான் அமிதாப் கூறி இருக்கிறார்.
அமிதாப் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அண்மையில்கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
1980களில் கூலி படப்பிடிப்பில் அவருக்குக் காயம் ஏற்பட்டது, அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது ஹெபாடிடிஸ்-பி தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாகக் கல்லீரல் பிரச்சனையால் அவதியுற்றார்.
குளிர்பானங்கள் குடிக்காதீர்கள். அது உடல்நலத்திற்கு கேடு. இதன் காரணமாகத்தான் குளிர்பான விளம்பரங்களில் நடிப்பதில்லை என்றும் அமிதாப் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த அனுபவத்திலிருந்து ரஜினிக்கு ஆரோக்கியம் சார்ந்த அறிவுரையை வழங்கி இருக்கிறார்.
அமிதாப் பச்சனின் அரசியல் வாழ்வும் அவருக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை.
யார் விக்கிபீடியாவில் எழுதினார் எனத் தெரியவில்லை. அமிதாப் குறித்துக் குறிப்பிடுகையில் அவரை முன்னாள் அரசியல்வாதி என்றே விக்கிபீடியா விவரிக்கிறது.
அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் தாம் உச்சங்களைத் தொடாத அரசியல்வாதி என.
1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அலகாபாத் தொகுதியில் அமிதாப். இமாலய வெற்றியும் பெற்றார்.
அந்த சமயத்தில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது 'ரத்தத்துக்கு ரத்தம்' எனச் சூளுரைத்தார்.
இது மிகுந்த சர்ச்சையானது. பல நூறு சீக்கியர்கள் கொல்லப்பட்ட அந்த சமயத்தில் அமிதாப் இவ்வாறாகப் பேசியது சர்ச்சையானது.
சமீபத்தில் கூட லாஸ் ஏஞ்சல்ஸ் நீதி மன்றம் இது தொடர்பாக விளக்கம் கோரி அவருக்கு சம்மன் அனுப்பியது.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், "அலகாபாத் தேர்தலில் போட்டியிட்ட போது பல வாக்குறுதிகளை அளித்தேன். அதை நிறைவேற்ற முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்" என்று சொல்லி இருந்தார்.
ராஜீவ் காந்திவுடனான நட்பின் காரணமாக, தேர்தலில் போட்டியிட்டேன். உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவு அது. ஆனால், அரசியலில் உணர்வுகளுக்கு எந்த பங்கும் இல்லை எனப் பின்னர் புரிந்து கொண்டேன். இதன் காரணமாக அரசியலிலிருந்து விலகினேன் என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த அனுபவத்திலிருந்துதான் ரஜினிக்கு அறிவுரை கூறி இருக்கிறார் போல. இத்துடனும் முடியவில்லை.
தம்மால் இரண்டை மட்டுமே கடைப்பிடிக்க முடிந்தது. மூன்றாவதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. அதாவது அரசியல் வேண்டாம் என்பதை என்னால் கடைப்பிடிக்க முடியவில்லை என ரஜினி கூறி இருந்தார் அல்லவா?
ரஜினியால் மட்டுமல்ல. ஜெயா பச்சனால்கூட கடைப்பிடிக்க முடியவில்லை. இப்போது அவர் சமாஜ்வாதி கட்சியின் ராஜ்ய சபா நாடாளுமன்ற உறுப்பினர்.
உல்லாசம் படம் நினைவிருக்கிறதா? அஜித் நடித்த அந்தப் படத்தைத் தயாரித்தது அமிதாபின் ஏ.பி.சி. எல் நிறுவனம்.
ஏ.பி.சி.எல் நிறுவனம் மோசமான பொருளாதார சிக்கலில் சிக்கியது. அந்த சமயத்தில் அமிதாபுக்கு உதவியது அப்போது சமாஜ்வாதி கட்சியில் இருந்த அமர் சிங்.
இந்த நட்பின் காரணமாக சமாஜ்வாதி கட்சியுடன் இணக்கம் காட்டினார் அமிதாப். அவர்களது தேர்தல் பிரசாரத்திலும் முக்கிய பங்காற்றினார்.
இதன் நீட்சிதான் ஜெயா பச்சனுக்கான எம்.பி பதவி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












