சங்கத்தமிழன்: சினிமா விமர்சனம்

சங்கத்தமிழன்

பட மூலாதாரம், TWITTER / VIJAY SETHUPATHI

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தீபாவளிக்கு வெளியாகியிருக்க வேண்டிய படம். சற்றுத் தள்ளிப்போய் தற்போது வெளியாகியிருக்கிறது. சைரா நரசிம்மரெட்டி படத்தை சேர்த்தால், இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடித்து வெளியாகும் ஐந்தாவது படம் இது.

தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தாமிர உருக்கு ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சென்னையில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் தன் நண்பர் சூரியுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறார் நாயகன் முருகன் (விஜய் சேதுபதி). அந்த தாமிர உருக்கு ஆலை உரிமையாளரின் மகள் (ராஷி கண்ணா) முருகனைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

முருகனை அழைத்துப் பேசும் தொழிலதிபர், தன் தாமிர ஆலைக்கு எதிர்ப்பு நிலவும் ஊருக்கு முருகனை அனுப்பி, அந்த ஊரைச் சேர்ந்த சங்கத் தமிழனைப் (அவரும் விஜய் சேதுபதிதான்) போல நடித்து, ஊர் மக்களை தனக்கு ஆதரவாகத் திருப்பும்படி சொல்கிறார். பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக் கதை என்று இந்தக் கதைச் சுருக்கத்தை முடித்துவிடலாம். ஆனால், பிறகு என்னென்னவோ ஆகிவிடுகிறது.

சங்கத்தமிழன்

பட மூலாதாரம், VIJAYA PRODUCTIONS

மேலே உள்ள கதையைப் படித்தால் சற்று குழப்பமாக இருக்கலாம். ஆனால், படம் இதைவிட குழப்பமாக இருக்கும். துவக்கத்திலிருந்தே எந்த திசையில் செல்வது என்ற பிரச்சனையிலேயே தட்டுத்தடுமாறி நகர்கிறது படம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாத்திரத்தில் நடிக்கிறாரா, இரண்டு பாத்திரங்களில் நடிக்கிறாரா என்ற குழப்பம் இயக்குனருக்கே இருக்கும் போலிருக்கிறது.

விஜய் சேதுபதி படத்தில் முதல்முதலில் அறிமுகமாவதுபோல, ஏகப்பட்ட தடவை 'ஸ்லோமோஷனில்' பயங்கரமான பின்னணி இசையுடன் திரையில் நுழைகிறார். எதற்காக இத்தனை தடவை?

முதலில் விஜய் சேதுபதியைப் பார்க்கும் வில்லன் "அவன் முருகன் இல்லைடா, (சங்கத்)தமிழன்" என்கிறார். ஆனால், அடுத்த காட்சியிலேயே "யாருடா அவன்?" என்கிறார். பிறகு தேனி மாவட்டத்திற்கு வரும் முருகன், சங்கத்தமிழனாக நடிக்க ஆரம்பிக்கிறார். பிறகு, அவர்தான் உண்மையான சங்கத் தமிழன் என்று சொல்லி படத்தை முடித்துவிடுகிறார்கள்.

இவ்வளவு குழப்பமான கதையில் ஒவ்வொரு நடிகர்களும் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். படத்தில் சூரி இருக்கிறார். ஆனால், நகைச்சுவை இல்லை. 'தொட்டி ஜெயா' படத்தில் வரும் சிம்புவைப் போல சூரி நடிக்கும் ஒரு காட்சி மட்டுமே சற்று புன்னகைக்க வைக்கிறது.

திரைக்கதையைவிட இந்தப் படத்தில் மோசமான ஒரு விஷயம் இருக்கிறதென்றால், அது பின்னணி இசை. எல்லாம் சேர்ந்து தாங்க முடியாத ஒரு அனுபவத்தைத் தருகிறது படம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :