You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அசுரன்: சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்திருக்கும் நான்காவது படம். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன்.
1960களில் நடக்கிறது கதை. தன் அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானை (ஆடுகளம் நரேன்) கொலை செய்கிறான் 15 வயதுச் சிறுவனான சிதம்பரம் (கென் கருணாஸ்). வடக்கூரானின் ஆட்களும் காவல்துறையும் தேட ஆரம்பிக்க, சிதம்பரமும் அவனது தந்தை சிவசாமியும் (தனுஷ்) காட்டுக்குள் தப்பிச் செல்கிறார்கள். மிகவும் பயந்தவராகவே தன் தந்தையை அறிந்திருந்த சிதம்பரத்திற்கு காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போதுதான் அவரது மறுபக்கம் தெரிகிறது. இந்தக் கொலை வழக்கிலிருந்தும் வடக்கூரான் குடும்பத்தின் பகையிலிருந்தும் சிதம்பரத்தின் குடும்பம் எப்படி மீள்கிறது என்பது மீதிக் கதை.
வெற்றி மாறனின் படங்களில் பெரும்பாலானவை தீராப் பகையையும் துரோகத்தையும் பழிவாங்குவதையும் மனம் திடுக்கிடும் வகையில் சொல்லிச் செல்பவை. இந்தப் படமும் அதேபோலத்தான். ஒரு நாவல் திரைப்படமாகும்போது, அதன் மையப் புள்ளியிலிருந்து விலகி, வேறொரு கதையாக மாறிவிடும். ஆனால், பூமணியின் வெக்கையை கிட்டத்தட்ட அதே உக்கிரத்துடன் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.
ஒரு கொலையைச் செய்துவிட்டு சிதம்பரமும் சிவசாமியும் காட்டுக்குள் நுழைய, மெல்ல மெல்ல ஒரு கரிசல்காட்டு வாழ்க்கையை திரையில் விரிக்கிறார் வெற்றிமாறன். வெக்கை நாவலின் ஆசிரியரான பூமணி ஒரு முறை அந்த நாவலைப் பற்றிப் பேசும்போது, "கொலை செய்தது சிதம்பரம். காட்டுக்குள் திரிந்தது நான்" என்றார். இப்போது அந்தக் காட்டுக்குள் ரசிகர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார் வெற்றிமாறன். அவரது மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஏன் மிகச் சிறந்த படமாகக்கூட ஒருவர் கருதலாம்.
சிவசாமி பாத்திரத்திற்கு தனுஷ் மிகச் சிறந்த தேர்வு. பல காட்சிகளில் தன் முந்தைய உயரங்களைத் அனாயாசமாகத் தாண்டிச் செல்கிறார் அவர். குறிப்பாக, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மஞ்சு வாரியர் கேட்கும்போது, தனுஷின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பு, அட்டகாசம்.
கொலை செய்துவிட்டு தந்தையுடன் தப்பிச் செல்லும் சிறுவனாக வரும் கென் கருணாஸ், ஒரு மிகச் சிறந்த அறிமுகம். 16 வயதுச் சிறுவனுக்கே உரிய படபடப்பு, கோபம், பயம் எல்லாவற்றையும் தொடர்ந்து முகத்தில் தக்கவைக்கிறார் கென்.
பசுபதி, நரேன், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான ஆளைப் பார்த்துத் தேர்வுசெய்திருக்கிறார் இயக்குநர்.
ஜி.வி. பிரகாஷின் இசை படத்தில் மிகப் பெரிய பலங்களில் ஒன்று. படத்தின் தீவிரத்தை இவரது இசை இன்னும் பல மடங்கு அதிகரிக்கிறது. 'கத்தரிப் பூவழகி' பாடல், கொடும் பாலைவனத்தில் பெய்யும் பெரு மழையைப் போல இருக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் அபாரம்.
பல கொலைகளுக்குப் பிறகும், பிரச்சனைகளுக்குப் பிறகும் இறுதியில் ஒரு நம்பிக்கைக் கீற்றை விதைக்கிறது படம். 'பிறகு', 'வெக்கை' என பூமணியின் எல்லா நாவல்களிலும் அடிப்படையான அம்சம் இதுதான். பிரச்சனைகள், அழிவுகளைத் தாண்டியும் மனித வாழ்க்கை முன்னோக்கிச் செல்லும் என்பதற்கான நம்பிக்கையை அவரது கதைகள் கொடுத்துக்கொண்டே இருக்கும். வெற்றி மாறனின் இந்தப் படமும் அதே நம்பிக்கைக் கீற்றுடன் முடிகிறது.
ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது ஒன்று திரைக்கதைக்காக நாவல் மாற்றப்பட்டு முற்றிலும் அடையாளம் தெரியாமல் போய்விடும். அல்லது அப்படியே படமாக்கப்பட்டு பார்க்கச் சகிக்காமல் இருக்கும். ஆனால், ஒரு நாவலை சிறந்த திரைக்கதையாக்கும் சூத்திரத்தை இந்தப் படத்தில் முன்வைத்திருக்கிறார் இயக்குநர். அந்த வகையிலும் இது முக்கியமான படம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்