அழகு கலை நிபுணர் மாடலிங் செய்யத் தொடங்கினார் - 60 வயதில் அசத்தும் பெண்

    • எழுதியவர், ஸ்டீவன் ப்ரோகன்ஹர்ஸ்ட்
    • பதவி, பிபிசி ஸ்காட்லாந்து

கில்லியன் மெக்லியோட் தனது வயதில் 50களின் தொடக்கத்தில்தான் தொழில்முறை பயன்பாட்டுக்காக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். 60வது வயதில் நீச்சல் உடையில் அவர் புகைப்படத் தொகுப்பு தயாரிக்கும் வரையில் அவருடைய மாடலிங் தொழில் கை கொடுக்கவே இல்லை.

எச் & எம் பிரசாரத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் எளிமையான கருப்பு நிற நீச்சல் உடையில், மேக்கப் எதுவும் இல்லாமல், அவரது நீளமான வெள்ளை முடி இயல்பாக கீழே சரிந்திருந்தது.

ஆடைகள் விற்பனை செய்யும் நிறுவனம் அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டபோது, வேகமாக அது வைரலானது. பல நூறாயிரம் பேர் அதை லைக் செய்தனர்.

அப்போதிருந்து கில்லியனின் மாடலிங் தொழில் சூடு பிடித்தது. பூட்ஸ் என்ற மருந்து நிறுவனத்துக்கும், லெவிஸ் ஜீன்ஸ் நிறுவனத்துக்கும், ஸ்ச்வர்ஜ்கோப் தலைமுடி பராமரிப்பு பொருள்களுக்கும் விளம்பரங்களில் அவர் மாடலாக நடித்தார்.

கேமராவுக்கு முன் தலைகாட்டியதற்கு முன்னதாக, அழகுக் கலை நிபுணராக திரைக்குப் பின் பணியாற்றி வந்தார் கில்லியன்.

அவருடைய புகைப்படக்கார நண்பர் ஒருவர்தான் கில்லியனின் முதலாவது புகைப்படத் தொகுப்பு தயாரிக்க அவரை சம்மதிக்க வைத்தார்.

மாடலிங் ஏஜென்ட்கள் சீக்கிரமே அவரைத் தேட ஆரம்பித்தனர். ஆனால் சில நிறுவனங்களில் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தாலும், நிறைய இடங்களில் நிராகரிக்கப்பட்டார்.

2016ல் தயாரிக்கப்பட்ட நீச்சல் உடை புகைப்படத் தொகுப்புதான் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என்று 63 வயதான கில்லியன் கூறுகிறார்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மாடலான அவர், இந்தோனீசியாவில் ஸ்காட்லாந்து தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர்.

போர்னியோ தீவில் வளர்ந்த அவர் மலேசியாவில் பினாங்கு நகருக்கு பள்ளிப்படிப்புக்குச் சென்றார். ஸ்காட்லாந்தில் உயர் கல்வி கற்றார்.

''நான் உண்மையில் போர்னியோவை நேசித்தேன். ஏனெனில் நாங்கள் அதிக நாட்கள் வசித்த இடம் எனக்குப் பிடித்திருந்தது,'' என்று பிபிசி ஸ்காட்லாந்தின் தி நைன் செய்தியாளரிடம் கூறினார்.

''எங்களுடைய வீடு ஒரு பழத்தோட்டமாக இருந்தது. எல்லா வகையான பழ மரங்களும் எங்கள் வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் இருந்தன.''

''பிறகு படகுகளில் தீவுகளுக்குச் சென்று, பொருட்கள் வாங்கி வருவோம். அது சொர்க்கமாக இருந்தது. அழகான சூழலில், நிறைய நண்பர்களுடன் நாங்கள் வாழ்ந்தோம். எங்களுடன் பெற்றோர்கள் கிடையாது.''

நீச்சல் மற்றும் மலையேற்றம் போன்ற செயல்பாடுகள் அதிகமாக இருந்ததால் உடல் ஆரோக்கியமாக இருந்தது என்று கில்லியன் கூறினார்.

புனித ஆண்ட்ரூஸ் கல்வி நிலையத்தில் படித்தாலும், போர்னியோவுக்கு அவர் திரும்பி வந்தார். அவருடைய பெற்றோர் ஸ்காட்லாந்துக்கு திரும்பிச் செல்லும் வரை, 17 வயது வரையில் அவர் அங்கிருந்தார்.

இளமைக் காலத்தில், தாம் அழகாக இருப்பதாக ஒருபோதும் நினைத்தது கிடையாது என்று கில்லியன் தெரிவித்தார்.

``நான் மிகவும் மெலிதாக இருப்பேன். உயரமான, அசிங்கமான உருவம் கொண்டவள் என்று என்னைப்பற்றி நினைப்பேன்,'' என்கிறார் அவர்.

``பிறகு வளர் இளம்பருவத்தை எட்டியபோது, முகத்தில் பருக்கள் தோன்றின. எனவே அதிக தயக்கம் ஏற்பட்டது. அதுபற்றிய சிந்தனை அதிகமாக இருந்தது.''

20 வயதுகளில் கில்லியன் லண்டனுக்குச் சென்றுவிட்டார். அங்கு மாடலிங் செய்ய அழைப்புகள் வந்தபோதிலும், முகப்பருக்களால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தன்னம்பிக்கை இழந்திருந்ததால், அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல பத்தாண்டுகள் வசித்த பிறகு, தொழில்முறை பயன்பாட்டுக்காக புகைப்படத் தொகுப்பு தயாரிக்க கில்லியனை சம்மதிக்க வைத்தார் அவரது நண்பர்.

``உண்மையில் எப்போதும் நான் தயக்கம் கொண்டவளாக இருந்தேன். கேமரா முன்னால் முகம் காட்ட வெட்கம் இருந்ததால், உண்மையாக எனக்கு அதில் தேன் இல்லை. ஆனாலும் அதைச் செய்தேன்,'' என்று கில்லியன் கூறினார்.

``எனக்கு 60 வயதாகும் வரை வேறு சில பணிகள் இருந்தன. பிறகு குளியல் உடையில் ஒரு படம் எடுத்தேன். அது வைரலாகிவிட்டது.''

கில்லியனுக்கு இப்போது வளமான தொழில் அமைந்திருக்கிறது. சமீப காலங்களில் அவர் ஜெர்மனி, நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சலஸில் பணியாற்றியுள்ளார்.

ஆலிவர் பீப்பிள்-க்காக அவருடைய விளம்பரம் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பெரிய விளம்பரப் பலகையாக வைக்கப்பட்டது. அதைப் பார்ப்பதற்கு கில்லியன் விமானப் பயணம் மேற்கொண்டார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் சஞ்சிகைகளில் படங்களைப் பார்க்கும் இளம்பெண்களை கில்லியன் எச்சரிக்கிறார். அவை உண்மையான வாழ்வைப் பிரதிபலிப்பவை அல்ல என்கிறார் அவர்.

தேர்ந்த புகைப்பட நிபுணர்களால் எடுக்கப்பட்ட அந்தப் படங்கள், பெரும்பாலும் டச்சப் மூலம் மேன்மை செய்யப்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.

''உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுதான் கை கொடுக்கும்'' என்கிறார் அவர்.

வயதான பெண்கள் இன்னும் பலர் மாடல்களாகப் பயன்படுத்தப் படுகின்றனர் என்று கில்லியன் தெரிவித்தார்.

''நான் அதைத் தொடங்கியதாக நினைக்கவில்லை. ஆனால் பெண்கள் தங்கள் 50கள் மற்றும் 60களில் எப்படி தோற்றம் அளிப்பார்கள் என்று எச் & எம் பிரசாரம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது,'' என்று அவர் கூறினார்.

''நான் நியூயார்க்கில் ஒரு ஏஜென்சியுடன் பணியாற்றுகிறேன். அங்கே ஏறத்தாழ அனைவருமே 60 வயதைக் கடந்தவர்கள்,'' என்றும் கில்லியன் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :