You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அழகை அள்ளித்தந்த முதுமை': மாடலாக மாறிய மூத்த குடிமக்கள்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சிறிய கறுத்த முகம், வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் கலைந்த தலைமுடி, ஒல்லியான தேகம், முகம் முழுவதும் வறுமை வரைந்த கோடுகள், கண்களில் நீங்காத அன்பும் ஏக்கமும் தெரியும் 71 வயது டில்லிபாபு ஒரு மாடல்.
கோலிவுட் நட்சந்திரங்கள் மற்றும் பிரபலங்கள் மாடலாக விளம்பரங்களில் தோன்றுவதற்கு பல லட்சங்களை சம்பளமாக பெறும் அதே சென்னை நகரத்தில் ஒரு நாளுக்கு ரூ.200 பெற்றுக்கொண்டு தமிழக அரசின் கவின் கலைக் கல்லூரியில் மாடலாக வேலைசெய்கிறார் இந்த டில்லிபாபு.
டில்லிபாபுவுடன் எழுபது வயது லட்சுமி, 66வயது சுப்புராயன் ,68வயது பத்மநாபன் மற்றும் 40 வயது பவானி ஆகியோரும் மாடலாக வேலைசெய்கிறார்கள்.
தற்காலிக பணியாக மாடலிங் வேலை
கவின்கல்லூரி மாணவர்கள் வண்ணப்படங்கள் வரைய அல்லது சிற்பங்கள் வடிக்க, இந்த மாடல்கள் தினமும் சுமார் எட்டு மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே பாவனையில் இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் வேலை.
மாணவர்கள் வரைவதற்கு ஏற்ற முகம் கொண்டவர்களை கல்லூரி அலுவலர்கள் அடையாளம் கண்டு சொல்கிறார்கள். வேலைக்கு வந்தபிறகு வேலை மட்டுமல்லாமல் இங்குள்ள மாணவர்களையும் பிடித்துபோவதால், மாடல்கள் சிலர் இங்கேயே தொடருவதாகக் கூறுகிறார்கள்.
''இந்த பசங்க அவுங்க ஊரவிட்டு இங்கவந்து படிக்கறாங்க.. எங்கள அவுங்க தாத்தா, ஆயாவா பாத்துகறமாதிரி அன்போட நடத்தறாங்க. ஒரு தம்பி அவனோட பொறந்த நாளுக்கு எனக்கு புதுச்சட்டை, வேட்டி தந்துது, நான் வந்தபிறகுதான் கேக் வெட்டுவேன்னு அந்த தம்பி காத்திட்டு இருந்தான்,'' என்றார் மாடல் டில்லிபாபு.
கவின்கலை கல்லூரியில் வேலையை முடித்துக்கொண்டு அவர்சென்று சேரும் இடம் மைலாப்பூரில் உள்ள சிட்டிசெனட்டர் மால். அங்கு அவரது நண்பரின் கடையில் இரவு வரை வேலைசெய்துவிட்டு, உணவு வாங்கிக்கொண்டு அங்கேயே உறங்கிவிடுவதாகக் கூறுகிறார்.
''இரண்டு வருஷத்துக்கு முன்னே மனைவி மகேசுவரி இறந்துபோச்சு..அவளே இறந்தபிற்பாடு வீடுனு ஒண்ணு எனக்குதேவையில்லாம போச்சு. இந்த காலேஜில பசங்களோடு இருக்கற நேரத்தில நான் எல்லாத்தையும் மறந்திடுவேன்,'' என்றார் டில்லிபாபு.
ஒரு நாளுக்கு ரூ.200 பெற்றாலும், தினமும் வேலை இருக்கும் என்ற உறுதி இல்லை என்பதால் தனது சம்பளம் உயர்த்தப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார் டில்லிபாபு.
''தாய்க்கிழவி, டார்லிங் எனக்கு செல்லபெயர்கள்''
கடந்த ஆறு ஆண்டுகளாக மாடலாக இருக்கும் லட்சுமி உழைத்து வாழ்வதால் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கூறுகிறார். ''ஓய்வு எடுத்துக்கொண்டால் உடம்பு சரியில்லாமல் போகும். எத்தனை மண் சுமந்து, கல்லு சுமந்து, வீட்டு வேலசெஞ்ச கை இது...நான் சும்மா இருக்கமுடியாது. ஆனா இப்போ உடம்புல தெம்பு இல்ல.. மாடலா இருக்கறதுனால ஒரே இடத்தில் அமைதியா உட்கார்ந்து இருக்கிற வேலை,'' என்றார் லட்சுமி.
புளியந்தோப்பில் வசித்துவந்த லட்சுமியால் வீட்டுவாடகை கொடுக்க முடியாததால் தற்போது சென்னை புறநகரான பட்டாபிராம் பகுதியில் வசிக்கிறார். ஒரு மணிநேரம் ரயில் பயணம் செய்து, தவறமால் சரியான நேரத்தில் கல்லூரிக்கு வந்துவிடுவதாகக் கூறுகிறார்.
''இதுவரைக்கும் நூறு பசாங்க படம் வரைஞ்சு, சிற்பம் செய்ய நான் மாடலா இருந்திருக்கேன். புதுக்கோட்டையில இருந்து வந்த அரவிந்த்னு ஒரு தம்பி செதுக்கின சிலை எனக்கு ரொம்ப பிடிச்ச சிலை'' என்றார் லட்சுமி.
மாணவர்கள் செல்லமாக தன்னை டார்லிங், தாய்க்கிழவி என்று அழைப்பதாகக் கூறும்போது லட்சுமியின் முகத்தில் மலர்ச்சி.
தன்னுடைய மகள் பவானி மற்றும் பேரன் சம்பத்குமார் ஆகியோரும் அவ்வப்போது மாடலாக வேலைசெய்கிறார்கள் என்கிறார் லட்சுமி.
வயது அதிகமாகும்போது கூடும் அழகு
மீஞ்சூர் பகுதிவாசியான 66 வயது சுப்புராயன் கடந்த ஆண்டு மாடலாக வேலை செய்யத் தொடங்கினார்.
சில சமயம் மாணவர்கள் ஆர்வமாக சிலை செய்யும்போது, அவர்களுக்காக ஒரு மணி நேரம் காத்திருந்து செல்வதும் உண்டு என்கிறார் சுப்புராயன்.
''அவுங்க ரொம்ப கவனமா சிலை செய்வாங்க.. நான் போறேன்னு சொல்லத் தோனாது. சின்ன சின்ன விஷயங்களையும் உன்னிப்பா பாப்பாங்க. என்னோட தலைமுடி, கைகள் கோர்த்து வைச்சிருக்க மாதிரி, சட்டை காலர்னு கவனமா வேலைசெய்வாங்க,'' என்று தன்னுடைய வேலைநேரத்தில் நடக்கும் விஷயங்களை விவரித்தார் சுப்புராயன்.
''என்னை எல்லோரும் பார்த்து பார்த்து வரையறாங்க, சிலை செய்யறாங்கனு முதல் நாள் மட்டும் கொஞ்சம் சிரமப்பட்டேன். இப்போ பழகிடுச்சு. களைப்பா இருந்த பசங்க ஓய்வு எடுத்துகோங்கனு சொல்லுவாங்க. ரோடு போடற வேலை செய்ததால என் கை எல்லாம் வலுவிழந்துபோச்சு. ஆனா வயசு என்னை அழகா மாத்திருச்சுனு நினைக்கிறேன்பா. அதனாலதான என்னை பார்த்து வரையறாங்க,'' என்கிறார் சுப்புராயன்.
மாடல்களுக்கு முதலீடான வறுமை
சம்பளம், வாழ்க்கைத் தரம் என எந்தவிதத்திலும் திரைநட்சந்திரங்களோடு ஒப்பிட முடியாது என்றாலும், அரசு கவின்கல்லூரியில் மாடலாக இருக்கும் இந்த மூத்த குடிமக்களின் முதலீடே இவர்களின் வறுமைதான் என்கிறார் மாணவர் தாமோதரன்.
''இவர்களை பார்த்துத்தான் நாங்கள் கலையை கற்றுக்கொள்கிறோம். ஒரு படம் வரைய மூன்று நாட்கள் ஆகும், சிற்பம் செய்ய குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும். இவர்கள் ஒருவிதத்தில் எங்களுக்கு ஆசிரியர்களாக இருக்கிறார்கள்,'' என்றார் மாணவர் தாமோதரன்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்