You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெங்கட் பிரபுவின் 'மாநாடு' படத்திலிருந்து சிம்பு நீக்கம்
வெங்கட் பிரபு இயக்க, சிம்புவைக் கதாநாயகனாகக் கொண்டு தொடங்கப்பட்ட 'மாநாடு' படம் கைவிடப்படுவதாகவும் விரைவில் வேறொரு நடிகரை வைத்து இந்தப் படம் துவங்கப்படுமென்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்.
வெங்கட் பிரபுவை இயக்குனராக வைத்து, மாநாடு என்ற படம் தொடங்கப்படுவதாக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்றும் கூறப்பட்டது. ஒரு அரசியல் த்ரில்லர் எனவும் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், அதற்குப் பிறகு இந்தப் படம் தொடர்பாக எந்தவித அறிவிப்போ, செய்திகளோ வெளியாகவில்லை.
இந்த நிலையில், அந்தப் படத்தைத் தயாரிப்பதாக இருந்த வி ஹவுஸ் புரொடக்ஷன்சின் சுரேஷ் காமாட்சி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் மாநாடு படம் கைவிடப்படுவதாக அறிவித்திருக்கிறார்.
அந்தப் பதிவில், "தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன், அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு 'நடிக்க இருந்த' மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை" என்று கூறியிருக்கிறார்.
மேலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படம் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றும் விரைவில் அதைப் பற்றி அறிவிப்பு வெளியாகுமென்றும் தெரிவித்திருக்கிறார்.
சுந்தர் சி இயக்கத்தில் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படம் சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்தது. அதற்குப் பிறகு படங்கள் ஏதும் வெளியாகவில்லை.
இதற்கு முன்பாக 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன், தன்னுடைய படத்திற்கு சிம்பு எந்த ஒத்துழைப்பையும் கொடுக்கவில்லை; அதனால்தான் படம் தோல்வியடைந்தது என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதற்கு முன்பாக நாகராஜ சோழன் எம்.எல்.ஏ., 6 அத்தியாயம், கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்