’பாரதிராஜாவால் தமிழ் சினிமாவின் முகம் மாறியது அதற்காக அவர் சாமி அல்ல’

"பாரதிராஜாவால் தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. அதற்காக அவரை சாமியாக கும்பிட வேண்டும் என்பதை அவரே விரும்பியதில்லை." என இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜாவை நியமனம் செய்தது குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் இயக்குநர் பாரதிராஜாவை இயக்குநர் சங்க புதிய தலைவராக, போட்டியின்றி அனைவரும் தேர்வு செய்தனர். பிற பதவிகளுக்கான தேர்தல் இம்மாதம் 14ஆம் தேதி நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு உறுப்பினர்களிடையே விமர்சனங்கள் கிளம்பின. சில தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். உறுப்பினர்களிடையே இருவேறு விதமான கருத்துக்கள் எழுந்த நிலையில், இயக்குநர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா திடீரென அறிவித்தார். அவர் நெருக்கடிக்கு ஆளானதால்தான் ராஜினாமா செய்தார் என்று தகவல்கள் பரவியது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, "சொந்த பணிகள், சில சூழ்நிலைகளால் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறேன். மூளைச்சலவை செய்து என் மனதை திசை திருப்பியதாக கூறுவது மனவேதனை அளிக்கிறது. எந்த விஷயத்திலும் நான் தைரியமாகவும், தெளிவோடும் முடிவெடுப்பேன்." என கூறினார்.
பின்னர் தேர்தல் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இது குறித்து ஆலோசிக்க இயக்குநர் சங்கத்தின் 100 வது சிறப்பு பொதுக் குழு கூட்டம் சென்னை கமலா திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தற்போதைய தலைவர் விக்ரமன், பொருளாளர் பேரரசு, செயலாளர் ஆர்.கே. செல்வமணி, எஸ்பி..ஜனநாதன், கரு.பழனியப்பன் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும், இயக்குநர் கரு பழனியப்பன், இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜாவை நியமனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசும்போது, "இயக்குநர் சங்க பொதுக்குழுவிற்கு பெரும்பாலும் வராத பாரதிராஜா கடந்தமுறை மட்டுமே வந்தார். பாரதிராஜாவால் தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. அதற்காக அவரை சாமியாக கும்பிட வேண்டும் என்பதை அவரே விரும்பியதில்லை. அவரை இங்கு அழைத்து வந்து அவமானப்படுத்த வேண்டாம். பாரதிராஜா மீது மரியாதை இருக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும்." என்று கூறினார்.
மேலும் கரு.பழனியப்பன் பேசும் போது, இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? என்று கேட்டதுடன் இயக்குநர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மது பாட்டில்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். இந்த கருத்துக்கு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கரு. பழனியப்பனின் பேச்சுக்கு உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ரகளை ஏற்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












