You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நட்புனா என்னானு தெரியுமா?: சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சிறு வயதிலிருந்து நண்பர்களாக இருக்கும் மூன்று பேருக்கிடையில் காதல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் சிவா அரவிந்த்.
கவின், அருண்ராஜா, ராஜு ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்து நண்பர்கள். பத்தாம் வகுப்புத் தேர்வின்போது காப்பியடிப்பதற்காக தன்னிடம் பேப்பரை வாங்கிய ஒரு பெண், அதனைத் திருப்பித் தராததால் தேர்வில் தோல்வியடைகிறார் கவின். இதனால், பெண்களை நம்பக்கூடாது என்ற முடிவில் இருக்கிறான் கவின். நண்பர்கள் மூவரும் சேர்ந்து திருமண ஏற்பாடுகளைச் செய்துதரும் நிறுவனம் ஒன்றைத் துவங்குகிறார்கள்.
அப்போது ரம்யா நம்பீசனைச் சந்திக்கும் அருண்ராஜா அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், ரம்யா நம்பீசன் கவினைக் காதலிக்கிறார். இதனால் நண்பர்கள் பிரிகிறார்கள். திருமணம் நடந்ததா, நண்பர்கள் இணைந்தார்களா என்பது மீதிக் கதை.
சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான கப்பல் என்ற திரைப்படத்தை ஞாபகப்படுத்துகிறது இந்தப் படம். ஆனால், அந்தப் படத்திலிருந்து சற்று தெளிவான திரைக்கதை இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.
படத்தின் துவக்கத்தில் நண்பர்கள் தொழில் துவங்குவது விரிவாகக் காட்டப்படுவதால், படிக்காத மூன்று நண்பர்கள் தொழில் துவங்கி, பணக்காரர்களாவதுதான் கதையோ என்று நினைக்கும்போதே, ரம்யா நம்பீசனை அறிமுகப்படுத்தி காதல், பாடல் என்று படம் வேறு திசையில் செல்ல ஆரம்பிக்கிறது.
இந்தத் தடுமாற்றம் தவிர, மிகவும் தளர்வான திரைக்கதை ஏதோ தொலைக்காட்சி நாடகத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. சற்றே படம் சுவாரஸ்யமாக நகரத் துவங்கும்போது, பாடல்கள் குறுக்கிடுகின்றன.
படத்தில் ஆங்காங்கே தலைகாட்டும் நகைச்சுவை வசனங்கள்தான் படத்தின் ஒரே ஜாலியான அம்சம். குறிப்பாக ராஜுவின் அப்பாவித்தனம்மிக்க வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.
படம் நெடுகவரும் இளவரசு, இரண்டு காட்சிகளில் வந்துவிட்டு காணாமல்போகும் மன்சூர் அலிகான், ராஜேந்திரன் ஆகியோர் அவர்கள் வரும் காட்சிகளில் ரசிக்கவைத்தாலும், திரைக்கதையில் ஒரு தொடர்ச்சியில்லாமல் இருப்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
படத்தில் மையப் பாத்திரமாக வரும் ரம்யா நம்பீசன், கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
பாடல்களைத் தவிர்த்துவிட்டு, திரைக்கதையில் இயக்குனர் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நல்ல நகைச்சுவைத் திரைப்படம் கிடைத்திருக்கக்கூடும்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்