You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமல் ஹாசன் மீது காலணி வீச்சு; சூலூரில் இடைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மே 19 அன்று தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று மாலையோடு அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வதற்கான நேரம் முடிவடைகிறது.
எனவே, அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சூலூர் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல் ஹாசன் பிரசாரம் செய்வதாக இருந்தார்.
ஆனால், மாவட்ட காவல் துறையினர் கமலின் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்திருக்கின்றனர். சட்டம், ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்புள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கோயம்புத்தூர் மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரும் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளருமான மகேந்திரனிடம் இது குறித்து கேட்டபோது, "நேற்று அரவக்குறிச்சி பிரசாரத்தில் இருந்தபோது, எழுத்து வடிவத்தில் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால் சூலூரில் கமல் ஹாசன் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறையிடம் இருந்து தகவல் வந்தது. அரவக்குறிச்சி பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே இந்த தகவல் வந்து சேர்ந்தது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மட்டும்தான் குறிப்பிட்டுள்ளனர், வேறு எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை," என்று குறிப்பிட்டார்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளபட்டியில் மே 11 அன்று நடைபெற்ற பிரசாரத்தில், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து, அவன் பெயர் நாதுராம் கோட்சே," என்று கமல் பேசியதற்கு இந்து அமைப்பினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று, வியாழக்கிழமை, அரவக்குறிச்சி, வேலாயுதம் பாளையத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கமல் மேடையில் இருந்து இறங்கியபோது காலணி, கல் வீச்சு தாக்குதல் நடைபெற்றது. ஆனால், அந்தக் காலணி, கல் எதுவும் அவர் மீது படவில்லை.
எனவே, மக்கள் நீதி மையத்தின் தொண்டர்களுக்கும், தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிலைமையை சரி செய்ய முயற்சி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், "ம.நீ.ம குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள், நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்கினிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர். அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே," என்று பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்