You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திரிணாமுல் - பாஜக இடையேயான மோதலில் காணாமல் போன கம்யூனிஸ்டுகள்
- எழுதியவர், ஜுபைர் அஹமத்
- பதவி, பிபிசி செய்தியாளர்
புதன்கிழமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணி ஒன்றை நடத்தியது. அது எதற்காகத் தெரியுமா? ஒரு நாள் முன்னதாக அமித் ஷாவின் சாலை பேரணியில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து இந்த பேரணி நடைபெற்றது.
பேரணி தொடங்குவதற்கு சற்று முன்னதாகவே நான் பேரணி நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டேன். அங்கு பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர்.
அங்கு நான் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். தனது பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையில் வன்முறை தொடர்பான தனது கருத்துக்களை அவர் வெளியிட்டார்.
"அனைத்துக் கட்சிகளும் வன்முறை அரசியல் செய்கின்றன. பாஜக பாதிக்கப்பட்டதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் வங்காள கலாசாரத்தை காப்பாற்றுவதாகவும், இடதுசாரிகள் தீவிரவாத வன்முறையை கண்டிப்பதாகவும் சொல்லி ஆதாயம் தேடிக்கொள்ள விரும்புகின்றன" என்கிறார் அவர்.
கூட்டம் மேலும் அதிகரித்தபோது, மீண்டும் அந்த வயதான பெண் ஆசிரியரை தேடிப்பார்த்தேன். அவரை காண முடியவில்லை. ஆனால் அவரது கருத்துக்களில் இருந்த உண்மை புரிந்தது.
இடதுசாரிகள் பேரணிக்கு பெருமளவில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் உணர்த்துவது என்ன? மாநிலத்தில் தங்களுக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது என்பதை காண்பிக்க சிபிஎம்மிற்கு கிடைத்த ஒரு வாய்ப்பு என்று பார்ப்பதா? அல்லது தேர்தல் சமயத்தில் எங்களை மலிவாக எடைபோட்டுவிடாதீர்கள் என்பதா? அல்லது மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் மீண்டும் உயிர்பெற வாய்ப்பு இருக்கிறது என்று இந்த கூட்டம் காண்பிக்கிறதா?
மாநிலத்தில் சிபிஎம் கட்சி அரசியல் ரீதியாக மரணித்துவிட்டது. சிவப்பு கொடிகள் துவண்டுவிட்டன. தோழர்கள் லெனினும், ஸ்டாலினும் மறக்கப்பட்டனர். அதன் தொண்டர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டன.
இடதுசாரிகள் 34 ஆண்டுகளாக மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்தது. மம்தா பானர்ஜி 2011 சட்டசபை தேர்தலில் அவரை தோற்கடித்தார். கட்சியின் வீச்சு குறைந்துவிட்டது.
2014 பொதுத் தேர்தல்களில்கூட, அது இரண்டு இடங்களை மட்டுமே வென்றது. கட்சியின் வாக்கு 17 சதவீதமாக குறைந்து விட்டது.
இடதுசாரி தலைவர்களை சந்திப்பதற்காக நான் கொல்கத்தாவில் உள்ள சிபிஎம் அலுவலகத்தை அடைந்தேன். ஒரு சமயத்தில் இந்த அலுவலகத்தில் தலைவர்கள், ஆர்வலர்கள் மற்றும் தொண்டர்களால் நிறைந்திருந்தது.
அலுவலகத்தின் பெரிய வரவேற்பறையில் அரசியல் விவாதங்களும் கூட்டங்களும் நடைபெற்றன. ஆனால், இப்போது இங்கே எந்த உற்சாகமும் இல்லை. அலுவலகம் அமைதியாக இருக்கிறது.
சிலர் தங்களுடைய அறைகளில் வேலை செய்தாலும் அலுவலகம் உயிர்ப்புடன் இல்லை. கார்ல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ஜோதிபாசு ஆகியோரின் புகைப்படங்களும், ஓவியங்களும் சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
கட்சி இளைஞர்களிடையே மீண்டும் பிரபலமடைந்து கொண்டிருப்பதாக அசன்சோலில் இருந்து வந்த சிபிஎம் உறுப்பினர் மீனாட்சி முகர்ஜி நம்பிக்கையுடன் உறுதிபட கூறுகிறார்.
"இளைஞர்கள் எப்போதும் நம்முடன் தொடர்பு கொள்கின்றனர். இன்றும்கூட அவர்கள் எங்களைச் சேர்ந்தவர்கள். பணவீக்கம், வேலையின்மை, வகுப்புவாதம் ஆகியவற்றிற்கு எதிராக கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் பல முறை பேரணிகளை நடத்தியிருக்கிறோம். அவற்றில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர்” என்று அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் 42இல் 40 மக்களவைத் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது சிபிஎம். அதில் ஒருவர் விகாஸ் ரஞ்சன். தனது தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்கு முன்னதாக ஒரு சாதாரண தொண்டர் போலவே கட்சி அலுவலகததில் அவர் அமர்ந்திருந்தார்.
அவருடன் யாருமே இல்லை. தன்னுடைய மொபைல் போனில் மம்தா பானர்ஜியின் தேர்தல் பேரணி காணொளிகளை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு பின்புறத்தில் லெனினின் ஒரு புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது.
ஊடகங்களின் கண்ணில் படாத அவர் ஜாதவ்பூர் தொகுதி மக்களின் வேட்பாளர். இரண்டு ஆதரவாளர்களுடன் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
வீடுதோறும் சென்று பிரசாரம் செய்த அவருக்கு குரல் கொடுக்க பெரிய கூட்டம் ஏதும் இல்லை. தலையில் தொப்பியும் சாதாரண உடை அணிந்திருந்த அவர், உள்ளூர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தான் வெற்றிபெற்றால் அவற்றை தீர்த்து வைப்பதாக உறுதிமொழியும் கொடுத்தார்.
முன்னாள் கொல்கத்தா மேயராக இருந்த விகாஸ், தொலைக்காட்சி நட்சத்திரம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மீமி சக்ரபர்த்தி தனது போட்டியாளர் என்று கூறுகிறார்.
"அரசியல் என்பது ஒரு தீவிர வியாபாரமே, வண்ணத்திரை நட்சத்திரங்களையும் பிரபலங்களையும் நம்பி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது வாக்காளர்களுக்கு அவமானம்" என்று அவர் கூறுகிறார்.
அவரது எதிரியாக அவர் யாரை கருதுகிறார்? இதற்கு பதில் கூறும் அவர், "பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்" என்கிறார்.
இரு கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் வேலை செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ், வங்காள சமுதாயத்தை இந்து-முஸ்லிம்களாக பிரிக்க முயன்றது. மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆர்எஸ்எஸ் இடம் கொடுத்திருக்கிறது. நாங்கள் அதிகாரத்தில் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் சில பகுதிகளுக்குள் சுருங்கிவிட்டது"
ஆனால், மம்தா பானர்ஜியோ அல்லது அவரது கட்சியினரோ இடதுசாரி வேட்பாளர்களை பற்றி குறிப்பிடுவதேயில்லை. அவர்கள் இடதுசாரி வேட்பாளர் விகாஸை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு தசாப்தம் வரை ஆடசியில் இல்லாமல் இருக்கும் கட்சி மீண்டும் வருவது கடினம் என்று சொல்கின்றனர்.
சிபிஎம் வலுப்பெறுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்கிறார் ரபீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சப்யசாச்சி பாசு ராய் சௌத்ரி.
"கடந்த எட்டு ஆண்டுகளில் சிபிஎம் கட்சியில் இளைஞர்கள் சேரவில்லை, சூர்யகாந்த் மிஸ்ரா மற்றும் பிமான் போஸ், மற்றும் சுஜான் சக்ரவர்த்தி போன்ற அதே பழைய முகங்கள்தான் இளைஞர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சுமார் 60 வயது என்பதை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது'' என்கிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்