You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Mr. Local: சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
'கனா' படத்திற்குப் பறகு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம். 'வேலைக்காரன்' படத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தை இயக்கிய எம். ராஜேஷ் இயக்கியிருக்கும் படம். இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் படத்தில் போய் அமர்ந்தால், ரசிகர்களை இப்படியா ஏமாற்றுவது?
ஒரு கார் ஷோரூமில் பணியாற்றும் மனோகர் (சிவகார்த்திகேயன்), எதிர்பாராதவிதமாக பிரபல தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளரான கீர்த்தனாவுடன் (நயன்தாரா) மோத நேர்கிறது.
கீர்த்தனா திமிர் பிடித்த பெண்ணாக இருப்பதால் மனோகரைத் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். அதனால் அவளைத் தொடர்ந்து வெறுப்பேற்றுகிறான் மனோகர். முடிவில் என்ன நடக்குமென்பதை யூகிப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கடினமான காரியமல்ல.
ஓரளவுக்கு வெற்றிகரமான ஹீரோவாக உருவெடுத்தவுடன், தமிழ் சினிமா கதாநாயகர்கள் பாரம்பரியமாக ஒரு சில படங்களில் நடிப்பார்கள்.
அதாவது, திமிர்பிடித்த (படித்த, தன்னம்பிக்கைமிக்க, வேலைபார்க்கும் என்று புரிந்துகொள்க) பெண்களை அடக்கி, ஒடுக்கி காதலிக்கவைத்து, திருமணம் செய்யும் கதை உள்ள படங்களில் நடிப்பது. அதிலும் அந்தப் பெண்ணும் சற்று பதிலடி கொடுத்தால் இன்னும் சுவாரஸ்யமாக தோற்கடிக்கலாம். 14 படங்களுக்குப் பிறகு அந்த இடத்திற்கு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆனால், இந்தப் படத்தில் அந்தக் கதை அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை. கதாநாயகன் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு காமெடி நண்பன்; வீட்டிற்கு அருகில் ஒரு காமெடி நண்பன் என ரொம்பவும் பாதுகாப்பாக படத்தைத் துவங்கும் இயக்குனர், போகப்போக ரொம்பவுமே சோதிக்கிறார்.
நயன்தாரா ஒரு கார்ப்பரேட் அதிபராக செய்யும் அதிரடி செயல்களும் அதை முறியடிக்க கதாநாயகன் செய்யும் செயல்களும் துளிகூட சுவாரஸ்யமாக இல்லை. கதாநாயகியின் அதிரடி செயல்பாடுகளுக்கான பதிலடி பல சமயங்களில் எதிர்பாராதவிதமாக, சுவாரஸ்யமே இல்லாத முறையில் நடந்து முடிகிறது.
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகியான நயன்தாரா இப்படி ஒரு படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பது தெரியவில்லை. அதிலும் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் காதல் என்ற பெயரில் செய்வதெல்லாம் 'stalking' வகையைச் சேர்ந்தது.
ஆனால், கதாநாயகிக்கு வேறு வழியே இல்லை என்பதால் இப்படி ஒரு நபரையே கடைசியில் காதலிக்க வேண்டிய கட்டாயம்.
ஏன், வேறு ஒரு பணக்கார தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்யலாமே என்று கேட்லாம். அப்படி ஒரு தொழிலதிபரையும் கதாநாயகி சந்திக்கிறார். ஆனால், தமிழ் சினிமாவில் முன்பெப்போதும் சந்தித்திராத திருப்பம் ஏற்படுகிறது. அதாவது, அந்த தொழிலதிபர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவராம். கொடுமை!!
படத்தொகுப்பிலும் பிரச்சனைகள் இருக்கின்றன. பல இடங்களில் கதாபாத்திரங்கள் முன்பு நடந்ததாக சில சம்பவங்களைச் சொல்கின்றன. ஆனால், அம்மாதிரி ஒரு வசனமோ, காட்சியோ படத்தில் முன்பு இருக்காது. இதுவேறு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
ரோபோ சங்கர், யோகி பாபு, சதீஷ் ஆகியோர் இருந்தும் சில இடங்களில் மட்டுமே புன்னகைக்க முடிகிறது. அதிலும் ஆங்கிலத்தைத் தவறாகப் பேசுவதன் மூலம் செய்யும் காமெடியை இன்னும் எத்தனை படத்தில் வைக்கப்போகிறார் ராஜேஷ் எனத் தெரியவில்லை.
இப்படி பல சொதப்பல்கள் இருப்பதால், நாம் எதற்கு மெனக்கெட வேண்டுமென ரொம்பவும் சுமாரான நாலு பாட்டுகளைப் போட்டுக்கொடுத்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழன்.
வேலைக்காரன், சீமராஜா என சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் பெரிதாக வெற்றிபெறாத நிலையில், தனக்கு மிகவும் பாதுகாப்பான நகைச்சுவை + ஆக்ஷனை நம்பி களமிறங்கியிருக்கிறார் அவர். ஆனால், கதை, திரைக்கதையில் ஆரம்பித்து எல்லாமே சராசரிக்குக் கீழே இருக்கிறது இந்தப் படத்தில்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்