100: சினிமா விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

'ராட்சசன்' பாணியிலான ஒரு காவல்துறை த்ரில்லர் திரைப்படத்தைத் தர முயன்றிருக்கிறார் சாம் ஆண்டன்.

காவல்துறையில் புதிதாகப் பணியில் சேரும் சத்யா (அதர்வா) மிகப் பெரிய சாகசங்களைச் செய்து குற்றவாளிகளைப் பிடிக்கலாம் என நினைக்கிறான்.

ஆனால், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில்தான் பணி நியமனம் கிடைக்கிறது. இதனால் மனமுடைந்துபோகும் சத்யாவை கட்டுப்பாட்டு அறைக்குப் பொறுப்பான பிஸ்டல் பெருமாள் (ராதாரவி), இதுவும் மிகப் பொறுப்பான பணி என்று கூறி அமைதிப்படுத்துகிறார்.

வேண்டாவெறுப்பாக வேலை பார்க்கும் சத்யா, ஒரு நாள் பதற்றமாக வரும் அழைப்பை பின்தொடர்ந்து, கடத்தப்பட்ட ஒருவரை மீட்கிறார்.

இதற்கிடையில், ஓர் இளம் பெண் கொல்லப்படுகிறாள். ஒருதலைக் காதல் விவகாரத்தில் அவள் கொல்லப்பட்டதாக காவல்துறை வழக்கை முடிக்கிறது.

ஆனால், ஒரு நாள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இறந்துபோன பெண்ணிடமிருந்து, தன்னைக் காப்பாற்றும்படி அழைப்பு வருகிறது. இந்த மர்மத்தின் முடிச்சை அவிழ்ப்பதுதான் மீதிப் படம்.

ஒரு துப்பறியும் கதையை சுவாரஸ்யமாகத் தர முயன்றிருக்கும் இயக்குநர், திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார்.

சுவாரஸ்யமான பின்னணியோடு துவங்கும் கதை, போதை மருந்து கும்பல், பெண் கடத்தும் கும்பல், நண்பனின் பிரச்சனை, காதல் என எங்கெங்கோ பயணம் செய்து, எடுத்துக்கொண்ட இலக்கில் கோட்டைவிடுகிறது.

இடைவேளைக்குப் பிறகு படம் சூடுபிடித்தாலும், இப்படி பல்வேறு திசைகளில் படம் செல்வதால் பெரும் சோர்வு ஏற்படுகிறது.

படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி. படத்தின் துவக்கத்தில் வருகிறார். பின்னணியில் பாடல் ஒலிக்க கொஞ்ச நேரம் நாயகனும் நாயகியும் நடந்துசெல்கிறார்கள். அதற்குப் பிறகு காணாமலேயே போய்விடுகிறார்.

படத்தில் இப்படிப் பல சொதப்பல்கள் இருந்தாலும் கதாநாயகன் அதர்வாவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க படம்தான்.

ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அதர்வாவுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை அளிக்கிறது. இதுதவிர, ராதாரவியும் யோகிபாபுவும் தாங்கள் வரும் காட்சிகளில் சற்று நிமிர்ந்து உட்காரவைக்கிறார்கள்.

பின்னணி இசையும் பாடல்களும் திரைப்படத்தை எந்த வகையிலும் மேம்படுத்தவில்லை.

தேவையில்லாத காட்சிகளை நீக்கி, திரைக்கதையில் இன்னும் கச்சிதமாக இருந்திருந்தால் ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படம் கிடைத்திருக்கும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :