You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோக்யா: சிக்கல்களைத் தாண்டி இன்று வெளியானது; நடந்தது என்ன?
வெள்ளிக்கிழமையன்று வெளியாவதாக இருந்த விஷால் நடித்த அயோக்யா, அதர்வா நடித்த 100 ஆகிய படங்கள் இன்றுதான் வெளியாகியுள்ளது. பணம் சார்ந்த பிரச்சனைகளால் நேற்று படம் வெளியாகாததற்குக் காரணம் என சொல்லப்பட்டது.
கோடை விடுமுறையாக இருப்பதால் இந்த வாரம் பல முக்கியமான திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் நடித்த அயோக்யா, அதர்வா நடித்த 100, ஜீவா நடித்த கீ, ஜெய் - கேத்தரீன் தெரசா நடித்த நீயா - 2 ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அயோக்யா, கீ, 100 ஆகிய படங்கள் வெளியாவதால் நீயா - 2 படத்தின் வெளியீடு மே 24ஆம் தேதிக்குத் தள்ளிப்போடப்பட்டது.
இந்த நிலையில், விஷால் நடித்த அயோக்யா படம் வெள்ளிக்கிழமையன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. சில திரையரங்குகளில் காலை 8 மணி காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்கள் காத்திருந்த நிலையில், படம் வெளியாவது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்தத் திரைப்படம் ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடிப்பில் 2015ல் தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தை ரீ - மேக் செய்து உருவாக்கப்பட்டிருந்தது. இதே திரைப்படம் இந்தியில் சிம்பா என்ற பெயரிலும் ரீ - மேக் செய்யப்பட்டிருந்தது.
அயோக்யா படத்தின் டப்பிங் உரிமைகள் பல மொழிகளிலும் விற்கப்பட்டிருந்த நிலையில், சிம்பா படத்திற்காக டெம்பர் படத்தின் உரிமையைப் பெற்றிருந்தவர், தனக்கு உரிமத் தொகை ஏதும் அளிக்காமல் அயோக்யா படத்தை வெளியிடக்கூடாது எனக் கோரினார். இதன் காரணமாகவே படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக சினிமா துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் வெளியாவதில் தடை ஏற்பட்டதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த விஷால், "நான் கடினமாக பணியாற்றிய அயோக்யா வெளியாகக் காத்திருக்கிறேன். ஒரு நடிகராக என்ன செய்ய வேண்டுமோ அதைத் தாண்டியும் நான் செய்துவிட்டேன். இது போதாதா? என்னுடைய நேரமும் வரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியத்திற்குப் பிறகு இது தொடர்பான பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவுக்காட்சி வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் திரையிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, வெள்ளிக்கிழமை இரவிலும் படம் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டது.
இதேபோல அதர்வா நடித்த 100 திரைப்படமும் இந்த வாரம் வெளியாகவில்லை. இந்தப் படம் மே 9ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் வெளியாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பட வெளியீடு ரத்துசெய்யப்பட்டது. ஏற்கனவே மே 3ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் மே 9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வாரமும் படம் வெளியாகவில்லை.
படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியே இந்தப் படம் வெளியாகாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
"தமிழ் சினிமாவில் நிதி சார்ந்த பிரச்சனைகளால் கடைசி நேரத்தில் படம் வெளியாகாமல்போவது இது முதல் முறையல்ல. கடந்த பத்தாண்டுகளாகவே இது நடக்கிறது. இன்னமும் இந்தத் துறையில் ஒரு ஒழுங்கு வரவில்லை. படம் எவ்வளவுக்கு விற்குமோ அதைத் தாண்டியும் தயாரிப்பாளர்கள் செலவழிக்கிறார்கள். இதனால் ஒரு படத்தில் இழப்பைச் சந்தித்தால் அவர்கள் தொடர்ச்சியாக சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். ஒரு படத்தின் ஒட்டுமொத்த வர்த்தகத்தைக் கணக்கிட்டு, அதைவிட குறைவாக திட்டமிட்டு செலவழிக்காதவரை இந்தப் பிரச்சனை தொடரும்" என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளரான ஸ்ரீதர் பிள்ளை.
100, அயோக்யா ஆகிய இரு படங்களும் வெளியாகாததால் வெள்ளிக்கிழமையன்று திட்டமிட்டபடி வெளியான ஜீவா நடித்த 'கீ' திரைப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்