சினிமா விமர்சனம்: மெர்குரி

பீட்சா, ஜிகர்தண்டா போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜின் வசனங்கள் இல்லாத த்ரில்லர்.
கொடைக்கானல் மலையைப் போல ஒரு மலை நகரம். அங்கே சுற்றுச்சூழலை நாசப்படுத்திய பாதரச ஆலையைப் போல ஒரு ஆலை. அந்த ஆலையின் நச்சினால் பாதிக்கப்பட்டு கேட்கும் திறனையும் பேசும் திறனையும் இழந்த ஐந்து நண்பர்கள். ஒரு நாள் இரவில் இவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு, வாகனத்தில் திரும்பிக்கொண்டிருக்கும்போது, ஒரு விபத்து நேரிடுகிறது. சம்பந்தமில்லாத ஒருவர் உயிரிழக்கிறார்.
பயந்துபோன நண்பர்கள் பிணத்தை ஒரு குழிக்குள் போட்டு மறைத்துவிடுகிறார்கள். அடுத்த நாள் வந்து பார்க்கும்போது, அங்கு அந்தப் பிணம் இல்லை. பிறகு மூடப்பட்ட ஆலைக்குள் ஈர்க்கப்படும் நண்பர்கள் ஒவ்வொருவராக சாகிறார்கள்.
கமல்ஹாசன் நடித்த பேசும் படம் படத்திற்குப் பிறகு வெளியாகியிருக்கும் வசனமில்லாத படம் இது. ஆனால், பேசும் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் இடையிலான முக்கியமான வித்தியாசம், அந்தப் படத்தில் பேசுவதற்கான சந்தர்ப்பமே இல்லாமல் கதை நகரும். இந்தப் படத்தில், கதாபாத்திரங்களுக்குப் பேச வராது என்பதால் வசனங்கள் இல்லை. இருந்தபோதும் சைகை மொழியில் அவர்கள் பேசிக்கொள்ளும் இடங்களில், கீழே சப் -டைட்டில்கள் மூலம் வசனங்கள் வருகின்றன.
கொடைக்கானல் மலையை இப்போதும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையின் பின்னணியில் இந்தத் த்ரில்லரை உருவாக்கியிருப்பதற்கு கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும்.
ஒன்றே முக்கால் மணி நேரமே ஒடும் இந்தப் படத்தின் துவக்க காட்சிகள் பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிக மிக மெதுவாக நகர்வது பெரும் அயர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது. விபத்து ஏற்பட்ட பிறகுதான் படம் சூடுபிடிக்கிறது. ஆனால், அதுவும் சிறிதுநேரம்தான். விரைவிலேயே, விபத்தில் கொல்லப்பட்ட பிரபுதேவா, பேயா அல்லது இறந்தும் இறவாத நிலையில் இருக்கும் 'ஸோம்பியா' என்பது புரியாமலேயே படம் நகர்கிறது. கடைசியில் பேய் என்றே உறுதிப்படுத்துகிறார்கள்.

ஒருவர் உயிரோடு இருக்கும்போது கண் தெரியாவிட்டால் பேயான பிறகும் கண் தெரியாது என்பது, இதுவரை வந்த பேய்க் கதைகளில் இல்லாத அம்சம். கண் தெரியாத பேய் என்று தெரிந்தவுடன், சத்தமேயில்லாமல் அதனிடமிருந்து இளைஞர்கள் தப்பியிருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படுகிறது.
வசனங்களே இல்லாத இந்தப் படத்திற்கு எல்லாமாய் இருப்பது சந்தோஷின் இசை. உண்மையிலேயே பிரமாதப்படுத்தியிருக்கிறார். அதேபோல திருவின் ஒளிப்பதிவும் அட்டகாசம். இந்த இரண்டுக்கும் இணையாக சொல்லப்பட வேண்டியது, கலை இயக்குனரின் பணி. மாசுபாட்டால் கைவிடப்பட்ட ஒரு தொழிற்சாலையை அப்படியே கண் முன் கொண்டுவந்திருக்கிறார்கள்.
படத்தின் துவக்கத்தில் பயமுறுத்தும் பிரபுதேவா, பிறகு மிக சாதாரணமாகிவிடுவது பிற்பாதியில் படத்தில் சுவாரஸ்யத்தைக் குலைத்துவிடுகிறது. படத்தில் நடித்திருக்கும் ஐந்து இளைஞர்களும் குறைசொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார்கள்.

படம் முடியும்போது, "நாம் எப்போதும் தவறான எதிரியுடன் மோதுகிறோம்" என்கிறது பிரபுதேவாவின் பாத்திரம். ஆனால், அவரை விபத்தில் கொன்றவர்களை சரியாகத்தானே பழிவாங்குகிறார் என்று கேள்வியெழுப்பத் தோன்றுகிறது. ஐந்து இளைஞர்களுக்கும் காது கேட்கும் திறனிருந்திருந்தால் இந்த விபத்து நடந்து தான் இறந்திருக்க மாட்டேன், அதனால் மாசுபாட்டிற்குக் காரணமான தொழிற்சாலைதான் உண்மையான எதிரி என்று சொல்ல வருகிறதா அந்த பாத்திரம் என்ற குழப்பமும் இருக்கிறது.
ஒரு சுற்றுச்சூழல் பிரச்சனையைப் பேசத் துவங்கி, பிறகு பேய்ப் படமாக மாறி, கடைசியில் உருக்கமாக முடிகிறது மெர்குரி. ஒரு 'ஆச்சாரமான' பேய்ப் படத்தை எதிர்பார்த்துச் செல்கிறவர்களுக்கு ஏமாற்றமிருக்கலாம்.
பிற செய்திகள்:
- விசில் போடு எக்ஸ்பிரஸ்: 1,000 ரசிகர்களை மகிழ்வித்த சிஎஸ்கே திட்டம்
- "பெண்களின் நேர்மையை எதிர்கொள்ள முடியவில்லை": எஸ்.வி சேகருக்கு பதிலடி
- ஆசிரியர் செல்லாத தீவு: பள்ளிக்கு தினம் படகில் செல்லும் மாணவர்கள்
- தனக்குப் புனிதர் தோற்றம் ஏற்படுத்த காமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்துகிறாரா மோதி?
- அரசியல்வாதிகளுக்கு கொடுக்க பெங்களூரு மக்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












