சினிமா விமர்சனம்: த ஹரிக்கேன் ஹெஸ்ட் (The Hurricane Heist)

சினிமா விமர்சனம்: த ஹரிக்கேன் ஹெஸ்ட் (The Hurricane Heist)

த மம்மி (The Mummy), டாம்ப் ஆப் த டிராகன் எம்பரர் (Tomb of the Dragon Emperor), டிரிபிள் எக்ஸ் (xXx), த ஃபாஸ்ட் அன்ட் த ஃபியுரியஸ் (The Fast and the Furious) படங்களை இயக்கிய ராப் கோஹன் இயக்கியிருக்கும் படம்.

ஒரு பயங்கரமான சூறாவளிக்கு மத்தியில் பெருந்தொகையான பணத்தைக் கொள்ளையடிக்க நடக்கும் முயற்சிதான் படம்.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை நெருங்குகிறது ஒரு பயங்கரமான சூறாவளி. அங்குள்ள கால்ஃப் போர்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது அமெரிக்காவின் ஒரு பெரிய கருவூலம்.

அந்த கருவூலத்தில் உள்ள 600 மில்லியன் டாலர்கள் பணத்தை, இந்தச் சூறாவளிக்கு மத்தியில் கொள்ளையடிக்க முயல்கிறது ஒரு கும்பல்.

அந்தப் பணம் இருக்கும் பெட்டகத்தைத் திறக்கும் ரகசிய எண் தெரிந்த பெண் அதிகாரி, அந்த புயலுக்கு மத்தியில் பணி நிமித்தமாக வெளியேறிவிட, பணத்தைத் திருடுவதில் பிரச்சனை ஏற்படுகிறது.

சினிமா விமர்சனம்: த ஹரிக்கேன் ஹெஸ்ட் (The Hurricane Heist)

அந்தப் பெண் அதிகாரிக்கு ஒரு வானிலை ஆய்வாளரும் அவரது சகோதரரும் உதவ, இந்த கொள்ளை முயற்சி எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதுதான் மீதிப் படம்.

ஏதோ வழக்கம்போல அமெரிக்காவை ஒரு பயங்கரப் புயல் தாக்க, ஹீரோ எப்படி நாட்டைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதையோ என்று துவக்கத்தில் தோன்றுகிறது.

ஆனால், மெல்ல மெல்ல கதை ஒரு கொள்ளை சாகஸமாக மாறுவது சுவாரஸ்யம்தான்.

அதேபோல, ஒரு பயங்கரமான புயல் அந்தக் கடற்கரைப் பிரதேசத்தைத் தாக்குவதை மிக பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பது அசர வைக்கிறது.

ஆனால், மெல்ல மெல்ல படம் ஒரு மூன்றாம் தரத் திரைப்படமாக மாறுகிறது. பல சண்டை மற்றும் புயல் காட்சிகளில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

சினிமா விமர்சனம்: த ஹரிக்கேன் ஹெஸ்ட் (The Hurricane Heist)

வில்லன்களும் அவனது அடியாட்கள் மட்டுமே இந்த புயலில் சிக்கி சின்னாபின்னமாவதும் புயலிலும் துப்பாக்கிச் சண்டையிலும் சிராய்ப்புக்கூட படாமல் நாயகனும் அவனது கோஷ்டியும் தப்புவதும், படம் துவக்கத்தில் ஏற்படுத்தும் சின்ன ஆச்சரியத்தையும் போக்கிவிடுகிறது.

ஒரு காட்சியில் நாயகனும் நாயகியும் கம்பி ஒன்றைப் பிடித்துக்கொண்டு பட்டத்தைப் போல பறக்கின்றனர். புயல் சூறையாடும் கட்டடம் ஒன்றில் சிக்கிக்கொள்ளும் எல்லோரும் இறந்துவிட, நாயகனின் சகோதரன் எப்படியோ வீடு வந்து சேர்கிறான். இப்படி எவ்வளவு கொடுமையைத்தான் தாங்க முடியும்?

மோசமான திரைக்கதை, ரொம்ப சுமாரான பின்னணி இசை, நடிகர்களின் ஏனோ தானோ நடிப்பு எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை, ஹாலிவுட்டில் வெளிவந்த சூறாவளி சாகஸங்களிலேயே மிக மோசமான படங்களின் வரிசையில் வைக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: