You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: Pacific Rim - Uprising
2013ல் வெளிவந்த Pacific Rim படத்தின் அடுத்த பாகம். முதல் பாகமே ஹாலிவுட்டில் வெற்றிப்படமில்லை. மிக சுமாரான விமர்சனங்களைப் பெற்ற படமும்கூட.
பசிபிக் கடல் பகுதியில் உருவாகும் பிளவிலிருந்து வெளிவரும் மிக பிரம்மாண்டமான மிருகம் உலகை அழிக்கப்பார்க்கிறது. கைஜு எனப்படும் இந்த மிருகத்தை அழிக்க, ஏகர்ஸ் எனப்படும் மிகப் பிரம்மாண்டமான ரோபோக்களை உருவாக்குகிறார்கள். இந்த ரோபோக்களை இயக்கும் இரண்டு பைலட்டுகள் உயிரைக் கொடுத்து உலகைக் காப்பாற்றுவதோடு முடியும் முதல் பாகம்.
இந்த இரண்டாவது பாகத்தில், கிட்டத்தட்ட அதே கதைதான். பசிபிக் கடல் பகுதியில் இருந்த பிளவு மூடப்பட்டுவிட்டதால் ராட்சத மிருகம் குறித்த அச்சமின்றி இருந்த நிலையில், ஒரு மோசமான விஞ்ஞானி தன்னை யாரும் மதிப்பதில்லை என்பதால் மீண்டும் அந்த மிருகங்களை கட்டவிழ்த்துவிடுகிறார். அவற்றைச் சமாளிக்க மீண்டும் ஏகர்ஸ் எனப்படும் ராட்சத ரோபாக்களைக் களமிறக்குகிறார்கள் விஞ்ஞானிகள். முந்தைய பாகத்தில் கைஜுக்களோடு போராடி உயிரைவிட்ட பைலட்டின் மகனான ஜேக் பென்டேகோஸ்ட் (ஜான் பாயேகா), தன் சகோதரி மேகோ மரி, மற்றொரு இளம்பெண்ணான அமரா (கெய்லி ஸ்பானி) ஆகியோருடன் களமிறங்குகிறான். முடிவில் வழக்கம் போல மிருகங்களைக் கொன்று, உலகத்தைக் காப்பாற்றிவிடுகிறார்கள்.
படம் துவங்கி சிறிது நேரத்திலேயே 2018ல் வரவேண்டிய படமா இது என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இதன் முதல் பாகம், மோசமான படம் என்ற பெயரையே பெற்றது. இப்போது வெளிவந்திருக்கும் இந்த பாகம், முதல் பாகத்தை தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது.
முழுக்க முழுக்க ஒரு வீடியோ கேம் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் உணர்வு ரீதியாக ரசிகர்களை ஒன்றச் செய்வதற்கான முயற்சியை சிறிதளவுகூட மேற்கொள்ளவில்லை என்பதுதான் இதன் முக்கியமான பலவீனம்.
டிரான்ஸ்ஃபார்மர் படங்களில் வருவதைப் போன்ற சண்டைக் காட்சிகளும் பெரிதாக ஈர்க்காமல் கடந்து செல்கின்றன. இந்தப் படத்தில் வரும் முக்கிய பாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஏனோதானோ என்றே தங்கள் கடமைகளை ஆற்றிச்செல்கிறார்கள்.
பெரிய அழிவிலிருந்து உலகத்தைக் காப்பாற்றும் கதையைக் கொண்ட திரைப்படங்களின் உச்சகட்டம் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இந்தப் படத்தில் அதிலும் கோட்டைவிட்டிருக்கிறார்கள்.
படம் முடியும்போது, அடுத்த பாகம் வரக்கூடும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் வில்லன். ரொம்பவுமே தைரியம்தான்!
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்