You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
’பழமையான மொழி... வரலாற்று தொடர்ச்சி’: திராவிட மொழிகளின் தொன்மையை விளக்கும் ஆய்வு!
தெற்கு ஆசியாவில் ஏறத்தாழ 22 கோடி மக்களால் பேசப்படும் திராவிட மொழிகள், இந்திய பழங்கால வரலாற்றை புரிந்துக் கொள்ள மட்டும் உதவவில்லை, மொத்த யுரேசியாவின் வரலாற்றையும் புரிந்துக் கொள்ள உதவுகிறது.
திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த 80 மொழிகளை, தெற்கு மற்றும் மத்திய இந்தியா மற்றும் இந்தியாவின் அருகே உள்ள நாடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 22 கோடி பேர் பேசுகிறார்கள். இந்த திராவிட மொழிகள் 4,500 ஆண்டுகள் பழமையானது எனலாம் என்கிறது சர்வதேச குழு ஒன்று மேற்கொண்ட ஓர் ஆய்வு.
ராயல் சொசைட்டி ஓபன் சைன்ஸில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வானது, திராவிட மொழிகள் மற்றும் அதனை பேசுவோரின் தொல் வரலாற்றை புரிந்து கொள்ள உதவி புரிகிறது.
சமஸ்கிருதத்துக்கு இல்லை
மேற்கில் ஆஃப்கானிஸ்தான் முதல் கிழக்கு வங்கதேசம் வரை பரந்து விரிந்திருக்கும் தெற்கு ஆசியா, ஆறு மொழி குடும்பத்தைச் சேர்ந்த அறுநூறு மொழிகளுக்கு தாயகமாக இருக்கிறது. இவற்றில் திராவிட மொழி குடும்பமும் ஒன்று.
திராவிட மொழி குடும்பத்தில், 80 மொழி வகைகள் உள்ளன (மொழி மற்றும் உள்ளூர் பேச்சு வழக்குகள்).
இவை ஏறத்தாழ 22 கோடி மக்களால் பேசப்படுகின்றன.
திராவிட மொழி குடும்பத்தில் பழமையான மற்றும் அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம்.
இந்த நான்கில் மிகவும் பழமையானது தமிழ் மொழி.
உலகில் உள்ள செம்மொழிகளில் சமஸ்கிருதத்தைப் போல தமிழும் ஒன்றாகும். ஆனால், அதே நேரம் சம்ஸ்கிருதம் போல அல்லாமல், தமிழின் மொழிக் கட்டமைப்பில் ஒரு தொடர்ச்சி இருந்துகொண்டிருக்கிறது. இது, தமிழின் கவிதைகள், செய்யுள்கள், கல்வெட்டுகள் எனப் பல வகைகளில் தொடர்கிறது. இத்தொடர்ச்சி சமஸ்கிருதத்துக்கு இல்லை.
மேக்ஸ் பிளான்க் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆனிமேரி, "திராவிட மொழிகள் பிற மொழிகளில் குறிப்பிடத்தக்க அளவு ஆதிக்கம் செலுத்தி உள்ளதால், திராவிட மொழிகளை ஆய்வு செய்வது யூரேசியாவின் தொல்வரலாற்றை புரிந்துக் கொள்ளவதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்கிறார்.
`திராவிடர்கள் பூர்வகுடிகள்`
திராவிட மொழிக் குடும்பம் புவியியல் தோற்றம் எங்கு என்று தெரியவில்லை. அதுபோல, எப்படி அது காலப்போக்கில் பரவியது என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், 3,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இத்திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் தென்னிந்தியாவில் வசித்தனர் என்பது இந்த ஆய்வை மேற்கொண்டவர்களின் ஒருமித்த கருத்து. அதாவது இந்திய துணைகண்டத்தின் பூர்வகுடிகள் திராவிடர்கள், இந்தோ- ஆரியர்களுக்கு முன்பாகவே அவர்கள் அங்கு வசித்தனர் என்பதும் உறுதி என்பது இந்த ஆய்வை மேற்கொண்டவர்களின் கருத்து.
எங்கு, எப்போது திராவிட மொழிகள் வளர்ச்சிப்பெற்றன என்ற கேள்விகான விடையை கண்டறிய, 20 திராவிட மொழிகளுக்கு இடையே உள்ள வரலாற்று உறவை இந்த ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார்கள்.
ஆய்வாளர்கள் பயன்படுத்திய புள்ளியியல் தொழில்நுட்பம் மிகவும் நவீனமானதும் முன்னேறியதுமானதாகும். பல வழிகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டபோதும் ஒவ்வொரு முறையும் ஒரே முடிவே கிடைத்துள்ளது. ஆகவே தான் அவர்கள் திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழைமையானது என உறுதியாக கூறுகிறார்கள். அதேநேரம், இம்முடிவுகள் அகழ்வாராய்ச்சியின் முடிவுகளோடும் ஒத்துப்போகின்றன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்