திரைப்பட விமர்சனம் - பலூன்

திரைப்பட விமர்சனம் - பலூன்

படத்தின் துவக்கத்திலேயே அனபெல், இட், கான்ஜூரிங் ஆகிய படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கதைதான் இது என்பதைச் சொல்லி நன்றி தெரிவித்துவிடுகிறார் இயக்குநர்.

சினிமா இயக்குநராக விரும்பும் குட்டி (ஜெய்), ஒரு பேய்க் கதையைத் தயாரிப்பதற்காக தன் அண்ணன் மகன் பப்பு, தன் துணை இயக்குனர்கள் (யோகி பாபு), மனைவி ஜாக்குலின் (அஞ்சலி) ஆகியோருடன் ஊட்டிக்கு வந்து ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார்.

அந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில விசித்திரமான மரணங்கள் நடந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அதை வைத்து ஒரு பேய்க் கதை எழுத நினைத்து தகவல்களைச் சேகரிக்கிறார் குட்டி. ஆனால், குட்டி வசிக்கும் வீட்டிலேயே சில விசித்திர சம்பவங்கள் நடக்கின்றன. பேயுடன் விளையாடும் பப்புவை ஒரு கட்டத்தில் பேய் பிடித்துக்கொள்கிறது. பிறகு ஜாக்குலினையும் பேய் பிடிக்கிறது. அந்தப் பேய்க்கும் குட்டிக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் மீதிக் கதை.

சமீபத்திய ஹாலிவுட் படங்களிலிருந்துதான் சுட்டிருக்கிறேன் என துவக்கத்திலேயே இயக்குநர் சொல்லியிருப்பதைப்போல, படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹாலிவுட் பேய்ப் படத்தை நினைவூட்டுகிறது. குறிப்பாக 'இட்' திரைப்படத்தை பல காட்சிகள் நினைவூட்டுகின்றன. அதேபோல, படத்தின் இசையிலும் ஹாலிவுட் படங்களின் சாயல் அழுத்தமாகத் தென்படுகிறது.

திரைப்பட விமர்சனம் - பலூன்

ஒரு வீட்டிற்குப் புதிதாக வருபவர்கள், அங்கிருக்கும் பேய் அவர்களைப் பிடித்துக்கொள்வது, பிறகு பேய் விரும்பும்படி பழிவாங்கும் சம்பவங்கள் நடந்த பிறகு பேய் வெளியேறுவது என பல படங்களில் பார்த்த கதையை படமாக்கும்போது, காட்சிகளாவது சற்று புதுமையாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி இல்லை. படம் துவங்கி ஒரு மணி நேரம் வரை, வீட்டிற்குள் இருப்பவர்களை பேய் பயமுறுத்தும் காட்சிகளே இடம்பெற்றிருப்பதால் சற்று சோர்வூட்டுகிறது. பிறகு சற்று சூடுபிடிக்கும் கதை, இடைவேளைக்குப் பிறகு வரும் ஃப்ளாஷ் பேக் காட்சியில் மீண்டும் அலுப்பூட்டுகிறது.

பல காட்சிகள், திரும்பத் திரும்ப வருவதுபோல தோன்றுவதும் படத்தின் பலவீனம். பேய் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி, திகிலை உருவாக்குபதற்குப் பதிலாக, திடீர் திடீரென்ற சத்தங்கள், உருவங்கள் வேகமாக மறைவது போன்றவற்றின் மூலமே திகிலை ஏற்படுத்துகிறார் இயக்குநர். இதுவே திரும்பத் திரும்ப நடப்பதால், பயம் ஏற்படுவதற்குப் பதிலாக பழகிய காட்சிகளைப் பார்ப்பதைப்போல இருக்கிறது.

திரைப்பட விமர்சனம் - பலூன்

படத்தின் துவக்கத்தில் தயாரிப்பாளர்கள், ஜாதி சங்கத்தினரால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த காட்சிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.

படத்தின் பெரிய ஆறுதல் யோகி பாபு. துணை இயக்குநராக வரும் யோகிபாபு தான் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் சிரிக்கவைக்கிறார். ஜெய், அஞ்சலி, ஜனனி ஆகியோரும் பாத்திரங்களுக்குப் பொருந்திப்போகிறார்கள்.

ஒரு காமெடி - திகில் படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். காமெடி பகுதிகள் சிறப்பாகவே அமைந்துவிட்டன. ஆனால், திகில்தான் போதுமானதாக இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :