2017: அனிதா முதல் மித்தாலி வரை பெண்கள் கடந்து வந்த பாதை

2017ஆம் ஆண்டில் இந்தியா கடந்து வந்த சாதனை பெண்களும், அவர்கள் தொடர்பான சில முக்கிய செய்திகளையும் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

மித்தாலி ராஜ்

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதை எவ்வாறு மறுக்க இயலாதோ, அதே அளவு அந்த வரவேற்பு, ஆண்கள் கிரிக்கெட்டிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை மறுக்க இயலாது. ஆனால் இந்த நிலையை மாற்றியவர் மித்தாலி ராஜ்.

2017:

பட மூலாதாரம், Getty Images

பெண்கள் கிரிக்கெட்டின் பக்கம் பார்வையாளர்களை திருப்பி, பல பெண்கள் கிரிக்கெட்டை தேர்ந்தெடுப்பதற்கு ஓர் உத்வேகமாக செயல்பட்டு வருபவர் மித்தாலி ராஜ். பெண்களுக்கான உலக கோப்பை போட்டியில் இறுதி ஆட்டம் வரை இந்திய அணியை வழிநடத்திச் சென்ற மித்தாலி, கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும் அனைவரின் மனதையும் வென்றார் என்பதை உறுதியாக கூறலாம்.

Presentational grey line

எளிய வீட்டிலிருந்து புறப்பட்ட மாபெரும் கனவு ‘அனிதா’

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்களை பெற்றும் நீட் தேர்வின் காரணமாக தான் மருத்துவராக வேண்டும் என்ற கனவு தகர்ந்ததால், தற்கொலை செய்துகொண்டார் அனிதா. அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள்.

2017:

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நீட் தொடர்பான வழக்கில் பங்கேற்ற அனிதா செய்தியாளர்களை சந்தித்து நீட் தேர்விற்கு எதிரான தன் நிலையை முன்வைத்தார்.

இருப்பினும், நீட் தேர்வின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால் அனிதாவின் கனவு தகர்ந்தது. இதை தொடர்ந்து அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணத்தை தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக மறப்பதற்கு வாய்ப்பில்லை.

Presentational grey line

சாதி எதிர்ப்பு போராளி கெளசல்யா

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கெளசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், கெளசல்யாவின் உறவினர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

இது ஆணவ படுகொலை என்று கூறி நீதிமன்றத்தில் நீதி கேட்டு போராடி வந்தார் கெளசல்யா. இந்த வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

2017: அனிதா முதல் மித்தாலி வரை

தனது கணவரின் மரணத்திற்காக நீதி கேட்டு போராடிய கெளசல்யா சாதி எதிர்ப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். இன்று சாதி எதிர்ப்பு போராளியாக பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார் கெளசல்யா.

Presentational grey line

நாப்கின்களுக்கான ஜிஎஸ்டி

’ஒரே நாடு ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் அமலுக்கு வந்தது சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி. இந்நிலையில், ஜிஎஸ்டி முறைப்படி 5 முதல் 28 சதவீத அளவில் தனித்தனிப் பிரிவுகளின் கீழ் பொருட்களுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டது. ஜிஎஸ்டி முறைக்கு எதிர்ப்பு அல்லது வரவேற்பு என்பதைக் காட்டிலும் அதுகுறித்த குழப்பமே பரவலாக நிலவியது.

2017: அனிதா முதல் மித்தாலி வரை

பட மூலாதாரம், Getty Images

அந்த வரிசையில் பெண்களுக்கு மிகவும் அத்தியாவசமான ஒன்றாக கருதப்படும் நாப்கின்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்பினர் பல போராட்டங்களை நடத்தினர்.

நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏற்பட்ட மறுசீரமைப்பிலும் நாப்கின்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

நிர்மலா சீதாராமன்

2017:

பட மூலாதாரம், ALL INDIA RADIO

நாட்டின் முதல் முழு நேர பாதுகாப்புத் துறை பெண் அமைச்சராக கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் நிர்மலா சீதாராமன். 35 வருடங்களுக்குமுன் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.

பாதுகாப்புத் துறை என்பது வலிமை வாய்ந்த துறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Presentational grey line

#Me too (நானும்)

2017ஆம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேகில் #Me too மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

2017:

பட மூலாதாரம், @TARAOBRIENILLUSTRATION

2007ல் அமெரிக்க செயல்பாட்டாளரான தரனா பர்கே 'நானும்' என பொருள்படும் MeToo இயக்கத்தை முன்னெடுத்தார். அதுவே 2017ல் Me Too எனும் ஹேஷ்டேகாக மீண்டும் எழுந்தது.

ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீனின் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து இந்த ஹேஷ்டேக் மீண்டெழுந்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் முன்வந்து ஒற்றுமையை காண்பிக்கவேண்டும் என நடிகை அலிஸா மிலானோ ட்விட்டரில் பதிவிட்டதையடுத்து இந்த ஹேஷ்டேக் பலரின் கவனத்தை பெற்று பிரபலமடையத் துவங்கியது.

பாலியல் தொல்லைகளுக்கு ஆளானோர் தானாக முன்வந்து இது குறித்து பேசி, இப்பிரச்சனையின் தீவிரத்தை அனைவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று கோராப்பட்டதையடுத்து, பலரும் தாங்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை இந்த ஹாஷ்டேக்கின் மூலம் தெரிவித்தனர்.

Presentational grey line

ஹாதியா

காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் அதிகம் பேசப்பட்டார் ஹாதியா. தற்போதைய இந்த நவீன உலகத்திலும், தங்களது துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மறுக்கப்பட்டுதான் வருகிறது. அது மதத்தின் பெயராலோ அல்லது சாதியின் பெயராலோ பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது.

2017:

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

கேரளாவில் இந்து குடும்பத்தில் பிறந்த ஹாதியா இஸ்லாம் மதத்திற்கு மாறி இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஹாதியா மூளைச் சலவை செய்யப்பட்டார் என்றும், இது ’லவ் ஜிஹாத்’ என்றும் அவரின் தந்தை தெரிவித்தார்.

ஆனால், தன்னை மதம் மாறும்மாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று ஹாதியா தெரிவித்தார்.

Presentational grey line

இவான்கா டிரம்பின் ஐதராபாத் வருகை

இவான்கா டிரம்பின் ஐதராபாத் வருகை

பட மூலாதாரம், Getty Images

ஐதராபாத்தில் நடைபெற்ற உலக தொழில்முனைவோர் மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பங்கேற்றார். இம்மாநாட்டிற்கு பெரும் நிதிசெலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பெண் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்துவது இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக இருந்தது. இவான்காவின் வருகை அதற்கு மேலும் வலுசேர்த்தது.

Presentational grey line

பெண்களை முன்னிலைப்படுத்திய அறம், அருவி

2017:

பட மூலாதாரம், DREAM WARRIOR PICTURES/ ARUVI Film

முன்னணி கதாப்பாத்திரத்தில் ஆண் நடிகர்கள் நடித்தால் மட்டுமே திரைப்படம் வெற்றிப்பெறும் என்ற நிலையை மாற்றியது இந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்த அருவி மற்றும் அறம் திரைப்படங்கள். ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட இத்திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்ட கதை பின்னணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

பத்மாவதி

இந்த வருடத்தில் பரபரப்பை பஞ்சமில்லாமல் ஏற்படுத்தியது பத்மாவதி திரைப்படம். இந்த திரைப்படம் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மாவதியின் கதை என்று கூறப்படுகிறது. தாங்கள் தெய்வமாக மதிக்கும் பத்மாவதியை "தவறாக சித்தரிப்பதால்" இத்திரைப்படம் வெளிவரக்கூடாது என்று தீவிர வலதுசாரி இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2017:

பட மூலாதாரம், Getty Images

இத்திரைப்படத்தில் பத்மாவதியாக நடித்துள்ள தீபிகாவின் மூக்கை அறுக்க வேண்டும் என்றும், அவரின் தலையை வெட்டி வருபவர்களுக்கு 10 கோடி பரி்சு என்றும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

கற்பனை கதாப்பாத்திரமான பத்மாவதிக்காக போராடும் குழுக்கள் இயல்பு நிலையில் இன்றைய அளவில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறை குறித்து போராடினால் நன்றாக இருக்கும் என்றே சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டது.

Presentational grey line

தலாக்...தலாக்...தலாக்...

மூன்று முறை தலாக் என்ற சொல்லை உச்சரிப்பதன் மூலம் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்ய வழி வகுக்கும் முத்தலாக் என்னும் நடைமுறை சட்ட விரோதமானது என இந்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

2017:

பட மூலாதாரம், MAHMUD HAMS

அதனை தொடர்ந்து, வியாழக்கிழமை (டிசம்பர் 28) முத்தலாக் எனப்படும் விவாகரத்து முறை சட்டவிரோதமாக்கும் மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :