You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: மெர்சல்
தந்தையைக் கொன்றவர்களை, மகன் பழிவாங்கும் கதைகள் தமிழ் சினிமாவில் பல நூறு வந்துவிட்டன. அவற்றில், கமல் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படமும் ஒன்று. பாணியில் விஜய் நடிப்பில் எடுக்கப்பட்ட படம்தான் மெர்சல்.
கதையின் நாயகர்களுக்கு தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவதைத் தாண்டியும் சில லட்சியங்கள் இருக்கின்றன என்பதுதான் ஒரே வித்தியாசம்.
படம் தொடங்கும்போது, சிலர் கடத்தப்படுகிறார்கள். ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்யும் மாறன் (விஜய்), விருது ஒன்றைப் பெற வெளிநாட்டுக்குச் செல்லும்போது, மிகப் பெரிய மருத்துவரான அர்ஜுன் சக்காரியா (ஹரீஷ் பெராடி) ஒரு மேஜிக் ஷோவில் கொல்லப்படுகிறார்.
முன்னதாகக் கடத்தப்பட்டவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். மாறனைக் கைதுசெய்து விசாரிக்க ஆரம்பிக்கிறது காவல்துறை.
அப்போதுதான், இந்த சம்பவங்களில் ஈடுபட்டது, மருத்துவர் மாறன் அல்ல, அவரைப் போலவே இருக்கும் வெற்றி (விஜய்) என்பது தெரியவருகிறது. காவல்துறை வெற்றியைத் தேடும் அதே நேரம், மிகப் பெரிய மருத்துவக் குழுமத்தின் தலைவரான டேனியல் ஆரோக்கியராஜும் (எஸ்.ஜே. சூர்யா) வெற்றியைத் தேடுகிறார்.
இந்தக் கொலைகளுக்கு என்ன காரணம், மாறனும் வெற்றியும் எப்படி ஒரே மாதிரி இருக்கிறார்கள், டேனியல் ஏன் வெற்றியைத் தேடுகிறான் என்பது மீதிக் கதை.
வில்லன்களால் கொல்லப்படும் தந்தை, ஆள் மாறாட்டம் செய்து பழிவாங்கும் மகன்கள் என்பது போன்ற கதையை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் தனித்துத் தெரிவது மருத்துவத் துறையை களமாகத் தேர்வுசெய்திருப்பதுதான்.
பொது மருத்துவ வசதி, பெரிய மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடுகள் போன்றவற்றை கதையின் ஊடாக தொட்டுக்காட்டுகிறார் விஜய். இது தொடர்பான வசனங்களுக்கு திரையரங்குகளில் பெரும் வரவேற்பும் கிடைக்கிறது.
ஆட்கடத்தல், வெளிநாட்டில் விறுவிறுப்பான காட்சிகள், இரண்டு நாயகர்கள், நாயகிகளின் அறிமுகம் என முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்திய இயக்குனர், இரண்டாவது பாதியில் பெரும் சோர்வை ஏற்படுத்துகிறார்.
மதுரையில் நடப்பதாகச் சொல்லப்படும் வெற்றிமாறனின் கதையில் வரும் நித்யா மேனன் வசீகரித்தாலும், ரொம்பவுமே நீளமாக இருப்பதால் பெரும் சோர்வை ஏற்படுத்துகிறது.
வெற்றி, மாறன், வெற்றி மாறன் என விஜய்க்கு மூன்று வேடங்கள். முதல் இரண்டு வேடங்களில் பெரிய வித்தியாசமில்லை. வெற்றி மாறன் பாத்திரத்தில் மட்டும் முந்தைய இரு பாத்திரங்களில் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கிறார் விஜய்.
மூன்று கதாநாயகிகள், இரண்டு வில்லன்கள், நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் படத்தை முழுக்க முழுக்க விஜய்யே காப்பாற்றுகிறார். சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் ரசிகர்களை குதூகலிக்கவைக்கின்றன.
காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என படத்தில் மூன்று நாயகிகள். அதில் வெற்றி மாறனின் மனைவியாக வரும் நித்யா மேனனுக்கு மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. காஜல் அகர்வால் இரண்டு காட்சிகளிலும் ஒரு பாடலிலும் வந்துவிட்டுப் போகிறார்.
சமந்தா, "தம்பி, ரோஸ் மில்க் வாங்கித் தர்றேன், வாரியா" என்று கொஞ்சலுடன் கேட்டு சில காட்சிகளில் மட்டும் வசீகரிக்கிறார்.
ஸ்பைடர் படத்தில் வில்லனாக அசரவைத்த எஸ்.ஜே. சூர்யா இந்தப் படத்திலும் வில்லனாக வந்து கலகலப்பூட்டுகிறார். சத்யராஜுக்கும் கோவை சரளாவுக்கும் மேலும் ஒரு படம்.
வெகு அரிதாகவே படங்களில் தலைகாட்டும் வடிவேலுவுக்கு இந்தப் படத்தில் குணச்சித்திர வேடம் என்றுதான் சொல்லவேண்டும். சில காட்சிகளில் லேசாக புன்னகைக்க வைக்கிறார். ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் யோகி பாபு கலகலப்பை ஏற்படுத்துவிட்டு காணாமல் போகிறார்.
அபூர்வ சகோதரர்கள், ரமணா படங்களை இணைத்து ஷங்கர் பாணியில் உருவாக்கப்பட்ட படம். விஜய் ரசிகர்கள் கொண்டாடக்கூடும். மற்ற திரை ரசிகர்களுக்கு மேலும் ஒரு சராசரியான திரைப்படம்.
பிற செய்திகள்
- வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங்
- 8 நாடுகளில் இருந்து அமெரிக்கா வர டிரம்ப் விதித்த தடைக்கு தடை போட்ட நீதிபதி
- தங்கம் உருவானது எப்படி? நியூட்ரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம்
- வட கொரியா பற்றி நாடகம்: தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல்
- ஷி ஜின்பிங் ஐந்தாண்டு ஆட்சி: சீனா பெற்றதும் இழந்ததும் 5 அட்டவணையில்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்