You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங்
வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பியடிக்கக்கூடாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்.
அதே நேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தடைகளைத் தளர்த்துவது உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சீனாவின் அரசியல், பொருளாதாரப் பாதையைத் தீர்மானிக்கும், அதிகாரம் மிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆளமுடியும் என்பதால் இந்தக் கட்சி மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
மாநாட்டில் பேசிய ஷி ஜின்பிங், "இந்தப் புது யுகத்தில் சீனப் பண்புகளோடு கூடிய சோஷியலிசம் நாட்டை உலகில் பெரிய சக்தியாக்கி இருக்கிறது," என்றார்.
2050 வாக்கில் "சோஷலிச நவீனமயமாக்கலை" அடைய இரண்டு கட்டத் திட்டம் ஒன்றை விவரித்த ஷி, பிரிவினை வாதத்துக்கு எச்சரிக்கைவிடுத்தார். ஷின்ஜியாங், திபெத், ஹாங்காங் ஆகிய பகுதிகளில் தோன்றியுள்ள இயக்கங்களை குறிக்கும் வகையில் அவரது எச்சரிக்கை அமைந்திருந்தது. தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்ற அரசின் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார் ஷி.
அதே நேரம், உலகத்துடனான தமது கதவுகளை சீனா மூடிக்கொள்ளாது என்று கூறிய ஷி, வெளிநாட்டு மூதலீட்டாளர்களுக்கான தடைகளை குறைப்பது உள்ளிட்ட மேலதிக பொருளாதார சீர்திருத்தங்கள் வரும் என்று உறுதியளித்தார்.
கட்சிக்குள் தாம் மேற்கொண்ட மாபெரும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட அலுவலர்கள் தண்டிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார் என்கிறார் பெய்ஜிங்கில் உள்ள பிபிசி செய்தியாளர். அந்த நடவடிக்கைகள் குறித்து அவர் குறிப்பிட்டபோது அரங்கில் பெரும் கைத்தட்டல் எழுந்ததாக ஒரு டிவிட்டர் பதிவு குறிப்பிடுகிறது.
2,000 கட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமே இந்த மாநாட்டு அரங்கில் அனுமதி உண்டு. 2012-ம் ஆண்டு நடைபெற்ற இதே போன்ற மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷி ஜின்பிங் தமது அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டார். எனவே, அவரே மீண்டும் தலைவராக நீடிக்கவே வாய்ப்பு உள்ளது.
அடுத்தவாரம் இம்மாநாடு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு முடிந்தவுடன், கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் நிலைக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் பெயர்கள் வெளியிடப்படும். இக்குழுவே நாட்டுக்கான முடிவுகளை எடுக்கும் உயர்மட்டக் குழுவாக இருக்கும்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்