You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: மேயாத மான்
தமிழ் சினிமா சில ஆண்டுகளாக பேய் பட அலையில் சிக்கித் தவித்ததில் ரொமான்டிக் காமெடி படங்கள் வருவதே முற்றிலும் குறைந்துவிட்டது. இப்போதுதான் மீண்டும் அவ்வகைப் படங்கள் தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றன. மேயாத மான் படத்தையும் அந்த வரிசையில் சேர்க்கலாம்.
மெல்லிசைக் குழு நடத்தும் 'இதயம்' முரளிக்கு (வைபவ்) தன்னுடன் படித்த மதுமிதா (பிரியா) மீது ஒருதலைக் காதல். அந்தக் காதலைச் சொல்வதற்குள் மதுமிதாவுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிடுகிறது. முரளியின் காதலைப் பற்றி தெரியவந்த பிறகு, ஒரு வருடம் தன் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறாள் மதுமிதா.
இதற்கிடையில் முரளின் தங்கையான சுடரொளிக்கு(இந்துஜா) அண்ணனின் நண்பர் வினோத் (விவேக் பிரசன்னா) மீது காதல். ஒரு வருட இடைவெளியில் முரளியும் மதுமிதாவும் யதேச்சையாக பழக ஆரம்பிக்க, காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். நிச்சயமான கல்யாணத்தை நிறுத்த கர்ப்பமாக முயல்கிறாள் மதுமிதா. ஆனால், காதலர்களுக்குள் சண்டை ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள்.
ஒரு காதல் கதையை கலகலப்பாக கொண்டுசெல்ல விரும்பியிருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். ஆனால், அதில் வெற்றிகிடைக்கவில்லை. முதல் பாதியில் படம் எங்கெங்கோ செல்கிறது. கதையின் மையப்புள்ளி எது என்பதை புரிந்துகொள்ளவே சிரமம் ஏற்படுகிறது.
காதல் கதையை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் முதல் பாதியில் கதாநாயகி மூன்று - காட்சிகளில் மட்டுமே வருகிறார். மற்ற காட்சிகளில் எல்லாம் கதாநாயகனும் அவரது நண்பர்களும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். இல்லாவிட்டால் பாடிக்கொண்டேயிருக்கிறார்கள். இதற்கு நடுவில் கதாநாயகனின் தங்கை காதல் என்ற இன்னொரு கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் இயக்குனர்.
இடைவேளைக்குப் பிறகு, கதாநாயகனும் நாயகியும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், திருமணம் நிச்சயமான பெண் எதற்காக முன்பு வெறுத்த நாயகனையே காதலிக்கிறாள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. அதேபோல, பொருந்தாத ஒரு காரணத்திற்காக சண்டைபோட்டுப் பிரிகிறார்கள்.
இடைவேளைக்குப் பிறகும் கதாநாயகனும் அவரது நண்பரும் உரையாடலில் இறங்குகிறார்கள். குடிக்கிறார்கள். பாடுகிறார்கள். காதல் காட்சிகளிலும் உணர்ச்சியே இல்லாத வசனங்களும் காட்சியமைப்பும் ஒன்றவிடாமல் செய்துவிடுகின்றன.
சில காட்சிகளில் வசனங்களின் மூலம் லேசாக சிரிக்க வைக்கிறார்கள். படத்தில் உள்ள ஏகப்பட்ட பாடல்களில் "என்ன நான் செய்வேன்" உள்ளிட்ட ஒன்றிரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், பின்னணி இசை பல சமயங்களில் படு மோசமாக இருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்தவர்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்கவர், வினோத்தாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா. அடுத்ததாக நாயகனின் தங்கையாக நடிக்கும் இந்துஜா. வைபவும் பிரியாவும் பாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.
படம் முடியும்போது, பிரதான கதையைவிட, துணைக் கதையாக வரும் காதல் கதை சற்றே கவர்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :