You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திரையரங்குகளில் புதிய கட்டணங்கள் அறிவிப்பு: மெர்சல் உள்ளிட்ட படங்கள் நாளை வெளியீடு
விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டணங்களுடன் மெர்சல், மேயாத மான் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, திரையரங்கக் கட்டணங்கள் தொடர்பாக பெரும் குழப்பம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் 120 ரூபாய்தான் அதிகபட்ச கட்டணமாக இருந்த நிலையில், ஜிஎஸ்டி வரியைச் சேர்த்து 153 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவந்தது.
மேலும், திரையரங்கக் கட்டணங்கள் சீரமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் புதிய கட்டண விகிதங்களை அறிவிக்க வேண்டுமென திரைத்துரையினர் கோரிவந்தனர்.
இந்த நிலையில் செப்டம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டிய கேளிக்கை வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரியும் புதிய கட்டண விகிதங்களை அறிவிக்கக் கோரியும் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிடப்போவதில்லையென தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து தமிழக அரசு, திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் திரையரங்கக் கட்டணங்களை அதிகபட்சமாக 150 ரூபாய் வரை வைத்துக்கொள்ளலாம் என்று கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், நகராட்சிப் பகுதிகளில் அதிகபட்சமாக 62.5 ரூபாய் மட்டுமே கட்டணமாக இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டது.
ஆனால், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் உள்ள அதே வசதிகளுடன் கூடிய திரையரங்குகள் நகராட்சிப் பகுதிகளில் இருந்தால் அவற்றுக்கு மிகக் குறைவான கட்டணம் இருப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது என அப்பகுதியைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்களிடம் அதிருப்தி ஏற்பட்டது. மேலும் கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டுமென்றும் கூறப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசு கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்தது. மேலும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அதிகபட்ச கட்டணம் 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஊராட்சிப் பகுதிகளில் அதிகபட்ச கட்டணம் 75 ரூபாயாக நிர்ணயித்து திங்கட்கிழமையன்று புதிய அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, மெர்சல், மேயாத மான், சென்னையில் ஒரு நாள் - 2 உள்ளிட்ட திரைப்படங்களுக்கு சில திரையரங்குகளில் முன்பதிவுகள் துவங்கியுள்ளன.
மெர்சல் திரைப்படத்தில் விலங்குகள் வரும் காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தீபாவளிக்கு வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி திங்கட்கிழமையன்று வழங்கப்பட்டது.
விரைவில் தணிக்கைச் சான்றிதழும் கிடைத்துவிடும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.
பிற செய்திகள்
பறவைகளுக்காக பட்டாசுகளை மறந்த கிராமங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்