மெர்சல் படத்திற்காக பிரத்யேக எமோஜியை வெளியிட்டுள்ள டிவிட்டர்

பட மூலாதாரம், Twitter
விஜய் நடித்து வரும் `மெர்சல்` படத்திற்கென பிரத்யேக எமோஜியை, டிவிட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு, டிவிட்டரில் எமோஜி வெளியிடப்படுவது இதுவே முதல்முறை என சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
பொதுவாக டிவிட்டர் இந்தியா நிறுவனம் மிகப்பெரிய நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கு இதுபோன்ற எமோஜிகளை வெளியிடுவது வழக்கம். குறிப்பிட்ட நிகழ்ச்சியின் ஹாஷ்டேக்கை டிவிட்டரில் தட்டச்சு செய்தால், அந்த எமோஜி தானாகவே தோன்றும். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது அகல் விளக்கு போன்ற எமோஜியை டிவிட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நண்பகல் 2 மணி அளவில் #mersal என்ற ஹேஷ்டாக்கிற்கு எமோஜியை வெளியிட்டுள்ளதாகவும், தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு இப்படி சிறப்பு எமோஜியை வெளியிடுவது இதுவே முதல் முறை எனவும் டிவிட்டர் இந்தியா நிறுவனம் தனது பக்கத்தில் பதிவிட்டது.

பட மூலாதாரம், Twitter
மெர்சல் படத்தின் `ஆளப் போறான் தமிழன்` என்ற பாடலில் இரண்டு கைகளை விஜய் தட்டுவது போன்ற ஒரு புகைப்படம் இடம் பெற்றிருக்கும். அதனை பிரதிபலிப்பது போல இந்த எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது.
#mersal மட்டுமல்லாது #Mersal#AalaporaanThamizhan #TSL100 #Thalapathy61 என இந்த படம் குறித்து எந்த ஹேஷ்டாக்கை தட்டச்சு செய்தாலும் மெர்சல் எமோஜி தோன்றுகிறது.
இந்த எமோஜி குறித்து நடிகர் விஜயும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள், மெர்சல் எமோஜி குறித்து பதிவிட்டு அதனை டிரெண்டாக்கினர்.

பட மூலாதாரம், Twitter
பெரும்பாலான ரசிகர்கள் `தமிழ் திரைப்படங்களில் முதன்முறையாக மெர்சல் படத்திற்கு இந்த பெருமை கிடைத்திருப்பதாக` பதிவிட்டிருந்தனர். மெர்சல் பையன் என்ற ரசிகர், `இனி எத்தனை படத்துக்கு எமோஜி பெற்றாலும், விதை போட்டது நாங்க` என பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Twitter
அதே நேரத்தில் விஜய் ரசிகர்களின் பதிவுகளுக்கு சிலர் எதிர் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். சினிமா பாபு என்ற ரசிகர்,`இதுவரை பிரத்யேக எமோஜி வெளியிடப்பட்ட எந்த இந்திய திரைப்படமும், பெரிய வெற்றி அடைந்ததில்லை` என பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Twitter
இதுவரை பிஃபிக்கர், டியூப் லைட், சப் ஹாரி மெட் சாஜல் போன்ற பல பாலிவுட் படங்களுக்கு இதுபோன்ற பிரத்யேக எமோஜிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்த திரைப்படம் ஒன்றுக்கு இதுபோன்ற எமோஜி வெளியிடப்படுவது இதுவே முதல்முறை.
இந்திய திரையுலகில் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த பாகுபலி-2 படத்திற்கு டிவிட்டர் எமோஜி வெளியிடப்படவில்லை. ஆனால் பேஸ்புக் பக்கத்தில் `பாகுபலி` படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்களை குறிக்கும் ஸ்டிக்கர்கள் வெளியாகி, பரவலான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள `மெர்சல்` திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் , மெர்சல் படத்தில் இடம்பெறும் பாடல்களை இசைத்துக்காட்ட உள்ளார்.
நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












