இந்தியா - சீனா மோதல் வெடித்தால் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவும் சீனாவும் தங்களது பகுதியில் எதிரெதிர் நாட்டுக்கு சமமாக அதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சியாக, தங்களது எல்லைப்பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றன.
இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சந்திப்பு பகுதிக்கு அருகே சாலை அமைக்கும் பணியில், இந்தியாவும் சீனாவும் மும்முரமாக உள்ளன.
டோக்லாம் எல்லைப் பகுதியில் நடந்து வரும் உள்கட்டமைப்பு பணிகளை இரு நாடுகளும் சந்தேகத்துடன் பார்க்கின்றன. இந்தியா சீனா இடையிலான தற்போதைய முட்டுக்கட்டைக்கு இந்தப் பணிகளே முக்கிய காரணமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தங்கள் ராணுவத்தை நவீனப்படுத்துவதுடன், 3500 கிலோ மீட்டர் தூரமுள்ள எல்லைப் பகுதியில் சாலை, பாலம், ரயில் பாதை மற்றும் விமான தளங்களை கட்டமைப்பதில் அதிகளவு பணத்தையும் மனித சக்தியையும் இரு நாடுகளும் செலவிடுகின்றன.
சீனாவின் பிரமாண்ட திட்டங்கள்
எல்லைப்பகுதியில் 15 முக்கிய விமான தளங்களையும், 27 சிறிய விமான நிலையங்களையும் சீனா கட்டியுள்ளது.
இதில், திபெத் பகுதியில் சீனா கட்டியுள்ள விமான தளம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், அனைத்து வானிலையின் போதும் விமானங்கள் செல்லவும் தரையிறங்கவும் அனுமதிக்கும் இந்தத் தளத்தில், மேம்பட்ட போர் ஜெட் விமானங்களைக் கையாள முடியும்.
திபெத் பகுதியில் விமான தளத்துடன், விரிவான சாலை மற்றும் ரயில் தொடர்புகளையும் சீனா கொண்டுள்ளது. இதன் மூலம், சீன படைகள் 48 மணி நேரத்தில் இந்திய எல்லையை அடையலாம் என கூறப்படுகிறது.
திபெத் பகுதியில், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சீனா 6 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளதாக "சீனா திபெத் ஆன்லைன்" என்ற இணையதளம் கூறுகிறது. திபெத்தில் ஏற்கெனவே உள்ள 90,000 கி.மீ நெடுஞ்சாலையுடன், மேலும் 355 கி.மீ தூரத்திற்கு உயர் தர நெடுஞ்சாலையை இந்த முதலீடு மூலம் சீனா அமைத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மிகவும் பிரபலமான சிங்காய்-திபெத் ரயில்வே பாதையுடன், கூடுதலாக இரண்டு ரயில்வே பாதைகளை 2014-ம் ஆண்டு சீனா துவங்கியது.
சீனாவுக்கு இணையாக முயற்சிக்கும் இந்தியா
"எல்லைப் பகுதியை வலிமைப்படுத்துவதில் சீனா முன்னணி வகிக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியா தனது தூக்கத்தில் இருந்து விழித்தது" என இந்தியாவின் "ஃபர்ஸ்ட் போஸ்ட்" இணையதளம் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சீனாவின் உள்கட்டமைப்புக்கு இணையாக, எல்லைப் பகுதியில் தனது உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக உள்ளது.
இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் 73 சாலைகளை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அதில் இதுவரை 30 சாலைத் திட்டங்கள் முடிவடைந்துள்ளன.
கரடு முரடான நிலப்பரப்பு, நிலம் கையப்படுத்துவதில் உள்ள பிரச்னை மற்றும் அதிகாரிகளின் தாமதத்தால் சாலை அமைக்கும் பணி மெதுவாக நடந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
எல்லைப் பகுதிக்கும் இந்தியப் படையினரையும், ஆயுதங்களையும் விரைவாக அனுப்ப உதவும் இந்தியாவிலே மிக நீளமான பாலத்தைக் கடந்த மே மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
அருணாசல பிரேதசத்தில் உள்ள தவாங் மற்றும் டிராங்க் பகுதியில் இரண்டு உயர்தர விமான இறங்கு தளத்தை இந்தியா கட்டி வருகிறது. அத்துடன் வட-கிழக்கு பகுதியில் உள்ள ஏற்கெனவே உள்ள ஆறு உயர்தர விமான இறங்கு தளத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா, தனது சீன எல்லைப்பகுதியில் 31 விமான தளங்களை கொண்டுள்ளது. அதில், அஸ்ஸாமில் உள்ள விமான தளங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றன.
பதட்டத்தை அதிகரிக்கும் எல்லை உள்கட்டமைப்பு
இரு நாடுகள் இடையே ஏதேனும் மோதல் ஏற்பட்டால், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளின் உதவியால் இரு நாடுகளாலும் விரைவாக தங்களது படைகளை அனுப்ப முடியும்.
இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் பொதுவாக வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு எதுவும் இல்லாத நிலையில், பிராந்திய கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த இந்த உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்த முடியும்.
சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியை கைப்பற்றும் நடவடிக்கையாக, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அவற்றின் கட்டுமானப் பணிகளைப் பார்க்கின்றன. ஒரு பெரிய திட்டத்தை இரு நாடுகளில் ஏதேனும் ஒன்று அறிவிக்கும்போது பதட்டங்கள் ஏற்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
சீனாவுக்குச் சாதகமா?
``சீனாவின் தளவாட திறனுக்கு இணையாக இந்தியாவால் வர முடியாது`` என சீனாவின் குளோபல் டைம்ஸில் கூறுகிறது.
சீனாவின் உயர்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியாவுக்குக் காட்டுவதற்காகவே, கடந்த மாதம் திபெத்தில் துப்பாக்கிச் சூடு பயிற்சி நடத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
``சீனப் படையினரின் எண்ணிக்கையும், ஆயுதங்களையும் பார்க்கும் போது, மேற்கு எல்லைகளைப் பாதுகாப்பது சீனாவுக்கு மிகவும் எளிதாக இருக்கும் எனத் தெரிகிறது`` என்று ஷாங்காய் சர்வதேச ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் வாங் தேஹுவா கூறியுள்ளார்.
``ராணுவத்தின் பயிற்சி மற்றும் ராணுவ தொழில்முறை இந்தியாவிற்குச் சாதகமாக உள்ளது. உள்கட்டமைப்பு, தளவாடங்கள், பொருட்கள் ஆகியவை சீனாவுக்கு சாதகமாக உள்ளது`` என ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன ராணுவம் குறித்த ஆராய்ச்சியாளர் ஸ்ரீகாந்த் கூறுகிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












