மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக களமிறங்கும் டேனியல் க்ரெய்க்

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாக டேனியல் க்ரெய்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தி லேட் ஷோ என்றழைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் ஜேம்ஸ் பாண்டாக மீண்டும் நடிப்பீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

நிகழச்சியின் தொகுப்பாளரான ஸ்டீஃபென் கோல்பெர்ட் இந்தக் கேள்வியை கேட்டவுடன், அதற்கு பதிலளிக்கும் வகையில், "ஆம்" என்று டேனியல் க்ரெய்க் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் 007 ஆக நடித்த டேனியல் க்ரெய்க் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்ற கேள்விக்கு தொடர்ந்து பதிலளிக்க மறுத்து வந்தார்.

ஆனால், அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, "இன்னும் சில மாதங்களில்" ஜேம்ஸ் பாண்டாக மீண்டும் வருவேன் என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், "நாங்கள் அதுகுறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ள அவர், "மீண்டும் நடிக்க நான் விரும்புகிறேன், எனக்கு சிறிய இடைவேளை வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் 25-ஆவது பாகம் அதாவது அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் 2019-ம் ஆண்டு நவம்பரில் வெளியாகவுள்ளது.

உளவாளியாக களமிறங்கும் இறுதியான படம் என்றும் டேனியல் க்ரெய்க் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நான் ஒரு வெற்றியோடு வெளியேற வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஐந்தாவது முறையாக நடிப்பதற்கு பதிலாக எனது மணிக்கட்டை நான் அறுத்துக் கொள்வேன் என்று 2015-ல் அவர் அறிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் அதற்காக அவர் மன்னிப்பும் கோரினார்.

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஏழாவது நடிகராக, தற்போது 49 வயதாகும் டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார்.

1962-ல் ஸ்காட்லாந்தை சேர்ந்த நடிகர் சீன் கொனேரி முதன் முறையாக அந்த கதாபாத்திரத்தில் நடித்தார், ஏழு பாகங்களில் நடித்த அவர் 1983-ல் வெளிவந்த நெவர் ஸே நெவர் அகெய்ன் என்ற படத்தோடு வெளியேறினார்.

1973-ல் இருந்து 1985 வரை ரோஜெர் மூர் என்பவரும் ஏழு பாகங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார்.

1960-களில் டேவிட் நிவேன் ஒரு முறையும், ஜார்ஜ் லாஸென்பை என்பவர் ஒரு முறையும் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளனர்.

1987-ல் வெளிவந்த டேலைட்ஸ் மற்றும் 1989-ல் வெளிவந்த லைசென்ஸ் டு கில் என்ற படத்தில் டிமோத்தி டால்ட்டன் என்பவர் நடித்தார்.

பின்னர் 2006-ம் ஆண்டு வெளிவந்த கேசினோ ராயல் படத்தில்தான் டேனியல் க்ரெய்க் அறிமுகமானார்.

இதனையடுத்து, 2008-ம் ஆண்டில் வெளிவந்த குவாண்டம் ஆஃப் சொலாஷ், 2012-ல் வெளிவந்த ஸ்கைஃபால், 2015-ல் வெளிவந்த ஸ்பெக்டர் ஆகிய படங்களில் டேனியல் க்ரெய்க் உளவாளியாக நடித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :