You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் ஆசிரியர் நீக்கம்
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக செயல்பட்டுவந்த "நமது எம்.ஜி.ஆர்" ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக சசிகலா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மருது அழகுராஜிடம் கேட்டபோது, அந்தச் செய்தியை உறுதிசெய்த அவர், "2008ஆம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதாவால் பணியில் அமர்த்தப்பட்டேன். இப்போது எழுதுகோல் பறிக்கப்பட்டிருக்கிறது" என்று மட்டும் தெரிவித்தார்.
சென்னையில் புதன்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, "நிர்வாகத்தின் கொள்கைகளை மீறி அவர் செயல்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.
சில நாட்களுக்கு முன்பு நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், "காவி அடி, கழகத்தை அழி" என்ற பெயரில் கவிதை ஒன்று வெளியானது. அந்தக் கவிதையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
மேலும், "மோடியா, இந்த லேடியா? எனச் சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்ததும் ஈரிலையை முடக்கி இன்னல்கள் தந்ததும்" என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அந்த கவிதையை "சித்ரகுப்தன்" என்ற பெயரில் மருது அழகுராஜ் எழுதியிருந்தார். இந்த நிலையில், ஆசிரியர் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் நீக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் ஆளும் அதிமுக, தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக சசிகலா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் என மூன்று அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. இதில் "நமது எம்.ஜி.ஆர்" நாளிதழ், டிடிவி தினகரன் தரப்பு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இதில், முதல்வர் பழனிச்சாமி அணியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சொல்படி செயல்படுவதாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இரு தரப்பினரும், தொடர்ந்து பிரதமர் மோதியைச் சந்தித்தும் வருகின்றனர்.
அண்மையில் நடந்து முடிந்த குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களின்போதும், மூன்று அணியினரும் பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களான ராம்நாத் கோவிந்தையும், வெங்கய்ய நாயுடுவையும் முறையே ஆதரித்தன.
ஆனால், டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம் பழனிச்சாமி அணியினர், யாருக்கோ பயப்படுவதாக குற்றம்சாட்டி வந்தார். மேலும், நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் தொடர்ந்து மத்திய அரசை விமர்சிக்கும் கட்டுரைகளும் வெளியாகி வந்தன.
இந்நிலையில்தான், அந்தப் பத்திரிகையின் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் நீக்கப்பட்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :