You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி.டி.வி.தினகரன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை ஒதுக்கிவைப்பது என கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட முடிவில் உறுதியாக இருப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மூத்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழகத்தின் பெரும்பான்மையான அமைச்சர்கள் நடத்திய கூட்டத்திற்கு பிறகு இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் உழைப்பால், பிரச்சாரத்தால் அமைக்கப்பட்ட இந்த ஆட்சி, நல்லாட்சியாக தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் ஒற்றுமையோடு வழி நடத்திச் சென்று கொண்டிருக்கின்றோம் என்றும் அப்போது அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
கட்சியிலிருந்துடி.டி.வி.தினகரன் ஒதுங்கியிருக்க வேண்டும்
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவை மதித்து, நான் கட்சியிலிருந்து ஒதுங்கி இருப்பேன் என டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார், அதன்படியே அவர் அதே நிலைப்பாட்டை தொடர வேண்டும் என்றும் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
அத்தோடு அதிமுகவின் அரசாங்கம் முழுமையாக நிறைவு செய்து அடுத்த தேர்தலிலும் ஆட்சியை அமைக்கும் என்றும் ஜெயக்குமார் நம்பிக்கை வெளியிட்டார்.
குறிப்பாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவை, டி.டி.வி.தினகரன் நேரில் சென்று சந்தித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், தமிழக அமைச்சர்கள் பெரும்பாலானோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டுள்ள இந்த கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 14-ஆம் தேதி கூடுவதாக அறிவிப்பு வெளிவந்திருக்கும் இந்த நேரத்தில், இது போன்ற கருத்துக்கள் வெளியாவதும் கவனிக்கத்தக்கது.
தமிழக அமைச்சர்களின் இந்த கருத்துக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அமைச்சர்கள் மட்டுமே கூடி எடுக்கும் முடிவுகளுக்கு, கட்சியில் உள்ள அனைவரும் கட்டுப்பட வேண்டும் என கோருவதும் ஏற்க முடியாதது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க சென்றுள்ள டி.டி.வி.தினகரனுடன் அதிமுக (அம்மா) அணியை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் உள்ளனர்.
தற்போதைய நிலையில் இவர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களாக கருதப்படுகின்றனர்.
சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், தான் கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தது உண்மைதான் என்று கூறினார்.
ஆனால், ஒன்றரை மாத காலத்திற்கு பிறகும் இரண்டு அணிகளும் ஒன்றிணைவதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், அதனால் கட்சியை வலிமைப்படுத்த தாம் தீவிரமாக செயல்பட போவதாகவும் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்