You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய ஆணையம் மீது ரோஹித் வெமுலா சகோதரர் பகிரங்க புகார்
"நாங்கள் தலித் என்று சொல்வதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறையால் அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை" என்று கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
ரோஹித் வெமுலாவின் தற்கொலை குறித்து விசாரிக்க மனிதவள மேம்பாட்டுத் துறையால் ஓய்வுபெற்ற நீதிபதி ரூபன்வால் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த ஆணையத்தால் செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரோஹித் வெமுலாவிற்கு தனிப்பட்ட முறையில் பிரச்சனைகள் இருந்ததாகவும், அவர் மன அழுத்தம் மற்றும் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் காரணமில்லை என்றும் அவர் தலித் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரோஹித் வெமுலாவின் சகோதரர், ராஜா வெமுலா பிபிசியிடம் பேசிய போது, நாங்கள் தலித்தா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை அந்த கமிட்டிக்கு இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் எதன் அடிப்படையில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டது தனிப்பட்ட காரணங்களால் என்று அவர்கள் கூறுகிறார்கள் என்று கேள்வியெழுப்பிய அவர், கமிட்டியைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்திடம் பேசவில்லை என்றும் அவர்கள் பாஜக அமைச்சர்களையும், பல்கலைக்கழக அதிகாரிகளையும் பாதுகாக்க இவ்வாறான அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் ரோஹித் வெமுலா மன அழுதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது குறித்து பேசிய ராஜா வெமுலா, "இது முற்றிலும் பொய், ரோஹித் சுறுசுறுப்பான மனிதர், அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படவில்லை, படிப்பில் நல்லமுறையில் தேர்ச்சி பெற்று வந்தார்" என்று தெரிவித்துள்ளார் ராஜா வெமுலா.
"நாங்கள் தலித் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்று மாவட்ட மாஜிஸ்திரேட்டும், தாழ்த்தப்பட்டோர்களுக்கான தேசிய ஆணையமும் சான்றிதழ் அளித்துள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில், ரோஹித்தின் தாய் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் அவரின் தந்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ராஜா, நாங்கள் தொடக்கத்திலிருந்தே எங்கள் தாயுடன்தான் வாழ்ந்து வருகிறோம்; சிறுவயதிலிருந்து எங்கள் தந்தையுடன் நாங்கள் இல்லை. எனவே உச்சநீதிமன்றத்தின் அறிக்கைப்படி நாங்கள் எங்களது தாயின் சாதியை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்