'நான் கருப்பு கமல் ஹாசனா?' விளக்குகிறார் நடிகர் விஜய்சேதுபதி

''இயக்குனராகும் ஆசை நிச்சயமாக உள்ளது. ஆனால், நேரம் இல்லை. இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. அப்படி கற்றுக் கொண்டு அதற்கான நேரம் வரும் போது நான் திரைப்படங்களை இயக்க முடியும்'' என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.

விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகுவது குறித்த தனது உணர்வை விவரித்த விஜய்சேதுபதி, ''இத்திரைப்படம் வெளியாவது குறித்து மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே சமயம் பயமாகவும் உள்ளது. இப்படம் குறித்த அதிகப்படியான எதிர்பார்ப்பு மிகவும் பயமுறுத்துகிறது'' என்று தெரிவித்தார்.

''இது வழக்கமான கதை அல்ல. வித்தியாசமான, அதே சமயம் கேளிக்கை ரீதியான திரைப்படம். இது ரசிகர்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற அச்சம் உள்ளது'' என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.

விஜய் சேதுபதி இயக்குனர்களை தேர்ந்தெடுக்கிறாரா அல்லது இயக்குனர்கள் விஜய் சேதுபதியை தேர்ந்தெடுக்கிறார்களா?

இக்கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, ''இரண்டும்தான். கண்ணதாசனின் பாடலான கொடியசைந்ததும் காற்றசைந்ததா அல்லது காற்றசைந்தவுடன் கொடி அசைந்ததா என்பது போல் இரண்டும்தான் இயல்பாக அமைகிறது'' என்று தெரிவித்தார்.

நடிகர் மாதவனோடு நல்ல புரிதல் இருந்தது

நடிகர் மாதவனோடு பணியாற்றிய அனுபவம் குறித்து பதிலளித்த விஜய் சேதுபதி, ''மாதவன் என்னை விட மிகவும் சீனியர் நடிகர். பல பெரிய நடிகர்கள், இயக்குநர்களோடு பணியாற்றிய அவரோடு நடிப்பது எனக்கு வசதியாக இருந்தது. இயக்குனர் மற்றும் சக நடிகர்களோடு நல்ல புரிதல் இருந்தது'' என்று தெரிவித்தார்.

விஜய்சேதுபதிகருப்பு கமல்ஹாசனா?

பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி அடுத்த கமல் ஹாசனாக உருவெடுக்க முடியும் என்று மாதவன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய்சேதுபதியை கருப்பு கமல் ஹாசன் என்று கூறலாமா என்று கேட்டதற்கு, ''ஒரு கமல் ஹாசன்தான் உள்ளார். கமல் ஹாசன் ஒரு மிகப்பெரிய சாதனையாளர். அவரோடு என்னை ஒப்பிடக்கூடாது. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்'' என்று விஜய்சேதுபதி குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக அரசியல் ரீதியான கருத்துக்களை நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டு வருவது குறித்து பதிலளித்த விஜய் சேதுபதி, ''இந்த நாட்டில் உள்ள மற்ற குடிமக்களை போல கமல் ஹாசனுக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. அது அவரது உரிமை. அதில் தவறு எதுவும் இல்லை'' என்று தெரிவித்தார்.

இயக்குநராக விருப்பமுண்டு; ஆனால் நேரமில்லை

இயக்குநராகும் விருப்பம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''இயக்குனராகும் ஆசை நிச்சயமாக உள்ளது. ஆனால், நேரம் இல்லை. இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது. அப்படி கற்றுக் கொண்டு அதற்கான நேரம் வரும் போது நான் திரைப்படங்கள் இயக்க முடியும்'' என்று தெரிவித்தார்.

புஷ்கர்-காயத்ரியின் முந்தைய திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களின் சிந்தனை ஓட்டம் எனக்கு பிடித்திருந்தது என்றும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்