You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் பற்றி அதிகம் தெரியாதது ஏன்?
பிகார் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய மக்களில் பலரும் கேள்விப்பட்டிராத இவரை ஆளும் பாரதீய ஜனதா கட்சி, குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவரைப்பற்றி தாம் ஏதும் கேள்விப்பட்டதே இல்லை என்கிறார் தலித் எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான சந்திராபன் பிரசாத்.
"தலித்துகளைப் பற்றி நான் 27 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆனால், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதுதான் ராம்நாத் கோவிந்த் பற்றி நான் கேள்விப்பட்டேன்,"என்கிறார் சந்திராபன் பிரசாத்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோவிந்த் குறித்து தமக்குத் தெரியாது என்று சந்திராபன் மட்டுமே சொல்லவில்லை. கோவிந்த் வேட்பாளராவது குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும் என்று ஓர் ஊடகத்தில் கூறும் அளவுக்கு இவரது தேர்வு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
இவர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, 24 மணி நேரத்தில் இவரது பெயர் 5 லட்சம் முறை தேடப்பட்டதாக அந்த ஊடகம் தெரிவித்தது.
வேட்பாளர் அறிவிப்பின்போது கோவிந்தை ஒரு தலித் என்று குறிப்பிட்ட அமித் ஷா, அவர் தமது அரசியல் வாழ்வில் இந்த உயர்ந்த இடத்துக்கு பல போராட்டங்களை சந்தித்தே வந்திருக்கிறார் என்றார் பாஜக தலைவர் அமித் ஷா.
பிராமணர்களை முன்னிலைப்படுத்தும் சாதியமைப்பை பாஜக பாதுகாப்பதாகவும், சாதி அடுக்கில் கீழே வைக்கப்பட்டுள்ள தலித் சமூகம் குறித்து பாஜக அக்கறை காட்டாமல் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துவரும் நேரத்தில் பாஜக கோவிந்தை நியமித்தது.
இவர் ஐந்தாண்டுகள் வகிக்கவுள்ள குடியரசுத் தலைவர் பதவி அலங்காரப் பதவிதான் என்றபோதும் தேர்தல்களில் கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதபோது குடியரசுத் தலைவர் பதவி முக்கியத்துவம் பெறும்.
தலித் சமூகத்தின் பிரதிநிதியாக அவர் ஏதும் பணியாற்றியிருக்கிறாரா என்றும், அப்படி செய்திருந்தால் அந்தப் பணிகள் குறித்தும் தங்களுக்குத் தெரியாது என்றும் கூறுகிறார்கள் தலித் பிரமுகர்கள்.
"தலித்துகள் குறித்த கருத்தரங்கங்களுக்கு செல்கிறேன். அவர்கள் குறித்த கட்டுரைகள் எழுதுகிறேன். தொடர்புடைய தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிறேன். தலித் விவகாரங்கள் தொடர்பாகவே செயல்படுகிறேன். ஆனால் கோவிந்த் குறித்து எனக்கு எதுவும் தெரியாது," என்கிறார் சந்திராபன் பிரசாத்.
தலித் பிரச்சினைகளில் அவர் எப்போதும் ஒரு நிலைப்பாடு எடுத்து நான் கேள்விப்பட்டதில்லை. இது என் அறியாமையாகக்கூட இருக்கலாம். அவர் படித்தவராகவும் மனசாட்சியுள்ளவராகவும் தெரிகிறார். ஆனால், தலித்துகள் மீதான வன்கொடுமைகள் குறித்து அவர் கருத்து ஏதும் தெரிவித்து நான் கேள்விப்பட்டதில்லை என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு தலித் எழுத்தாளர்.
அலங்காரப் பதவிக்கு ஒரு தலித்தை நியமிப்பது ஒரு குறியீடு மட்டுமே. கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவர் ஆனதால் தலித் சமூகத்துக்கு ஏதும் உதவியாக இருந்ததா? கட்சியின் கொள்கை தலித்துகளுக்கு ஆதரவாக இல்லாவிட்டால் இத்தகைய நியமனங்களால் ஏந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றார் அவர்.
"அரசியலில் உயரம் ஏதும் இல்லாத, ஊடகங்களில் தோன்ற விரும்பாத, அரசியலிலும், சித்தாந்தத்திலும் மோதியோடு ஒன்றி நிற்கிற ஒருவரை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் வரதராஜன்.
துணி விற்பவரின் மகனான கோவிந்த் எப்போதும் தலித் பிரச்சினைகளுக்காக முன்னின்று வேலை செய்ததாகத் தமக்கு நினைவில்லை என்கிறார், கோவிந்தின் வீட்டுக்கு அருகே நீண்டகாலம் வசித்தவரும் சக தலித்துமான கான்பூரைச் சேர்ந்த ஜகேஷ்வர்.
கோவிந்த் அதிகம் பேசப்படாதவராகவே இருந்தார் என்று ஒப்புக்கொள்கிறார் கான்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளரான ரமேஷ் வர்மா. சர்ச்சைக்குரியவராக விரும்பாததால் அவர் எப்போதும் ஊடகங்களை விட்டுத் தள்ளியே இருந்தார். தலித் நிகழ்ச்சிகளுக்கு அவர் சென்று பார்த்ததில்லை. அவர் தம்மை எப்போதும் தலித் தலைவராக முன்னிறுத்தியதே இல்லை என்கிறார் அவர்.
அவர் பேசுவதைப் பதிவு செய்திருக்கும் சில யூ டியூப் விடியோக்கள், அவர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் சரளமாகப் பேசக்கூடியவர் என்பதைக் காட்டுகின்றன. அவர் அமைதியானவர், சர்ச்சைகளில் இருந்து தள்ளியே இருப்பவர் என்கிறார்கள் பி.பி.சி.யிடம் பேசிய சில செயற்பாட்டாளர்கள்.
பாஜக-வின் சித்தாந்த ஊற்றும் வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சின் ஈடுபாடுமிக்க உறுப்பினரான கோவிந்த், ஒரு வழக்குரைஞர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இரண்டு முறை உறுப்பினராகப் பதவி வகித்தவர். பாஜகவின் செய்தித்தொடர்பாளராக இருந்தவர். அந்தக் கட்சியியின் தலித் அமைப்பு ஒன்றில் தலைமை வகித்தவர். கட்சியின் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். "ஆர்.எஸ்.எஸ். உடன் அவருக்கிருந்த நெருக்கம் அவர் பல பதவிகளைப் பெறக் காரணமாக இருந்தது," என்று பிபிசியிடம் கூறினார் பாஜகவில் உள்ள மூத்த தலித் தலைவரான சஞ்சய் பஸ்வான்.
"மோதியும் கோவிந்தும் ஒருவரை ஒருவர் நீண்டகாலமாக அறிந்தவர்கள். தம்மோடு இயல்பில் ஒத்துப்போகிற ஒருவரை பிரதமர் தேர்ந்தெடுத்தால் அதில் தவறு ஏதும் இல்லை," என்கிறார் அவர்.
கோவிந்த் அறியப்படாதவராக இருப்பதற்கு ஊடகங்களின் சாதி விருப்பு வெறுப்பே காரணம் என்று கூறும் சஞ்சய் பாஸ்வான், தலித் சமூகத்தை சேர்ந்த செய்தித்தொடர்பாளர்களை இந்திய ஊடகங்கள் அதிகம் தொடர்புகொள்வதில்லை. கோவிந்த்தின் பல சாதனைகளை ஊடகங்கள் பேச மறுக்கின்றன என்கிறார் அவர்.
"தலித் தலைவர் பி.ஆர்.அம்பேத்கருக்கு நினைவுச் சின்னங்கள் நிறுவவும், நல அமைச்சகம் என்ற பெயரை சமூகநீதி மற்றும் அதிகாரம் பெறல் துறை என்று பெயர் மாற்றவும் காரணமாக இருந்தவர் கோவிந்த். தலித்துகளுக்காக பல வேலைகளைச் செய்தவர்," என்கிறார் சஞ்சய் பாஸ்வான்.
கோவிந்த் யார் என்ற கேள்வி சிறுபிள்ளைத்தனமான இந்திய அரசியல் இதழியல் மீதான விமர்சனமாக இருக்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பாஜக-வுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் இதழாளர் ஸ்வபன்தாஸ் குப்தா.
அதே நேரம் கோவிந்த் முற்றிலும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவரும் அல்ல. "இஸ்லாமும், கிறிஸ்தவமும் நாட்டுக்கு அந்நியமானவை" என்று கூறிய கோவிந்த் மத, மொழிச் சிறுபான்மையினரில் பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியிலும் பின்தங்கிய மக்களுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைக்கும் அறிக்கை ஒன்றை ரத்து செய்யவேண்டும் என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாக 2010-ல் வெளியான இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
கோவிந்த்தின் இந்த அறிக்கை அரசியல்ரீதியான ஒன்று. இன்னமும் பாஜக-வின் நிலைப்பாடு இதுதான். எனவே இந்தக் கோணத்தில் கோவிந்தின் அறிக்கையைப் பார்க்க வேண்டும் என்கிறார் சஞ்சய் பாஸ்வான்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்