You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் யார் ?
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக தலித் குடும்பத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவித்திருக்கிறார்.
தற்போது பிஹார் மாநில ஆளுனராக பதவியில் இருக்கும் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் வேட்பாளராக களம் இறங்கலாம் என்பது குறித்த ஊகங்கள் எதுவும் பெரிய அளவில் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவரைப் பற்றிய தகவல்கள் அனைவருக்கும் தெரியாது.
1945 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்த ராம்நாத் கோவிந்த், கான்பூர் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பட்டமும் (பி.காம்), எல்.எல்.பி பட்டமும் பெற்றார்.
பிஹார் மாநில ஆளுனரின் வலைத்தளத்தில் காணப்படும் தகவல்களின்படி, 1977 ஆம் ஆண்டு முதல் 1979 வரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராக ராம்நாத் கோவிந்த் பணிபுரிந்திருக்கிறார்.
பின்னர் 1980லிருந்து 1993வரை அவர் உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசின் வழக்குரைஞராக இருந்தார்.
டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்த ராம்நாத் கோவிந்த், 1971 இல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தம்மைப் பதிவு செய்து கொண்டார்.
1994 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பழங்குடியினர், உள்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சமூக நீதி, சட்டம் - நீதி அமைப்பு மற்றும் மாநிலங்களவை குழு என பல கமிட்டிகளில் உறுப்பினராக ராம்நாத் கோவிந்த் பணியாற்றியிருக்கிறார்.
செயலூக்கம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் ஆளுனர் குழுவின் உறுப்பினராகவும் கோவிந்த் அங்கம் வகித்துள்ளார். பல நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் கோவிந்த், 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் உரையாற்றினார்.
தலித் சமூகத்தின் பிரதிநிதியாக பார்க்கப்படும் கோவிந்த், மாணவ பருவத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் கல்வி தொடர்பான பல பிரச்சனைகளை ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவையில் முன்வைத்திருக்கிறார். வழக்கறிஞரான கோவிந்த், ஏழை தலித் மக்களுக்காக இலவசமாக சட்ட உதவிகளை செய்தவர் என்றும் கூறப்படுகிறது.
1974 ஆம் ஆண்டு திருமணம் புரிந்த சவிதா - கோவிந்த் தம்பதியினருக்கு பிரசாந்த் என்ற மகனும், ஸ்வாதி என்ற மகளும் உள்ளனர்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்