You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெரும்புள்ளிகளை எப்படி வீழ்த்தினார் ராம்நாத் கோவிந்த்?
- எழுதியவர், ராம் பகதூர் ராய்,
- பதவி, மூத்த பத்திரிகையாளர்
பாரதீய ஜனதா கட்சி, குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை தேர்ந்தெடுத்திருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பலரின் பெயர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பரிசீலிக்கப்பட்டு வந்தாலும், அதில் ராம்நாத் கோவிந்தின் பெயர் இடம்பெறவேயில்லை.
குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான பரிசீலனையில் பலர் இருந்தாலும், வேட்பாளர் தொடர்பாக இரண்டுவிதமான ஊகங்கள் நிலவின. தென்னிந்தியாவில் காலூன்றவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி விரும்புவதால், குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான முன்னுரிமை தென்னிந்தியர்களுக்கே கொடுக்கப்படும் என்பதும் ஓர் ஊகமாக இருந்தது.
ஆனால், பரிசீலனையிலேயே இல்லாத ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானதாக இருந்தாலும், அவரை தேர்ந்தெடுத்தது ஆளும் கட்சியின் சிறப்பான முடிவு.
திடீரென்று ராம்நாத் கோவிந்த், மற்றவர்களை பின் தள்ளிவிட்டு, எப்படி முன்னேறினார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுவது இயல்புதான்.
ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக மூன்று விஷயங்களை முக்கியமானதாக சொல்லலாம். பீகார் மாநில ஆளுநராக பணிபுரிவது மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் மீதான விசுவாசம். மூன்றாவதாக இருந்தாலும் முக்கியமான காரணம் ராம்நாத் கோவிந்த் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த மூன்று விஷயங்களும் அவருக்கு ஆதரவாக உள்ளன.
அரசியல்ரீதியாக பார்த்தால், ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உத்தரப்பிரதேச மாநில அரசியலும் முக்கியமான பங்கு வகிக்கிறது. அங்கு யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்றதும், இனரீதியான மோதல் தொடங்கிவிட்டது.
தலித் அரசியல்
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஒரு துறவி. அனைத்தையும் துறந்த துறவியை எந்தவொரு சாதி, மதம், இனத்துடன் தொடர்புபடுத்தக்கூடாதுதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மோதல், உண்மையில் ராஜபுத்திரர்களுக்கும், தலித்துகளுக்கும் இடையிலானது.
சாஹ்ரன்புரில் ஒரு சம்பவத்தில் தொடங்கிய மோதல், மாநிலம் முழுவதும் பரவிவிட்டது. மாநிலம் முழுவதும் சாதிய மோதல்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதிலும், ராஜபுத்திரர்களுக்கும், தலித்துகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தலித்துகளின் எதிர்ப்பு மனோநிலையை சமாளிக்க, தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக களம் இறக்கியிருக்கிறது மாநிலத்திலும், மத்திய அரசிலும் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருக்கும் பாரதீய ஜனதா கட்சி.
அங்கு, சந்திரசேகர் இளைஞர் தலைவராக அடையாளம் காணப்படுகிறார், அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் இடத்தை பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு தலித்துகள் ஆதரவளித்தார்கள். அவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், தலித் சமூகத்தில் இருந்து ஒரு தலைவரை முன்னிறுத்தும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தலித் ஒருவரை நாட்டின் தலைமகனாக்கிவிட்டோம் என்ற பெருமையை பெற இது உதவும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
பெரும்பான்மை கிடைக்கும்
இதுபோன்ற காரணங்களால்தான், முன்பு பரிசீலிக்கப்பட்ட பெயர்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு, ராம்நாத் கோவிந்தின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அம்பேத்கரின் பெயரை சொல்வதற்கான வாய்ப்பை பிரதமர் நரேந்திர மோதி எப்போதுமே தவறவிட்டதில்லை. எனவே, அதுவும் ராம்நாத் கோவிந்துக்கு சாதகமான அம்சமாகிவிட்டது.
மற்றொருபுறத்தில் பார்த்தால், குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டது. போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கோவிந்த் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருப்பதால், அவரின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
ராம்நாத் கோவிந்திற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ் குமாரின் ஆதரவு கிடைக்கும். பிகார் ஆளுவராக இருக்கும் ராம்நாத் கோவிந்துக்கும், நிதிஷ்குமாருக்கும் நல்ல புரிதல் உள்ளது.
குறிப்பாக, கல்வி நிலையை மேம்படுத்த இருவரும் ஒருமித்த சிந்தனையுடன் செயல்படுகின்றனர். அண்மையில் பிகாரில் துணைவேந்தர்கள் நியமனத்தின்போது எந்தவிதமான சர்ச்சைகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்