கமல் - தமிழக அமைச்சர்களிடையை வலுவடையும் வார்த்தைப் போர்!

ஊழல் புகார்கள் குறித்து ஆதாரம் இருந்தால், அதை அமைச்சர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் கமல்ஹாசன் மீது தனிப்பட்ட்ட முறையில் எதிர்தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

சென்னையில் இன்று விமான நிலையத்தில் பேசிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், ஏக் துஜே கேலியே என்ற இந்திப் படத்தில் நடித்து இந்தி புகழ் பரப்பிய நடிகர் கமல் என்று குறிப்பிட்டார்.

காவிரி நதி நீர் பிரச்சனை, கச்சத் தீவு, இட ஒதுக்கீடு, முல்லைப் பெரியாறு அணை போன்ற தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகள் ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் நிலையில், எந்தப் பிரச்சனைக்கு எப்போது குரல் கொடுத்தார் என்பது தெரியவில்லை என்றார் ஜெயகுமார்.

கமல்ஹாசனுக்கு ஸ்டாலினும் ஓ. பன்னீர்செல்வமும் ஆதரவளிப்பதைப் பார்த்தால், இவர்கள் மூவரும் ஒரு கூட்டணி வைத்திருப்பதைப் போலத் தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

தவறுகள் இருந்தால், அவர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறினார். மேலும், ரசிகர்கள் கண்ணியமாக புகார்களை அனுப்ப வேண்டுமென்று கூறிவிட்டு, அமைச்சர்களை கல்லுளிமங்கர்கள் என்று கூறுவது சரியா என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

தமிழகத்தில் தலைவராக வர வேண்டுமென்றால் அவர் நல்ல குடும்பத் தலைவராக இருந்திருக்க வேண்டும் என கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியிருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் கமல் ஹாசனின் அறிக்கை குறித்து கேட்டபோது, "நல்ல ஆணாகா இருந்தால், அவர் தன் மனைவிக்கு நல்ல கணவராக இருந்திருக்க வேண்டும். மகளுக்கு நல்ல தந்தையாக இருக்க வேண்டும்.நல்ல குடும்பத் தலைவராக இருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் தமிழகத்தின் தலைவராக வரமுடியும். அப்படிப்பட்டவர்களைத்தான் தமிழக மக்கள் ஏற்பார்கள்" என்று தெரிவித்தார்.

சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு குதிரைபேர அரசு இருக்கிறது. கமலை விமர்சிப்பதற்கு ஊழல் அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பாரதிய ஜனதாக் கட்சியினர் கமல்ஹாசனின் அரசியல் தொடர்பான விமர்சனங்களைக் கடுமையாக எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தித் திணிப்பை எதிர்ப்பவர் எதற்காக இந்திப் படங்களில் நடித்தார் என பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டிருக்கிறார்.

"இந்தித் திணிப்பு எதிர்ப்புதான் உங்கள் அரசியலின் ஆரம்பம் என்றால், இந்திப் படத்தில் நடித்திருக்கக்கூடாது. வாழ்கையையே நீங்கள் இந்தித் திரைப்படங்களில்தான் தேடிக்கொண்டீர்கள். இன்று அவர் பேசுவது, விளம்பரத்திற்காகவோ அல்லது இன்றைய களம் நம்மை முதல்வராக்கிவிடுமோ என்ற கனவில்தான் பேசுகிறார். அவர் வந்துதான் தமிழக அரசியலைக் காப்பாற்ற வேண்டுமென்பதில்லை" எனக் கூறியிருக்கிறார் அவர்.

பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜாவை எலும்பு நிபுணர் என்று கமல் விமர்சித்திருந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, கமல் என்றைக்காவது தி.மு.கவின் ஊழல் குறித்துப் பேசியிருக்கிறாரா என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று பேசியவர் எப்படி தமிழக முதல்வராக முடியும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைப் போல கமல் பேசுவதாகவும் ராஜா கூறினார்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். நீண்ட காலம் அரசியலில் இருப்பவர்கள்கூட கமல்ஹாசனை எதிர்ப்பது ஆச்சரியமளிப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று கமல்ஹாசனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியனர். ஊழல் புகார் எழுந்துள்ள அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென அவர்கள் கோரினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்