You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சச்சின் டெண்டுல்கரின் 'தமிழ் தலைவாஸ்' கபடி குழுவின் விளம்பரத் தூதரானார் கமல்ஹாசன்
ப்ரோ கபடி லீக் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் சச்சின் டெண்டுல்கருக்குச் சொந்தமான தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதராக நடிகர் கமல்ஹாசன் பொறுப்பேற்றிருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் பாணியில், கபடி விளையாட்டிற்காக 2014ஆம் ஆண்டில் ப்ரோ கபடி பந்தையம் உருவாக்கப்பட்டது. இதில் அப்போது எட்டு அணிகள் பங்கேற்றன. 2017ஆம் ஆண்டில் புதிதாக ஹரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ், யுபி யோதா என நான்கு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
ஜூலை 28ஆம் தேதியன்று ப்ரோ கபடி லீக் போட்டிகள் துவங்கவிருக்கும் நிலையில், 'தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பரத் தூதராக தற்போது கமல் ஹாசன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து தமிழ் தலைவாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது முன்னோர்கள் உருவாக்கிய விளையாட்டை துலக்கமாக தெரிய செய்வதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பெருமைதான். இந்த அணியின் உரிமையாளர்கள் என்னைத் தேர்வுசெய்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி" என கமல் ஹாசன் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சபாஷ் நாயுடு என்ற படத்தில் நடித்துவந்த கமல்ஹாசனுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் விபத்து நேர்ந்தது. அதற்குப் பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போனது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் பொறுப்பேற்றார். தொடர்ந்து விளம்பரப் படங்களிலும் கமல் நடித்துவருகிறார். கமல் கௌரவ வேடத்தில் நடித்த மீன் குழம்பும் மண் பானையும் படத்திற்குப் பிறகு புதிய படம் ஏதும் வெளியாகவில்லை. தற்போது சபாஷ் நாயுடு, விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன.
தற்போது சினிமாவுக்கு வெளியில்தான் கமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும் சபாஷ் நாயுடு படம் விரைவில் துவங்கப்படுமென கமல் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தனது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க் கிழமையன்று கமல் வெளியிட்ட செய்தி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
"அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்" என்று ஒரு ட்விட்டர் செய்தியும் அதன் பிறகு, "இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை, துடித்தெழுவோம் உம்போல் யாம் மன்னரில்லை, தோற்றிறந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர், அடிபணிவோர் அடிமையரோ, முடிதுறந்தோர் தோற்றவரோ, போடா மூடா எனலாம் அது தவறு, தேடாப் பாதைகள் தென்படா, வாடா தோழா என்னுடன், மூடமை தவிர்க்க முனைவரே தலைவர், அன்புடன் நான்" என்று ஒரு செய்தியும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.
'புரியாதவர்களுக்கு ஆங்கிலப் பத்திரிகைகளில் நாளை வரும் செய்தி' என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக சர்ச்சை எழுந்தபோது, செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிலவுவதாக கூறினார். கமல்ஹாசனின் இந்த விமர்சனத்திற்கு அமைச்சர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினர். சில அமைச்சர்கள் ஒருமையிலும் கமலை விமர்சித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்