You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இறந்துபோன மகனின் இதயம் நேரில் வாழ்த்த திருமணம் செய்துகொண்ட தாய்
பெக்கி துர்னேயின் வருங்கால கணவர் திருமண நாளன்று மனைவிக்கு இதயப்பூர்வமாக ஒரு பரிசு கொடுக்க விடும்பினார். அவர் கொடுத்த பரிசு இதுவரை யாரும் கொடுக்காத மிகச் சிறப்பு வாய்ந்த பரிசு.
கடந்த வாரம் அலாஸ்காவில் நடைபெற்ற திருமணத்திற்கு பெக்கியின் இறந்துபோன மகன் டிரிஸ்டன் வருவது அசாத்தியமானது என்றாலும், அவருடைய இதயம் நேரில் வந்து வாழ்த்தி, தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
2015இல் எதிர்பாராதவிதமாக 19 வயது டிரிஸ்டன் இறந்துபோனார். டிரிஸ்டனின் இதயம் பொருத்தப்பட்டவரை அதுவரை நேரில் பார்த்திராத பெக்கியை சந்திக்க வைத்து உலகில் யாராலும் கொடுக்க முடியாத பரிசை கொடுத்தார் மணமகன் கெல்லி.
"எனது மனைவிக்கு திருமண நாளில் பரிசு கொடுக்க விரும்பினேன், ஜாகப்புடன் நான்கு-ஐந்து மாதங்களாக தொடர்ந்து பேசி ஏற்பாடு செய்தேன்" என்கிறார் கெல்லி.
"உறுப்பு தானம் செய்வதற்கு அனைவருக்கும் ஊக்கமளிக்கிறோம். உயிர்களை காப்பாற்றும் உறுப்பு தானம், வாழ்க்கையையே மாற்றியமைக்கிறது" என்கிறார் கெல்லி.
40 வயதான பெக்கி, தனது மகனின் இதயத்துடிப்பை ஒரு ஸ்டெதஸ்கோப் மூலம் தனது திருமண நாளன்று கேட்டார். "நம்பமுடியாத, இதயத்தை நெகிழவைத்த, உணர்ச்சிகரமான தருணம் இது" என்று பிபிசியிடம் பேசிய ஜாகப் கூறினார்.
"ஒட்டுமொத்தமாக அனைவரின் அன்பும் கிடைத்தது, இரு குடும்பங்களும் ஒன்றாக இணைந்த தருணம் அது. நானும், பெக்கியும் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். இப்போது அலாஸ்காவில்தான் இருக்கிறேன்" என்று ஜாகப் சொல்கிறார்.
திருமண நாளுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு இதயத்துடிப்பை கேட்டதுதான் என்று பெக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.
"வாழ்க்கையில் எதிர்பாராத ஆச்சரியம் இதுதான். டிரிஸ்டனின் இதயத்தை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு நன்றி, என்னைப் பார்ப்பதற்காக இங்கு வந்ததற்கு நன்றி ஜாகப்" என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் பெக்கி,
திருமணத்தில் டிரிஸ்டனுக்காக ஒரு காலி நாற்காலி வைக்கப்பட்டிருந்தது. அதில், "உன் திருமணத்தின்போது நான் சொர்க்கத்தில் இருக்கிறேன், என்ன செய்வது? பூமிக்கு வந்து உன்னுடன் இருப்பேன். எனக்காக ஒரு இருக்கையை ஒதுக்கி வையுங்கள், ஒரு காலி நாற்காலி. அதில் அமர்ந்திருக்கும் என்னை பார்க்கமுடியாவிட்டாலும், நான் அங்கு வியாபித்திருப்பேன்" என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
இதயத்தை தனக்கு கொடுத்த பெக்கியின் திருமணத்திற்காக கலிஃபோர்னியாவில் இருந்து மூன்றாயிரம் கிலோமீட்டர் தொலைவு பயணித்து வந்து பெக்கிக்கு மகிழ்ச்சியை பரிசளித்திருக்கிறார் ஜாகப்.
பெக்கி-கெல்லி திருமண புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகி, பிற உறுப்பு தான நன்கொடையாளர்களின் மனதை தொட்டது.
"பிற குடும்பங்களுக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி. மாற்று இதயம் பொருத்தப்பட்ட ஒரு சிறுவனின் தாய் நான்" என்று ஒரு ஃபேஸ்புக் மூலமாக ஒரு பெண் பெக்கிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
"உங்கள் உயிருக்குயிரான மகனை இழந்ததற்கு வருத்தப்படுகிறேன். உண்மையில், பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழ்க்கையே வீழ்ந்த நிலையிலும், பிறருக்கு உயிர் கொடுக்கவும், வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கவும் உறுப்புகளை தானம் செய்ததற்கு நன்றி".
"ஒரு தாய்க்கு நன்றி சொல்லும் மற்றொரு தாய். நன்றி".
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்