மனைவியின் படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு சிக்கலில் மாட்டிய இர்ஃபான் பதான்

இந்திய கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் தனது மனைவியுடனான புகைப்படத்தை சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்தது சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனம் மற்றும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

இர்ஃபான் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது மனைவி தனது முகத்தை மறைத்தவாறு தோன்றுகிறார். அவரது கை விரல்களில் நகப்பூச்சு இட்டிருப்பது அப்புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.

இந்தப் புகைப்படம் சமூகவலைத்தங்களில் வெளியானவுடன் பலர் இதுகுறித்து ஆவேசமாக எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர். சிலர் சமூகவலைத்தங்களில் இர்ஃபான் பதானை விமர்சிக்கவும், இஸ்லாம் குறித்த பார்வை குறித்து பாடம் எடுக்கவும் தொடங்கினர்.

பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் இர்ஃபான், "இந்தப் பெண்ணுக்கு சிக்கல் #அன்பு #wifey." என்று வேடிக்கையாக எழுதியிருக்கிறார்.

பேஸ்புக்கில் 3846 முறை பகிரப்பட்டிருக்கும் இந்த பதிவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கருத்துக்களை பதிவிட்டிருக்கின்றனர்.

'இஸ்லாமுக்கு ஏற்றதில்லை'

ஷேக் அலீம் என்பவர் இர்ஃபானின் பதிவுக்கு எழுதியுள்ள பதிலில், "டியர் படான், புகைப்படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், உங்கள் மனைவி நகச்சாயம் பூசியிருக்கக்கூடாது. இஸ்லாமிற்கு இது ஏற்றதில்லை. நான் சொல்வதை புரிந்துக் கொள்ள முயற்சியுங்கள்." என்று தெரிவித்துள்ளார்.

முஹமத் ஜஹாங்கீர் ஆலம் என்ற பேஸ்புக் பயன்பாட்டாளர் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், ''எனது சகோதரரே! உங்கள் நலம் விரும்பியாக இதை கூறுகிறேன். உங்கள் மனைவியின் புகைப்படத்தை நீங்ககள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருக்கக்கூடாது. நகச்சாயம் இடுவது இஸ்லாத்தில் ஹராம் (உகந்தது அல்ல)'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நஜில் கான் என்ற டிவிட்டர் பயன்பாட்டளர், ''மிகவும் அழகான தம்பதியர். நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு வெளியிட்டுள்ளனர். நீங்கள் இருவரும் அழகான ஜோடி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2016 டிசம்பரில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, `அழகான நேரங்கள்' என வர்ணித்திருந்தார்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து வெளியிட்டனர். அதில், இஸ்லாத்தைப் பின்பற்றுமாறும், அவரது மனைவி ஹிஜாப் மற்றும் நாகரீகமான உடை உடுத்துவதை உறுதிப்படுத்துமாறும் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, "எனது குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது எனக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷமியின் சமூக வலைத்தள பதிவுகளில் கருத்துக்களை வெளியிட்டிருப்போரை, கிரிகிக்கெட் வீரர் முகமது ஃகைப் உள்ளிட்ட பலர் விமர்சித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்