You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குறுஞ்செய்திகளை அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி!
உங்கள் வாழ்க்கைத்துணையின் குறுஞ்செய்திகளை அலட்சியப்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை! அது நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிரான சாட்சியாக மாறலாம்.
தான் அனுப்பிய குறுஞ்செய்திகளை கணவன் படிக்காததை ஆதாரமாக காட்டி, கணவன் தன்னை உதாசீனப்படுத்தனார் என்பதை நிரூபித்து விவாகரத்து பெற்றார் தாய்வானைச் சேர்ந்த ஒரு பெண்.
குறுஞ்செய்திகளை கணவர் திறந்து பார்த்ததை 'லைன்' செயலி காட்டினாலும், அவர் பதில் அனுப்பவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்டது. மனைவிடம் கணவர் அலட்சியமாக நடந்துகொண்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவாகத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
'வாட்ஸ் ஏப்' மற்றும் 'லைன்' போன்ற ஊடக செய்திகளுக்கான செயலிகளில், செய்தி அனுப்பப்பட்டதை "சாம்பல் நிற" குறியீட்டாலும், செய்திகள் படிக்கப்பட்டதை "நீல நிற" குறியீட்டாலும் தெரிந்து கொள்ள முடியும்.
விவாகரத்துக் கோரிய பெண்ணின் மணவாழ்க்கை 'சீர்படுத்த முடியாத நிலையை' கடந்து விட்டதை அலட்சியப்படுத்தப்பட்ட 'லைன்' செய்திகள் வெளிப்படையாக காட்டுவதால், விவாகரத்து வழங்கப்படுவதாக, சின்ச்சு மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
லின் என்ற அந்தப் பெண், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட செய்தி உட்பட, அவர் ஆறுமாதமாக அனுப்பிய எந்தவொரு குறுஞ்செய்திக்கும் அவரது கணவன் பதிலளிக்கவில்லை என்று நீதிபதி கோ தெரிவித்தார்.
மற்றொரு செய்தியில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அந்த பெண், தான் அனுப்பும் செய்திகளுக்கு ஏன் பதிலளிக்கவில்லை என்றும் கணவரிடம் கேட்டிருக்கிறார்.
மருத்துவமனைக்கு சென்ற கணவன், ஒருமுறை மனைவியை பார்த்து வந்ததாக கூறியபோதும், தொடர்ந்து மனைவியின் குறுஞ்செய்திகளை அலட்சியப்படுத்தியதை நீதிமன்றம் கண்டறிந்தது.
மனுதாரரைப் பற்றி எதிர்தரப்பினரான கணவர் விசாரிக்கவில்லை என்றும், தொடர்ந்து அவர் அனுப்பிய தகவல்களை அலட்சியப்படுத்தியதால் விவாகரத்து வழங்கலாம் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மனைவிக்கு விபத்து நேர்ந்த ஓரிரு மாதங்களில் கணவர் ஒரு சுருக்கமான செய்தியை அனுப்பியிருக்கிறார்.
"அவர்களுடைய நாயை பற்றி குறிப்பிட்டிருந்த அந்த குறுஞ்செய்தியில், மனைவியைப் பற்றி எந்தவித அக்கறையையும் கணவர் காட்டவில்லை, விபத்து பற்றி எதுவும் விசாரிக்கவில்லை" என்று நீதிபதி கயோ தெரிவித்தார்.
"மனுதாரரிடம் மிகக்குறைந்த அளவு தொடர்பையே கொண்டிருந்த பிரதிவாதி, மனைவியின் தகவல்களுக்கு அரிதாகவே பதில் அனுப்பியிருக்கிறார்."
இந்த தம்பதியினர் 2012 இல் திருமணம் செய்துக் கொண்டனர். மனைவிக்கு அது இரண்டாவது திருமணம். 50 வயது என்பதும் கணவரின் வயது 40 என்பதும், அவர்கள் திருமண உறவில் ஏற்பட்ட கூடுதல் பிரச்சனைகளுக்கான காரணம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மாமியார், மைத்துனர், நாத்தனார் கொண்ட கணவரின் குடும்பத்திற்கு வந்தபிறகு, குடும்பத்தின் அனைத்துச் செலவுகளையும், கட்டணங்களையும் மனைவியே செலுத்தினார். மாமனாரின் வரிகளை செலுத்துவதற்காக, கடன் வாங்குமாறு மாமியார், மருமகளிடம் சொன்னாராம்.
கணவருக்கு நிரந்தர வருமானம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
கணவன் குடும்பத்தினர், மருமகளிடம் அன்பாக நடந்துக் கொள்ளவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
குடும்பத்தில் அந்தப்பெண்ணுக்கு மிகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாக கூறிய நீதிபதி, அவரின் குறுஞ்செய்திகளுக்கு நீண்டகாலமாக பதிலளிக்காமல் இருந்தது புறக்கணிப்பின் உச்சம் என்றும் தெரிவித்தார்.
"இயல்பான தம்பதியினரிடையே இந்த அளவு அலட்சியமோ, புறக்கணிப்போ இருக்காது… 'லைன்' செயலியின் குறுஞ்செய்தி இந்த வழக்கில் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அவர்கள் தாம்பத்யத்தின் ஒட்டுமொத்த நிலையை எடுத்துக்காட்டுவதற்கு இதுவே போதுமானது… இருவருக்கும் இடையே இயல்பான பேச்சுவார்த்தை இல்லை" என்று நீதிபதி குறிப்பிட்டார்.
தீர்ப்பின் பிரதி கிடைத்ததும், லின்னின் கணவர் மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அதற்கான சாத்தியங்கள் குறைவு.
பிரதிவாதியான அந்த நபர், நீதிமன்ற விசாரணைக்கு ஒருமுறை கூட வரவில்லை என்றும், நீதிமன்றத்தின் எந்தவொரு நோட்டீசுக்கும் பதிலளிக்கவில்லை என்றும் நீதிபதி காவ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் அந்த குறுஞ்செய்திகளை உண்மையிலேயே படித்தாரா என்று நீதிமன்றமும் உறுதியாக சொல்லமுடியாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்