மனைவியின் உடையால் சமூக ஊடகங்களில் சர்ச்சை: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசம்

சமூக ஊடகங்களில், தனது மனைவியின் உடை குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தனது மனைவியின் புகைப்படத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த ஷமி, `அழகான நேரங்கள்' என வர்ணித்திருந்தார்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து வெளியிட்டனர். அதில், இஸ்லாத்தைப் பின்பற்றுமாறும், அவரது மனைவி ஹிஜாப் மற்றும் நாகரீகமான உடை உடுத்துவதை உறுதிப்படுத்துமாறும் குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்து, திங்கள்கிழமை கருத்து வெளியிட்டுள்ள முகமது ஷமி, "எனது குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது எனக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உடல் அழகை வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிய மனைவியை அனுமதித்திருப்பது "வெட்கக்கேடானது" என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

"வெட்கக் கேடானது. ஒரு முஸ்லிமாக, உங்கள் மனையியை பர்தா அணியச் சொல்லுங்கள். மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்," என்று ஒருவர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள ஷமி, "எனது குழந்தையும், மனைவியும் என் வாழ்க்கைப் பங்காளர்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது எனக்குத் தெரியும். நாம் எவ்வளவு நல்லவர்கள் என்பதை, நாம் ஒவ்வொருவரும் உள்ளுக்குள் எப்படி இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷமியின் சமூக வலைத்தள பதிவுகளில் கருத்துக்களை வெளியிட்டிருப்போரை, கிரிகிக்கெட் வீரர் முகமது ஃகைப் உள்ளிட்ட பலர் விமர்சித்துள்ளனர். "அந்தக் கருத்துக்கள் மிக மிக வெட்கக்கேடானவை. முகமது ஷமியை முழுமையாக ஆதரிக்கிறேன். நாட்டில் எவ்வளவோ முக்கிய விடயங்கள் இருக்கின்றன," என்று முகமது ஃகைப் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.