'பேச்சாற்றல், நீண்ட அரசியல் அனுபவம், சர்ச்சை கருத்துக்கள்' - வெங்கைய நாயுடு யார்?

ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு அக்கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ணகாந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜகவின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 68 வயதாகும் வெங்கைய நாயுடு, பாஜகவின் தென்னிந்திய முகம் என்றறியப்படுபவர். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூரை சேர்ந்தவர்.

ஆந்திர பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்த போதே அரசியல் ஆர்வம் கொண்ட வெங்கைய நாயுடு ஆரம்பத்தில் ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட்டார்.

ஆந்திர சட்டமன்றத்துக்கு இருமுறை தேர்வு

நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 1978 மற்றும் 1983 ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வெங்கைய நாயுடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1978-ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஜனதா கட்சியின் சார்பிலும், 1983-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980-85 காலகட்டத்தில் ஆந்திர மாநில பாஜக சட்டமன்ற கட்சித்தலைவராக வெங்கைய நாயுடு பதவி வகித்தார்.

சிறந்த பேச்சாளராக அறியப்படும் வெங்கைய நாயுடு, நீண்ட நாடாளுமன்ற மற்றும் அரசியல் அனுபவம் கொண்டவர். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய தலைவராக வெங்கைய நாயுடு பொறுப்பேற்றார். பின்னர், 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போட்டியின்றி பாஜக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று பதவி விலகினார்.

வாஜ்பாய், மோதி அமைச்சரவைகளில் வெங்கையா நாயுடு

2014-ஆம் ஆண்டு நரேந்திர மோதி பிரதமராக பதவியேற்ற பின்னர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக வெங்கைய நாயுடு பதவியேற்றார். பின்னர், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தகவல் ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சராக வெங்கைய நாயுடு பதவி வகித்து வருகிறார்.

முன்னதாக, கடந்த 2000-ஆவது ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக வெங்கைய நாயுடு பதவி வகித்தார்.

நாடாளுமன்ற விவாதங்களில் கட்சி மற்றும் ஆட்சியின் சார்பாக பலமுறைகள் சிறப்பாக உரையாற்றியது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முனைப்பாக செயல்பட்டது, கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக செயல்பட்டபோது தீவிரமாக பணியாற்றியது ஆகியவை வெங்கைய நாயுடுவுக்கு சிறப்பான பெயரைப் பெற்றுக் கொடுத்தது.

சர்ச்சைகள்

கடந்த மே மாதத்தில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனிருக்க, மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த வெங்கய்ய நாயுடு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழக தலைமை செயலகத்தில் வெங்கைய நாயுடு நடத்திய ஆய்வு, மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல் என்று பல எதிர்க்கட்சித் தலைவர்களாலும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்றும், இந்தி கற்காமல் இந்தியா முன்னேற முடியாது என்றும் கடந்த ஜூன் மாதத்தில் வெங்கைய நாயுடு தெரிவித்த கருத்து குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் சர்ச்சையை உருவாக்கியது. சமூக வலைத்தளங்களில் வெங்கைய நாயுடுவின் கருத்து பரவலாக விமர்சிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி என்பது தற்போது ஒரு நாகரீகமாகிவிட்டது. மிகவும் தீவிரமான மற்றும் தவிர்க்க முடியாத கட்டங்களில் மட்டுமே கடன் தள்ளுபடி என்ற முடிவை எடுக்க வேண்டும் என்று அண்மையில் வெங்கைய நாயுடு தெரிவித்த கருத்து, விவசாய ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் விமர்சிக்கப்பட்டது.

வெங்கையாவுக்கு வாய்ப்பு ஏன்?

அரசு மற்றும் நாடாளுமன்ற நடைமுறைப்படி இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் தலைவராக துணை குடியரசுத் தலைவர் இருப்பார்.

தற்போதுள்ள சூழலில், மாநிலங்களவையில் பாரதீய ஜனதா கட்சிக்குகு பெரும்பான்மையில்லாத சூழலில், தங்கள் கட்சியின் சார்பாக நீண்ட அரசியல் மற்றும் நாடாளுமன்ற அனுபவம் கொண்டவர் என்பதாலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நன்கு அறிந்தவர் என்ற முறையிலும் பாஜகவின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கைய நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்