You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் சசிகலா விவகாரம்
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை என்றும் அதிகாரிகளுக்கு இடையிலான மோதலில் சசிகலா குறிவைக்கப்படுவதாகவும் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.
சசிகலாவுக்கான வசதிகள் குறித்து தகவல் அளித்ததாக கருதப்படும் கைதிகள் தாக்கப்பட்டதாக தங்களுக்குப் புகார் வந்திருப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு, அந்தச் சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டினார்.
சசிகலா தங்குவதற்கு, யோகா செய்வதற்கு, பொருட்களை வைப்பதற்கு, பார்வையாளர்களைச் சந்திக்க என ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டதாகவும் அவருக்கென தனியாக சமையலறை உருவாக்கப்பட்டு, அங்கு சிறைக் கைதிகளை வைத்து பிரத்யேகமாக உணவு சமைத்துத் தரப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், புதிய கட்டில், மின் விசிறி, வாட்டர் ஹீட்டர், காஃபி மேக்கர், டிவி என பல வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
சிறைத் துறை டிஜிபி சத்யநாராயண ராவ் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த வசதிகளைச் செய்து தந்ததாக ரூபா குற்றம் சாட்டினார். ஆனால், சத்ய நாராயண ராவ் இதனை மறுத்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் அகில இந்திய அளவில் பரபரப்புக்குள்ளானது. இது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் சங்கடத்தை உருவாக்கவே, இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் கடந்த 14-ஆம் தேதியன்று விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, 15-ஆம் தேதி சிறைக்கு விஜயம் செய்த டி.ஜி.பி சத்யநாராயணா, சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வசதிகளை திரும்பப் பெற்றதோடு, அதற்கான ஆதாரங்களையும் அழித்ததாக கூறப்படுகிறது. இதற்கு சில மணி நேரத்தில் டிஐஜி ரூபா மீண்டும் சிறையை ஆய்வு செய்து புதிய அறிக்கை ஒன்றை அளித்தார். அதில், தன் குற்றச்சாட்டு தொடர்பான ஆதரங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட டிஐஜி ரூபாவும் டிஜிபி சத்ய நாராயண ராவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். ரூபா போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சத்ய நாராயணா ஓய்வுபெற சில நாட்களே இருக்கும் நிலையில் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பரப்பன அக்ரஹார சிறையின் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமாரும் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். தற்போது சிறைத்துறை டி.ஐ.ஜியாக, எச்.எஸ். ரேவண்ணா நியமிக்கப்பட்டிருக்கிறார். சிறைத் துறை கண்காணிப்பாளர் பொறுப்பையும் கூடுதலாக ரேவண்ணா கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
இந்தச் சூழலில், பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 பெண் கைதிகளும் 17 ஆண் கைதிகளுமாக மொத்தம் 32 கைதிகள் அங்கிருந்து பெல்லாரி, மைசூர், பெலகவி, தவனகிரி சிறைகளுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாகவும் புகார்கள் வந்திருப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி கர்நாடக மாநில தலைமைச் செயலரிடம் கோரியிருக்கிறது மனித உரிமை ஆணையம்.
இந்த நிலையில்தான் ஜூலை பதினெட்டாம் தேதியன்று, சசிகலாவும் அவருடன் அதே வழக்கில் தண்டிக்கப்பட்ட இளவரசியும் சிறையில் உலாவும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாயின. அந்த வீடியோவில் சசிகலா சுடிதாரும் இளவரசி சேலையும் அணிந்துள்ளனர். சசிகலா கையில் பையுடன் அங்குமிங்கும் நடமாடுவதோடு இளவரசியுடன் உரையாடுகிறார். இந்தக் காட்சிகள் கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் இன்று ஊடகங்களிடம் பேசிய அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி எந்த வசதிகளும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்